Search This Blog

18.2.10

பொருளாதார ஏற்றத் தாழ்வு ஒழிக்கப்பட ஜாதி ஒழிப்பு அவசியம்


இரு தலைவர்கள்

திராவிட இயக்கத்திற்குக் கால்கோள் நாட்டிய சின்னக்காவனம் (சி) நடேசனார் அவர்கள் நினைவுநாள் இந்நாள் (1937).

1912ஆம் ஆண்டு மெட்ராஸ் யுனைட்டெட் லீக் என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டு அதன் செயலாளராகவும் அவர் இருந்தார்.

தன்னுடைய சொந்த முயற்சியில், சொந்த செலவில், சொந்த இடத்தில் இத்தகைய அமைப்பு நடத்தியவர் இவர். 1913 இல் அந்தச் சங்கத்தின் பெயர் திராவிடர் சங்கமாக மாற்றப்பட்டது.

பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் சென்னையில் தங்கிப் படிக்க வேண்டுமானால் அவர்களுக்கு விடுதிகள் கிடையாது. பார்ப்பனர்கள் நடத்தும் விடுதிகளில் பார்ப்பனர் அல்லாதார் தங்கிட அனுமதியில்லை. வேண்டுமானால் எடுப்புச் சாப்பாடு வாங்கிக்கொள்ளலாம்.

(அன்றைய மவுண்ட் ரோடு, ஜியார்ஜ் டவுனில் உள்ள பார்ப்பனர் உணவு விடுதிகளில் தொங்கும் விளம்பரப் பலகையில் பஞ்சமர்களும், நாய்களும், பெருவியாதியஸ்தர்களும் உள்ளே பிரவேசிக்கக்கூடாது என்று எழுதப்பட்டு இருந்தது என்பதை நினைக்கத் தக்கதாகும். குடிஅரசு, 25.5.1935)

இந்த நிலையில் பார்ப்பனர் அல்லாதார் சென்னையில் தங்கிப் படிக்க ஒரு விடுதியினை (திராவிடர் சங்க விடுதி (DRAVIDIAN ASSOCIATION HOSTEL) ஒருவர் தொடங்கினார் நடத்தினார் என்றால் அது சாமானிய மானதுதானா? பார்ப்பனர் அல்லாத படித்த மக்கள் மனம் என்னும் மேடையில் சிம்மாசனம் அமைத்து, அவரை அமர வைத்துப் போற்ற வேண்டும் அல்லவா!

சென்னை சட்டமன்றத்தில் அவரால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை (5.2.1921) இன்று நினைத்துப் பார்த்தாலும், அவரின் சமூகநீதிச் சாசனம் மணியாய் ஒலிக்கும்.

அவரவர்களுக்குக் கிடைக்க வேண்டிய விகிதாச்சார உரிமை கிடைக்கும் வரையில் இனிமேல் அரசாங்க உத்தியோகங்கள் யாவும் பார்ப்பனர் அல்லாதாருக்கே கொடுக்க வேண்டும் என்றும், எல்லா டிபார்ட்டுமென்டுகளிலும், எல்லாவிதமான கிரேடு உத்தியோகங்களும் பார்ப்பனர் அல்லாதாருக்கு கொடுக்கப்பட வேண்டும் என்றும் இந்தக் கவுன்சில் அரசாங்கத்திற்கு சிபாரிசு செய்கிறது என்பது தான் அந்தத் தீர்மானம்.

நடேசனார் சட்டமன்றத்தில் 1920_26, 1935_1937 கால கட்டங்களில் இறக்கும் வரை உறுப்பினராக இருந்த பெருமைக்குரியவர் ஆவார்.

சி.நடேசனார் அவர்களின் நினைவுநாள்தான் சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலரின் பிறந்தநாள் (1860).

இந்தியாவில் பொதுவுடைமைக் கட்சிக்கு வித்திட்டவர். தந்தை பெரியாரின் நண்பர் அவரின் சிந்தனைமிகு கட்டுரைகளை தாம்நடத்திய குடிஅரசு இதழ் மூலம் எழுதும் வாய்ப்பினை தந்தார் தந்தை பெரியார். தமது கருத்துக்கு மாறாக அவரால் எழுதப்பட்ட கட்டுரைகளையும் குடிஅரசில் இடம் அளித்த சான்றாண்மை தந்தை பெரியார் அவர்களுக்கு உண்டு.

பொருளாதார ஏற்றத் தாழ்வு ஒழிக்கப்பட ஜாதி ஒழிப்பு அவசியம் என்ற கருத்தைச் சொன்ன பொதுவுடைமைவாதி அவர்.

மே தினத்தை 1923ஆம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தியவரும் அவரே.

இவ்விரு பெருமகனார்களையும் நன்றியுடன் நினைவு கூர்வோம்.


------------- மயிலாடன் அவர்கள் 18-2-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: