‘‘Who Killed Karkare’’
கர்கரேயைக் கொன்றவர்கள் உண்மையை, நியாயத்தைக் கொன்றவர்கள்
கொலையின் புதிரை விடுவித்தவர் நூலாசிரியர் முஷ்ரிஃப் அய்.பி.எஸ்.
தமிழர்தலைவரின் பாராட்டுகலந்த கருத்துரை
‘‘Who Killed Karkare’’ நூலைத் தமிழர் தலைவர் வெளியிட, கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை பெற்றுக்கொண்டார். வன்முறையின் மறுபெயர்தான் சங் பரிவார்க் கும்பல் நூலை வி.டி. ராஜசேகர் வெளியிட, எஸ்.எம். முஷ்ரிஃப் பெற்றுக்கொண்டார் (சென்னை, பெரியார் திடல், 2.02.2010).
நூலாசிரியர் எஸ்.எம். முஷ்ரிஃப் அவர்களுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசு வழங்குகிறார்.
மாலேகான் குண்டுவெடிப்புக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, அவர்களின் பின்னணி களையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த காவல்துறை அதிகாரி கர்கரே கொல்லப் பட்ட புதிரை விடுவிக்கும் நூல் ஒன்றை (Who Killed Karkare) எழுதிய, மகாராட்டிர மாநில முன்னாள் காவல்துறை அதிகாரி (அய்.ஜி.) எஸ்.எம். முஷ்ரிஃப் அவர்களைப் பாராட்டியும், நூலை அறிமுகப்படுத்தியும் சென்னைப் பெரியார் திடலில் நேற்று மாலை நடை பெற்ற சிறப்புப் பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர் கள் ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு:
இன்றைக்கு நாம் ஒரு துணிவான போராளியைப் பெருமைப்படுத்துகிறோம்; அவர்தான் கர்கரேயைக் கொன்றது யார்? எனும் நூலை எழுதியுள்ள எஸ்.எம். முஷ்ரிஃப்; அவருடைய போராட்டம் உண்மையையும் நியாயத்தையும் நிலை நாட்டுவதற்கான போராட்டம் ஆகும்.
அய்.பி.எஸ். அதிகாரி
பார்ப்பனியத்திற்கு எதிராக நாம் தொடுக்கும் போருக்கு உறுதுணையாக இணைந்து போராடுகிறவர் தலித் வாய்ஸ் எனும் இதழின் ஆசிரியர், வி.டி.ராஜசேகர்; அவர்தான் முஷ்ரிஃப் அவர்களுடைய நூலைப் பற்றி எனக்கு முதன் முதலில் பெங்களூரில் கூறியவர்; அந்த நூலைத் தேடினேன்; இங்குள்ள நூல் நிலையங்களில் அது கிடைக்க வில்லை; பின்பு இஸ்லாமிய நண்பர்கள்அதைக் கொடுத்து உதவினர்.
முஷ்ரிஃப் ஒரு மூத்த அய்.பி.எஸ்.அதிகாரி. உண்மையை எத்தகைய முயற்சியைக் கொண்டேனும் வெளிப்படுத்தியாக வேண்டும் என்ற எண்ணத்தின் மீது, கர்கரேயைக் கொன்றது யார்? எனும் நூலை எழுதி வெளியிட்டிருக்கிறார்.
பெரியாரின் இயக்கம்
ஒரு வகையில் சொல்லவேண்டும் என்றால் தந்தை பெரியாரின் சுயமரியதை இயக்கம், உண்மையை உலகுக்குத் தெரிவிக்கத் தோன்றிய இயக்கமாகும். அந்த இயக்கத்தின் பணியின் காரணமாகத்தான் தமிழ்நாடு மத அடிப்படை வாதத்திற்கு இரையாகாமல் இருக்கிறது.
குஷ்வந்த்சிங்
புகழ்வாய்ந்த எழுத்தாளர் குஷ்வந்த் சிங், இந்தியாவின் இறுதிக்காலம் (தி என்ட் ஆஃப் இந்தியா) எனும் நூலை எழுதினார்; பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்து, ராமர் கோயிலை அயோத்தியில் கட்டியே தீர்வது என்று சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில், இந்தியாவிற்கு எதிர்காலம் இல்லை என்று குஷ்வந்த் சிங் எழுதினார்; இந்தியாவைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை குஷ்வந்த் சிங்கிற்கு இல்லை. இந்துத்துவா கூட்டத்தின் செயல்பாடுகள் அவ்வாறு இருந்தன.
குஜராத்தில் நடந்த சிறுபான்மை மக்கள் மீதான கொலை செயல்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டவையாகும். பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸின் அரசியல் வடிவம் என்பது நினைவில் கொள்ள வேண்டியதாகும். ராணுவத்தையே இந்து மதவுணர்வுடையதாக ஆக்கவேண்டும் என்பது அவர்களுடைய நாட்டம். இந்தியா எனும் நாட்டை ஹிந்துயா எனும் இந்து மத நாடு ஆக்க வேண்டும் என்பது அவர்களின் குறிக்கோள்.
சங் பரிவார் தோற்றது
பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் கூட்டணி ஆட்சி மீண்டும் அமையும் என்று 2004 இல் சங்பரிவார் கனவு கண்டது. ஆனால், தமிழ்நாடு அவர்களுடைய நினைவைப் பொய்யாக்கியது. தமிழ் மண்ணில் இருக்கும் 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் எல்லாவற்றிலும் தி.மு.க. தலைமையில் அமைந்த கூட்டணியே வென்றது. எல்.கே. அத்வானி வெளிப்படையாகவே கூறினார், எங்களுடைய வாய்ப்புகளைத் தமிழ்நாடு கெடுத்துவிட்டது என்று.
பெரியார் ஏற்ற அறைகூவல்
இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், இண்டியன் எக்ஸ்பிரஸ் நாள் ஏட்டின் சார்பாக, நூற்றாண்டை உருவாக்கியவர்கள் (தி மேக்கர்ஸ் ஆஃப் தி மில்லியனியம்) எனும் ஒரு புத்தகத்தை வெளியிட்டார்கள். கடந்த நூற்றாண்டின் மிகப் பெரிய மனிதர்களைப் பற்றி கூறியுள்ளனர். அதில் பெரியாரைப் பற்றி எழுதியுள்ளனர்; வேத காலத்தில் இருந்து பார்ப்பனர்கள் பெற்று வந்த தனிச் சலுகைகளுக்கு, யாரும் அறைகூவல் விடுக்காத காலத்தில் அந்தத் தனிச் சலுகைகளை வெற்றிகரமாகப் பெரியார் எதிர்த்தார்; அதன் மூலம் தமிழ்நாட்டையும் ஒரேயடியாக மாற்றிவிட்டார் எனும் கருத்தை அந்தப் புத்தகம் வெளியிட்டிருக்கிறது. பெரியாரின் அத்தகைய பணிதான் மதவெறியை மாய்த்திருக்கிறது; வரலாற்றில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தி யிருக்கிறது.
கர்கரே
நான் ஏற்கெனவே கூறியது போன்று, நண்பர் வி.டி. ராஜசேகர் மூலம் இந்த நூலைப் பற்றி நான் அறிய வந்தேன். மாலேகான் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட இந்துத்துவா ஆட்களை அடையாளம் கண்ட காவல்துறைப் பெரிய அதிகாரியான கர்கரேயைக் கொன்றது யார் என்ற புதிரை, எஸ்.எம். முஷ்ரிஃப் எழுதியுள்ள இந்த நூல் விடுவிக்கிறது.
பார்ப்பனர்கள் உண்மையைப் புறக்கணிப்பவர்கள்; அதைத் திரித்துக் கூறுகிறவர்கள்; புறக்கணிப்பதை விடத் திரித்துச் சொல்வது மோசமானது.
கர்கரேயைக் கொன்றவர்கள் உண்மையையும் நியாயத்தையும் கொன்றவர்கள் ஆவார்கள்.
நாம் வன்முறையை ஆதரிப்பவர்கள் அல்ல; வன்முறைக்கும் பயங்கரவாதத்திற்கும் முடிவு கட்ட விரும்புகிறவர்கள்.
இந்தியாவின் உளவுத் துறையில் ஆதிக்கம் செலுத்தும் இந்துத்துவா சக்திகள், அதை எவ்வாறு தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை முஷ்ரிஃப் தனது நூலில் விளக்கியுள்ளார். ஒரு நல்ல காரியத்தைச் செய்வதற்காக, அவர் தன்னுடைய காவல்துறை உயர் பதவியை, பதவிக் காலம் முடிவதற்கு முன்பே, தானாக முன்வந்து துறந்திருக்கிறார். கர்கரே இந்த நாட்டையும் அரசியல் அமைப்பையும் காப்பாற்ற உயிர் துறந்தவர் ஆவார்; இந்த நூலை எழுதியுள்ள முஷ்ரிஃப் அவற்றைக் காப்பாற்றவே இந்நூலை எழுதியுள்ளார்.
காஷ்மீர் மன்னர் மரபிலே வந்தவரும், அந்த மாநிலத்தின் ஆளுநராக இருந்தவருமான சரண்சிங் ஒரு காலத்தில் விஸ்வ இந்துப் பரிசத்தின் பொறுப்பில் இருந்தார். ஆனால் அந்த அமைப்பு, இந்திய அரசியல் அமைப்பின் மதச்சார்பின்மையைக் குலைக்கும் நோக்கத்துடன் மனுதர்மத்தைச் செயல்படுத்த விரும்புவதை அறிந்து அதில் இருந்து விலகினார்.
நூலை எழுதியுள்ள முஷ்ரிஃப் அவர்களை வாழ்த்தி, உண்மையை வெளிப்படுத்தும் பணியை அவர் என்றும் தொடரவேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தி முடிக்கிறேன்.
-----------------------நன்றி:- “விடுதலை” 3-2-2010
1 comments:
shabba mudiyala.. eppadilam kathai vidrengada...neenga sonna malegaon valakau close panna poranga because of no evidence athu teriuma ungaluku
Post a Comment