Search This Blog

22.2.10

மதவாதிகளே பதில் சொல்லுங்கள்! -14


மதவாதிகளே, பதில் சொல்லுங்கள்!


அமர்தாசுக்கு அடுத்து குருவாக நியமிக்கப்பட்டவர் குரு ராம்தாஸ். இவர் குரு அமர்தாசின் மருமகன். தம் மனைவி பீபிபானி என்பவருக்குத் திருமணப் பரிசாகப் பேரரசர் அக்பர் வழங்கிய கிராமத்தில் ஒரு புதிய நகரை இவர் உருவாக்கினார். அதுதான் இன்றைய அமிருதசர். அவர் வெட்டிய குளம்தான் அமிருதசர் எனப்படுகிறது. பொற்கோயில் என்று அழைக்கப்படும் ஹர்பந்தர் சாகிப் குருத்வாரா அப்போது கட்டத் தொடங்கப்படவில்லை. குரு ராம்தாஸ் பொறுப்பு ஏற்று 7 ஆண்டுகளில் இறந்துவிட்டது ஒரு காரணம். (7 நாள்களில் கும்பகோணம் சங்கர மடத்தலைவர் இறந்து போனார் எனும்போது 7 ஆண்டுகளைப் பெரிதாக நினைக்க வேண்டும்.)

தம் இளைய மகன் அர்ஜன் தாஸ் என்பவரைத் தனக்குப் பிறகு குருவாக நியமித்தார் குரு ராம்தாஸ். குடும்பத் தலைமை தலைகாட்டத் தொடங்கிவிட்டது. இதனை குரு ராம்தாசின் மூத்த மகன் பிரீத்தி சந்த் ஏற்காமல் எதிர்க்கத் தொடங்கினார்.

இதைப் பற்றிக் கவலைப்படாமல் குரு அர்ஜன்தாஸ் ஹர்மந்தர் சாகிபைப் (பொற்கோயில்) கட்டும் பணியைத் தொடங்கினார். இப்பணியை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தவர் மியான் மிர் எனும் முசுலிம் பெரியவர். நான்கு பக்கங்களிலும் வாசல் வைத்துக் கட்டி யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் உள்ளே வரலாம் என்று திட்டம்.

குரு பதவி கிடைக்காத குரு அர்ஜன்தாசின் அண்ணன் பிரீத்தி சந்த் ஒரு காரியம் செய்தார். தாமே பாடல்கள் எழுதினார். அவற்றை (முதல்) குரு நானக் பாடியதாகப் பரப்பி அமிருதசர் வரும் பக்தர்களிடம் பரப்பி வந்தார். இதை அனுமதித்தால் கண்டதும் குருநானக் பெயரில் வந்துவிடும் என்று பயந்து குரு அர்ஜன்தாஸ், அதிகாரப் பூர்வப் பாடல்களைத் தொகுத்தார். நான்கு குருமார்களின் பாடல்களையும் சேர்த்து தாம் எழுதியவற்றையும் இணைத்து போற்றி என்றும் புனித எழுத்துகள்என்றும் கூறப்படும் தொகுப்பை இறுதி செய்தார். அன்றைய நாளில் பிரபலமாக இருந்த இந்து சாமிகளின் பாடல்கள், முசுலிம் புனிதர்களின் பாடல்கள் ஆகியவற்றையும் இதில் இணைத்திருந்தார். பிரீத்தி சந்த் சும்மா இருக்கவில்லை. முகலாயர்களின் நீதிமன்றத்தில் புகார் செய்தார். இந்து முசுலிம் இறைத் தூதர்களை இழிவு செய்யும் விதத்தில் பாடல்கள் இருப்பதாகப் புகார். பேரரசர் அக்பர் அந்த நூலைப் பார்வையிட்டு, அம்மாதிரி ஏதும் இல்லை என உணர்ந்தார்.

அக்பருக்குப் பின் அரசரான ஜஹாங்கீர் குரு அர்ஜன் சிங்கிற்குக் கட்டளை பிறப்பித்தார். புனித நூலில் இந்து, முசுலிம் மதங்களைப் பற்றிக் கூறப்பட்டு இருக்கும் கருத்துகளை நீக்கிவிடவேண்டும் என்று கட்டளை. குரு அர்ஜன்சிங் இதனை ஏற்க மறுத்தார். இதற்காகஅவருக்கு 2 லட்சம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது. குரு தண்டம் கட்டவில்லை. அரசு காஜி குருவை கைது செய்து கொடுமைப்படுத்தினார். தொடர்ந்த கொடுமைகளுக்குப் பிறகு ஆற்றில் குளிக்கப் போனவர் திரும்பவில்லை. மறைந்து விட்டார்.

ஜாதிகளை எதிர்த்துத் தொடங்கப்பட்ட சீக்கிய மதம் இன்று எப்படி உள்ளது? ஜாதிப் பிரிவினைகளைக் கொண்டிருக்கிற இரு மதங்களில் இந்து மதத்திற்கு அடுத்து சீக்கிய மதம் என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறதே! இந்து மதத்தைப் போலவே ஜாதிக் கொடுமைகளைத் தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்குச் செய்வதில் கொடி கட்டிப் பறக்கிறதே! நான்கு வாயில்கள் உள்ளன என்றாலும், எல்லா வாயில்களிலும் எல்லா ஜாதியினரும் உள்ளே வரலாம் என்ற அமைப்பில் குருத்வாராக்கள் கட்டப்பட்ட மதத்தில், தாழ்த்தப்பட்டோர் நுழைய முடியாத நிலை, நுழையாத நிலை உள்ளதே! தங்களை அவமானப்படுத்தும் வழிபாட்டு இடத்திற்கு வருவதற்கு மனம் இல்லாதவர்கள் தனிக் கட்டடம் கட்டிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது என்றால், இந்து மதம் போலவேதானே சீக்கியமும்? தங்களுக்கென தனி குருமார்களை உண்டாக்கிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது என்றால்... இந்து மதத்தை விட இந்த மதம் எந்த வகையில் உசத்தி? கடல் கடந்து வாழும் நாடுகளில் கூட, ஜாதி வேற்றுமை பாராட்டிக் கொலையும் செய்யும் நிலை இருக்கிறது என்று சொன்னால்... சமூகம் எங்கே ஒன்றாக இருக்கிறது?

அரசு ஆணை பிறப்பிக்கப்பட்ட பிறகும்கூட அதற்குப் பயந்து திருத்தப்படாத புனிதநூல் தாழ்த்தப் பட்டவர்களின் நலனுக்காகவும் உரிமைகளுக்கும் புதிதாக எழுதப்படும் நிலை தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்டிருக்கிறது என்றுதானே காட்டுகிறது?

மதவாதிகளே பதில் சொல்லுங்கள்!

-------------------------சு. அறிவுக்கரசு அவர்கள் “விடுதலை” 20-2-2010 இல் எழுதிய கட்டுரை

0 comments: