Search This Blog

3.2.10

டாக்டர் அம்பேத்கரின் ஆசைகள் - சமூக ஜனநாயகம் இருக்கிறதா?


டாக்டர் அம்பேத்கரின் ஆசைகள்
சமூக ஜனநாயகம் இருக்கிறதா?

(அவுட்லுக் வார ஏட்டில் (Ambedkar’s Desiderata) எனும் தலைப்பில் புகழ்பெற்ற வரலாற்றுப் பேராசிரியர் ராமச்சந்திர குகா எழுதிய கட்டுரையின் முக்கிய பகுதிகள், இந்தியக் குடியரசின் 60 ஆம் ஆண்டு நிறைவையொட்டி தமிழில் தரப்படுகிறது.

அரசியல் நிர்ணய சபையில் உறுப்பினராக இருந்த ஆதிவாசிப் பிரதிநிதி (எஸ்.டி.) ஜெய்பால் சிங் முண்டா என்பவர் பேசிய பேச்சில், சிந்து வெளி நாகரிகம் பற்றியும் தாம் அதன் சொந்தக்காரர் என்றும் பெருமைப்படப் பேசி, ஆரியர்கள் நிறைந்திருந்த அந்த சபையில் அவர்களை வந்தேறிகள் (Intruders) என்று குறிப்பிட்டிருப்பது இன்றைக்கும், தேவைப்படும் கருத்தாக உள்ளது.)

...அண்மைக் காலங்களில் அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகப் பாடுபட்டவர் என்ற அளவில் மட்டுமே அறியப்படுகிறார். ஒடுக்கப் பட்டோர் மனதில் ஓர் உயர்வான கவுரவம் ஏற்படுவதற்கு அவர் காரணம் என்பதை மறுக்க இயலாது. போர்க்குணம் மிக்க தாழ்த்தப்பட்டவராக மட்டும் அவர் இருக்கவில்லை; அவர் அறிவுக்கூர்மையுள்ள ஜனநாயகவாதி. ஜாதி, மத வேற்றுமை ஏதுமின்றி எல்லா இந்தியர்களாலும் நன்மை பெறும் நோக்குடன் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியவை அவருடைய வாழ்வும் சிந்தனையும்.

இந்தியக் குடியரசின் 60 ஆம் ஆண்டு நிறைவு விழா கடந்த வாரம் கொண்டாடினோம். நம் குடியரசின் அரசமைப்புச் சட்டத்திற்காக அதனை மேற்பார்வையிட்ட அம்பேத்கர் அவர்களுக்குக் கடமைப்பட்டுள்ளோம். அரசியல் நிர்ணய சபையின் கடைசிக் கூட்டத்தில் 1949 நவம்பர் 25 ஆம் நாள் பேசும்போது, அம்பேத்கர் மூன்று எச்சரிக்கைகளை விடுத்தார்; அவை இன்றைய காலகட்டத்திலும் இந்தியாவுக்குக் கட்டாயம் பொருந்தக் கூடியவையானவை.

முதல் எச்சரிக்கை: இரத்தம் சிந்தும் புரட்சிப் பாதையைக் கைவிடவேண்டும் என நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டார். நாடு அந்நிய ஆட்சிக் காலத்தில் இருந்தபோது வீதிக்கு வந்து போராடவேண்டியதும், வன்முறையைக் கையாளவேண்டியதும் கூட தேவை என்பதற்கு அடிப்படை உண்டு. ஆனால், சுதந்தரமான, இறையாண்மை மிக்க, மக்களாட்சிக் குடியரசு மலர்ந்துவிட்ட பிறகு, சட்டத்திற்குப் புறம்பான முறையில் அமையும் போராட்டங்கள் இருப்பதற்கு அடிப்படை நியாயமே கிடையாது. அவை (அராஜக) ஆட்சியற்ற அரசமைப்புக்கான இலக்கணப்படி இருக்கலாம்; அவை எவ்வளவு விரைவில் ஒழிக்கப்படுகின்றனவோ, அந்தளவுக்கு நமக்கு நன்மை தரக்கூடியவை என்றே அவர் எழுதினார்.

அதே சமயத்தில் நாட்டின் தேசியக் கட்சிகள் எனப்படுபவற்றின் செயல்பாடுகள் பற்றியும் கடும் அபிப்பிராயம் கொண்டிருந்தார். இறுதியாக, அரசியல் நிர்ணய சபையில் பேசும்போது, ஜான் ஸ்டூவர்ட் மில் (ஆங்கிலப் பகுத்தறிவாளர்) கூறிய கருத்தை எடுத்துக் கூறினார்:

எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் அவர் காலில் வீழ்வதும், தம் இயக்கத்தை சிறுமைப்படுத்தும் அளவுக்கு அவருக்கு அதிகாரங்களை அளிப்பதுமான செயல்களில் இந்தியர்கள் இறங்கக் கூடாது என்று குறிப்பிட்டார்!

நாட்டிற்காகத் தம் வாழ்நாளை அர்ப்பணித்த பெரிய மனிதர்களுக்கு நன்றி காட்டுவது தவறல்ல; ஆனால் அதற்கும் ஓர் எல்லை உண்டு என்று அவர் தெளிவாகக் குறிப்பிட்டார். பக்தி, வழிபாட்டு மார்க்கம், தனி நபர் வழிபாடு போன்றவை வேறெந்த நாட்டின் அரசியலைக் காட்டிலும் இந்திய அரசியலில்அதிக அளவில் காட்டப்படுகிறது என்ற காரணத்தால் அவர் மிகவும் கவலைப்பட்டார். மதத்தில் பக்தி முக்திக்கு வழி காட்டலாம். ஆனால், அரசியலில் பக்தியோ, தனிநபர் வழிபாடோ நிச்சயமாகத் தரத்தினைத் தாழ்த்தி, சர்வாதிகாரத்திற்கு இட்டுச் செல்லும் பாதையாகத்தான் அமையும் எனத் தெளிவாகத் தெரிவித்தார்.

இந்தச் சொற்களை உச்சரிக்கும் போது அம்பேத்கரின் மனதில், அப்போது கொல்லப்பட்ட மகாத்மா காந்தி தெய்வமாக்கப்பட்ட செயல் தோன்றி இருக்கலாம். பிற்காலத்தில் சிறிய காந்தி இதைவிடவும் மேலாகத் தெய்வம் ஆக்கப்படும் நிலை வரும் என்பதை அவர் ஊகித்திருக்க முடி யாது. 1970 களின் முற்பகுதியில் இந்தியா என்பது இந்திரா; இந்திராதான் இந்தியா என்று காங்கிரசுக்காரர்கள் பேசுவார்கள் என்பதையோ, அது நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தும் அளவுக்குச் சர்வாதிகாரத்தை அளிக்கப் போகிறது என்பதையோ, அம்பேத்கர் முன்கூட்டியே அறிந்திருக்க முடியாதுதான். ஒரு தலைமுறை கழிந்து அதே கட்சி, எல்லாவற்றிற்கும் மேலாக, நான்கு காந்திகளுக்குத் தன் மரியாதையைப் பங்குபோட்டுத் தருகிறது; அவர்களில் இரண்டு பேர் (இந்திரா; ராஜீவ்) இறந்து விட்டனர். இரண்டு பேர் (சோனியா, ராகுல்) உயிருடன் உள்ளனர்...

வன்முறைப் போராட்டங்களைத் தூண்டி விடும் கட்சிகள் ஜனநாயகத்திற்கு எதிரானவை என்பதைப் பற்றியும், அவைகளும் கூட பக்தி, தலைவர் வழிபாடு போன்றவற்றைக் கொண்டவையே என்பதைப் பற்றியும் அம்பேத்கர் எச்சரித்தார். அரசியல் குடும்பங்களின் செல்வாக்கு நமது பொது அமைப்புகளில் எந்த அளவுக்கு ஊடுருவி இருக்கின்றன என்பதையும் அவர் முன்பே உணர்ந்து அச்சம் தெரிவித்துள்ளார். புதுடில்லியில், அமைச்சர்கள், ஆளுநர்கள், அரசுத் துறைச் செயலாளர்கள் எல்லாமே அவர்-களின் தகுதிகளைப் பாராமல், அவர்களின் விசுவாசம், அடிவருடும் அளவு ஆகியவற்றின்-அடிப்படையிலேயே தெரிவு செய்யப்படுகிறார்கள்...

வாரிசு முறையிலான ஜனநாயகம் என்றுதான் இந்தியாவைக் கூறுகிறார்கள். தர்பார் ஜனநாயகம் எனக்கூறுவது கூட மிகப் பொருத்தமானதாக இருக்கும். இடைப்பட்ட வரலாற்றுக் காலத்திய அரச சபைகளைப் போலத்தான் தேசிய மாநிலத் தலை நகர்களில் செயல்பாடுகள் தோற்றமளிக்கின்றன. பொய்ச் செய்தி பரப்புவதும் சூழ்ச்சிகளும் பரவலாகக் காட்சியளிக்கின்றன. அரசுப் பணிக்கு ஆசைப்படுபவர்கள், ராஜா, ராணி அல்லது இளவரசர் ஆகியோரின் உள்-வட்டத்தில் நுழைந்தால்தான் அது கிடைக்கும் என்ற நிலை. அத்தகைய பதவிகளில் அமர்ந்திருப்பவர்கள் அந்த நாற்காலி மீது ஒரு கண்ணும், அதனைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவே அடிவருடுவதில் நாட்டமுமாகவே இருந்து வரும் நிலை.

இறுதியாக, மூன்றாவதாக, அம்பேத்கர் விடுத்த எச்சரிக்கை முக்கியமானது_- சமூக ஜனநாயகம் அடிப்படையாக அமையாத இடத்தில் அரசியல் ஜனநாயகம் நீண்ட நாள் நிலைக்க இயலாது என்றார். இந்தியாவில் சமத்துவமற்ற படிநிலைத் தன்மை சமூகத் தளத்தில் நிலவுகிறது; அதனால் சிலருக்கு உயர்நிலையும், மற்றவர்களுக்கு தாழ்வும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொருளாதாரத் தளத்தில், வெகு சிலர் ஏராளமான செல்வத்தில் திளைக்கவும் மிகப்பலர் மோசமான வறுமையில் வாடவும் அமைந்துள் சமூகத்தைப் பெற்றுள்ளோம். 1950 ஜனவரி 26 ஆம் நாள் இந்தியா அமைத்துக் கொண்ட அரசமைப்புச் சட்டப்படி, ஒரு மனிதன் ஒரு வாக்கு ஒரே மதிப்பு என்கிற இலட்சியத்தைத் தேர்ந்தெடுத்தது. ஆனாலும், நம் சமூகம் ஆழமான, ஏற்றத்தாழ்வான சமூகமாகவே நீடிக்கிறது; ஒரு மனிதன் ஒரே மதிப்பு என்பது மறுக்கப்படுகின்ற நிலையும் நீடிக்கிறது.

தரவு: அவுட்லுக் 10.2.2010 - தமிழில்: அரசு
- (தொடரும்) நன்றி:-”விடுதலை” -2-2-2010

0 comments: