Search This Blog

4.2.10

டாக்டர் அம்பேத்கரின் ஆசைகள் சமூக ஜனநாயகம் இருக்கிறதா? - 2



அவுட்லுக் வார ஏட்டில் ‘Ambedkar’s Desiderata’ எனும் தலைப்பில் புகழ்பெற்ற வரலாற்றுப் பேராசிரியர் ராமச்சந்திர குகா எழுதிய கட்டுரையின் முக்கிய பகுதிகள், இந்தியக் குடியரசின் 60 ஆம் ஆண்டு நிறைவையொட்டி தமிழில் தரப்படுகிறது.

நேற்றைய தொடர்ச்சி...

இத்தகைய முரண்பாடுகள் மலிந்த வாழ்க்கையை எவ்வளவு காலத்திற்கு நாம் வாழப் போகிறோம்? என்ற கேள்வியை எழுப்பிய அம்பேத்கர், எவ்வளவு காலத்திற்குத்தான் சமூக வாழ்க்கையிலும் பொருளாதார நிலையிலும் சமத்துவத்தை மறுத்துக் கொண்டிருக்கப் போகிறோம்? நீண்ட காலத்திற்கு சமத்துவத்தை மறுதலித்துக் கொண்டே இருப்போமானால், அரசியல் ஜனநாயகத்தை நாம் சவக்குழிக்கு அனுப்பப் போகிறோம் என்றே பொருள்படும்! மிக விரைவில் இத்தகைய முரண்பாடுகளைக் களையவேண்டும்; இல்லையேல், ஏற்றத்தாழ்வுகளால் பாதிக்கப்பட்ட மக்கள் கிளர்ந்து எழுந்து அரசியல் நிர்ணயசபை கட்டித் தந்துள்ள அரசியல் ஜனநாயகத்தை உடைத்து நொறுக்கிவிடுவார்கள் என்றும் எச்சரிக்கை செய்தார்.

சமமற்ற நிலையில் சரித்திர காலம் முதல் அவதிப்பட்டு வரும் இரண்டு பிரிவினர்கள் பற்றி இந்தியஅரசமைப்புச் சட்டம் கூறுகிறது. அட்டவணை இனத்தாரும் ஆதிவாசிகளுமே அந்த இரு பிரிவினர். அரசியல் நிர்ணய சபையில் ஆதிவாசிகளின் பிரதிநிதியாகக் குரல் கொடுத்தவர், ஜெய்பால் சிங் முண்டா ஆவார். நல்ல குணங்-களும் சிறப்பான நடையுடை பாவனைகளும் கொண்ட அவர் இன்றைய நிலையிலும் நினைவு கூர வேண்டியவராவார். அவர் சிறந்த ஹாக்கி ஆட்டக்காரர். 1928 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றபோது அணியின் தலைவராக இருந்து வழிநடத்தி வெற்றிக்கு வழி வகுத்தவர். நல்ல ஆற்றல் மிக்க பேச்சாளர். இந்தியா இறையாண்மை மிக்க ஜனநாயக நாடாக விளங்கும் என்கிற தீர்மானத்தை அவையில் ஜவகர்லால் நேரு, முன் மொழிந்தபோது, ஜெய்பால் உணர்ச்சிகரமான முறையில் அவருடைய இன மக்களின் கண்ணோட்டத்தில் வரவேற்றுப் பேசினார். காட்டில் வசிக்கும் ஆதிவாசி ஆகிய நான் இத்தீர்மானத்தைப் பற்றிய சட்டப் பிரச்சினைகள் என்ன என்பதை அறியேன். ஆனால் என் பொது அறிவு எனக்குக் கூறுவதெல்லாம், நாம் அனைவரும் ஒன்று பட்டு விடுதலைப் பாதையில் சென்று ஒற்றுமை யுடன் போராட வேண்டும் என்பது தான்.

ஆகவே, இந்திய மக்களில் மிகவும் மோசமாக நடத்தப்படுபவர் கள் என்னுடைய இனமக்கள்தான். கடந்த 6 ஆயிரம் ஆண்டுக் கால மாகப் புறக்கணிக்கப் பட்டு மிகக் கேவலமாக நடத்தப்பட்டு வருபவர்கள் எம் இனத்தவர். சிந்து வெளி நாகரிகத்தின் குழந்தை நான். இந்த நாட்டுக்குப் புதிதாக நுழைந்து வந்த வர்களாகிய நீங்கள் எல்லோரும் வந்தேறிகள் என்றுதான் நான் கருது கிறேன்; நீங்கள் எம் இன மக்களை சிந்து சமவெளிப் பகுதியிலிருந்து காட்டுக்குத் துரத்தி விட்டீர்கள். எம் இன மக்களின் வரலாறு முழுவதும், தொடர்ந்து கொடுமைக்கு ஆளாக்கப் பட்டதும், இந்நாட்டில் பூர்வ குடிகள் அல்லாதவர்களால் கைப்பற்றிக் கொள்ளப்பட்டதுமான வாழ்க்கை என்றாலும், பண்டித ஜவகர்லால் நேருவின் சொற்களை நான் ஏற்றுக் கொள்கிறேன். உங்கள் அனைவரின் வார்த்தைகளையும் நான் நம்புகி றேன். நாம் ஒரு புதிய அத்தியாயத் தைத் தொடங்கவிருக்கிறோம். சுதந் தர இந்தியாவில், சம வாய்ப்பு நிலவி ஒருவர் கூட அலட்சியப்படுத்தப்படாத நிலையை உருவாக்க விருக்கிறோம் என அவர் முழங்கினார்.

இந்த நம்பிக்கை பொய்த்துப் போனது. ஜெய்பாலின் ஆதிவாசி இன மக்கள் மிகமிகக் குறைவாகவே எதையும் அடைந்தார்கள். ஆறு தலை முறை காலத்தில் தேர்தல் ஜனநாயகத்தில் அனைத்தையும் இழந்தார்கள். கல்வி பெறுவதில், சுகாதார வசதிகளில், கவுரவமான பணிகளைப் பெறுவதில் தாழ்த்தப்பட்டவர்களை விடவும் மோசமாக அவர்கள் இருக்கிறார்கள். இதற்கிடையில் பல பத்து லட்சக் கணக்கான ஆதிவாசிகள்அணைக் கட்டுகள், தொழிற்சாலைகள், சுரங்-கங்கள் போன்றவற்றை அமைக்கிறோம் என்ற போர்வையில் உற்பத்தியாளர்களும் நுகர்வோர்களும் பலன் பெற காட்டிலிருந்தும் அவர்கள் விரட்டப்பட்டு விட்டனர். அவர்களது உடைமைகள் அவர்களிடமிருந்து பிடுங்கப்படும் நிலை (சுதந்தரத்திற்கு முன்பு நிலவியதைப் போல) இன்றும் தொடர்கிறது...

1947க்கும் 1950க்கும் இடைப்பட்ட காலத்தில், இந்திய அரசியல் தலைவர்களின் பணியே ஒன்று பட்ட நாட்டை உருவாக்குவதாக இருந்தது. இப்போது 2010 இல் நாடு துண்டாடப்படும் என்கிற நிலை கிடையாது. ஆனாலும் 60 ஆண்டுகாலத் தேர்தல் ஜனநாயகத்திற்குப் பிறகும்கூட சமத்துவம் இல்லாமையும் ஏணிப்படி போன்ற அமைப்பும் நிலவிக் கொண்டிருக்கிறது. ஆண்களை விடப் பெண்களின் நிலை மோசம். நகர்ப்புற மக்களை விட கிராமப்புற மக்களின் நிலை மோசம். பார்ப்பனர்களின் நிலையை விடத் தாழ்த்தப்பட்டோரின் நிலை மோசம். தாழ்த்தப்பட்டவரின் நிலையைக் காட்டிலும் ஆதிவாசிகளின் நிலை மோசம்...

இந்திய அரசியல் நிர்ணய சபையில் நிகழ்த்திய இறுதிச் சொற்பொழிவில் டாக்டர் அம்பேத்கர் இவ்வாறு கூறினார்: சமூக ஜனநாயகம் என்றால் என்ன என்று கேட்டுவிட்டு அவரே பதிலும் கூறினார். வாழ்க்கையின் குறிக்கோள்கள் என்று சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை என்பதை அங்கீகரிப்பது என்றுதான் பொருள் என்பதாக! சமத்துவம் இல்லாமல், சுதந்தரம் என்பது வெகு சிலருக்கு மட்டுமே உயர் நிலை-யைத் தரும். சுதந்தரமில்லாத சமத்துவம் தனிநபர் முயற்சிகளைக் கொன்றுவிடும். சகோதரத்துவம் இல்லாமல், சுதந்தரம், சமத்துவம் ஆகியவை எதுவும் இயற்கையின் போக்கில் நடைபெறுவதாக அமையாது எனத் தெளிவு படுத்தினார்...

1950 இல் இந்திய அரசமைப்புச் சட்டத்தை வடித்தவர்கள் தந்த உறுதிமொழிகளைக் கடந்த 60 ஆண்டுகள் காலத்தில் மீட்டெடுத்துள்ளோமா? அம்பேத்கர் கூறியபடி, முறையான சமூக ஜனநாயகம் கிடைத்திருக்கிறதா அல்லது அரசியல் ஜனநாயகம் மட்டுமே கிடைக்கப் பெற்றிருக்கிறதா?

தரவு: அவுட்லுக் 10.2.2010 - தமிழில்: அரசு
- (நிறைவு) ---”விடுதலை” 3-2-2010

0 comments: