Search This Blog

20.2.10

மதவாதிகளே பதில் சொல்லுங்கள்! - 13




இந்தியாவில் தோன்றிய மதங்கள் என்று சில உண்டு. ஆரியப் பார்ப்பன வேதக் கொடுமைகளை எதிர்த்து உண்டான சமணம் (ஜைன), பவுத்தம் (சாக்கியம்) அவற்றில் குறிப்பிடத்தக்கவை. இரண்டின் தோற்றுநர்களும் அரச குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்ற காரணத்தினால், அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி என்ற தன்மையில் அவை இந்தியாவில் பரவின. அவற்றிலும் பவுத்தம் இந்தியாவை விட்டே விரட்டப்பட்டது எனக் கூறத்தக்க வகையில் வெகு குறைவானவர்களால் மட்டுமே கடைப்பிடிக்கப்படும் மதமாக உள்ளது. சிறுபான்மையர் தகுதி தங்களுக்கு வழங்கப்படவேண்டும் என்று மனுச்செய்யும் நிலையில் சமணமதம் உள்ளது. இவை தவிர ஒரு மதம் இந்தியாவில உருவாக்கப்பட்டது என்றால் அது சீக்கிய மதம். இந்து, முசுலிம் மதக் கொடுமைகளின் காரணமாக உருவாக்கப்பட்ட மதம். இரண்டு மதங்களின் கலவை இந்த மதம் என்றே கூறலாம்.

இந்த மதத்தை உருவாக்கினவரான குருநானக், மூட நம்பிக்கைகளை அர்த்தம் அற்ற சடங்குகளை செல்லரித்துப் போன சம்பிரதாயங்களைத் தம் இளவயது முதலே எதிர்த்தவர். தம் தந்தை கண்டித்த போதும் பின்வாங்காமல் இருந்தவர். இந்துக்களில் உயர் ஜாதி எனப்படும் ஜாதியில் பிறந்த நானக் ஜாதி வழக்கப்படி பூணூல் அணிந்து கொள்ள மறுத்தார். தொடக்க காலம் தொட்டே, இந்து மதத்தைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி வரும் ஜாதிப் பிரிவினைகளைக் கடுமையாக எதிர்த்தார். இந்து மதத்தில் நிலவி வரும் இக்கொடும் பழக்கம் மதம்மாறி இசுலாமியர்களாக மாறிவிடவர்களையும் விட்ட பாடில்லை. நீண்ட நெடுங்காலமாக ஊறிப்போன இக்கொடுமை அங்கும் தொடரப்பட்டு, சையத்கள், ஷேக்குகள், முசல்லிகள், மவுலவிகள் என்றெல்லாம் பிரிவினை ஏற்படுத்தியிருப்பதையும் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

வலுத்தவன், இளைத்தவன், ஏழை பணக்காரன், மேல் ஜாதி கீழ் ஜாதி இவை போன்ற ஏற்றத் தாழ்வுகளால் ஏழைகளும் ஒடுக்கப்பட்டவர்களும் வதைக்கப்படுவதைக் கண்டு மனம் சகிக்காமல், பாடும் போது கடவுளைச் சாடினார் குருநானக். ஆம், அவர் கடவுள் நம்பிக்கையாளர். ஆனால் குற்றமற்ற படைத்தவனாக (திணீறீறீமீ சிக்ஷீமீணீஷீக்ஷீ) கடவுள் இருக்க வேண்டும் என விரும்பினார். (அப்படி ஒரு கடவுள் இல்லை; இனிமேல் உருவாக்கப்பட்டால்தான் உண்டு.) எனவே தம் பாடலில்,

ஏதுமறியா ஆடு,மாடுகளைச் சிங்கம்

அடித்துக் கொன்றால் அதற்குப் பொறுப்பை

ஆண்டவன்தான் ஏற்கவேண்டும்

என்று திட்டவட்டமாகப் பாடினார். (ஏற்கிறானா?) பேதமற்ற சமுதாயத்தைப் படைக்க வேண்டும் என்கிற உயர் எண்ணத்தினால் உருவாக்கப்பட்டதுதான் சீக்கிய குருத்வாராக்களில் உள்ள குடுகா லங்கர் எனும் பொது உணவுச் சாலை அனைவர்க்கும் இலவயமான உணவு வழங்கப்படுமிடம்.

புத்தரைப் போலவே, குரு நானக்கும் உயர்ஜாதி, பிரபுக்களின் மொழிகளான சமக்கிருதம், பாரசீக மொழிகளை விரும்பாமல் சாமானிய மக்கள் பேசும் மொழியையே பெரிதும் போற்றினார். இந்துக்கள் சமக்கிருதத்தையும் இசுலாமியர் பாரசீகத்தையும் கொண்டாடினர். அந்நேரத்தில் இருந்த பக்தி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சாதுகரி எனும் மொழியில் பேசி அதனைப் பிரபலப்படுத்தினர். பாடல்கள் வடிவில் தம் கருத்துகளை வடித்துக் கொடுத்து மக்களிடையே பரப்பினார். அதிலுங்கூட, இசுலாமியக் கவிதை வடிவங்களான சிஹார்ஃபி, பாராமாஹ், கஃபி போன்றவற்றில் கவிதை புனைந்தார். இந்துக்களின் செய்யுள் வடிவங்களான சந்தா, அஷ்டபதி, டோஹா, சுலோகம் போன்றவற்றில் பாடல்களைப் பாடினார். இரு சமயங்களுக்கும் சிறப்பானவற்றைக் கடைப்பிடித்துச் சமமாக நடந்து கொண்டார்.

குடும்பம், மனைவி, பிள்ளைகள் என்று வாழ்ந்திருந்தாலும் தனக்குப் பின் தன் வாரிசுகளிடம் தாம் உருவாக்கிய இயக்கத்தை ஒப்படைக்கவில்லை. அவருடைய மகன் அவருக்குப் பிறகு தலைமை தாங்க வேண்டுமென்று விரும்பினார்; இவர் சம்மதிக்கவில்லை. தன்னைப் பின்பற்றும் ஆயிரக்கணக்கானோரில் லெஹ்னா எனும் பெயருடையவரை நியமித்தார். தம் கரங்களால் அவரை, ஆசீர்வாதம் செய்தாராம். அதனாலேயே அவர் குரு அங்கத் என்று அழைக்கப்படுகிறார். (அங் என்றால் கை எனப் பொருள்). இன்றைய குருமுகி எழுத்து வடிவை இவர் திருத்தம் செய்து மக்களிடையேயும் மாணவர்களிடையேயும் பரவிடச் செய்தார்.

குருஅங்கதுக்குப் பிறகு குரு அமர்தாஸ் மூன்றாவது குருவாக நியமிக்கப்பட்டார். இவரும் தொண்டர்களில் ஒருவர்தான். இதனை இவரின் மகன்கள் ஏற்கவில்லை என்றாலும் குரு அங்கத் கவலைப்படவில்லை. சீக்கியர்களின் முதல் குருவான குரு நானக், சீக்கியர்கள்அடிக்கடி கூடிப்பேச வேண்டும்; ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் கூட்டங்கள் நடைபெறவேண்டும் என விதித்தார். அதற்கேற்ப மூன்றாம் குரு அமர்தாஸ் ஏற்பாடுகள் செய்து, அதனைச் சீர்படுத்துவதற்காகவும் நாடெங்கும் பரப்புவதற்காகவும் 146 பேர் கொண்ட அமைப்பை உருவாக்கினார். சிவமதத்தில், நாயன்மார், வைணவத்தில் ஆழ்வார், கிறித்துவத்தில் சீடர்கள் என்பதைப் போன்று இவர்கள். இவர்களில் 52 பேர் மகளிர். நாடு முழுக்கப் பயணம் செய்து கொள்கைகளைப் பரப்பினர்.

பேதமற்ற மனித சமுதாயத்தைப் படைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் குரு அமர்தாஸ் ஏற்படுத்தியதுதான் உணவுச் சாலை. ஜாதி, மத வேறு பாடின்றி எல்லாரும் ஒன்றாக அமர்ந்து உண்ண வேண்டும், அப்படி உண்ட பிறகுதான் குருவைச் சந்திக்க வரவேண்டும், வரமுடியும் என்கிற ஏற்பாட்டைச் செய்தார். இந்து மதத்தவரிடையே நிலவி வந்த ஜாதிப் பாகுபாடுகளையும் அதனால் ஏற்பட்ட ஏற்றத் தாழ்வுகளையும் போக்கிச் சமன் செய்யும் ஏற்பாடாகும் இது. இந்தச் செயலுக்காக எந்நாளும் நினைக்கப்பட வேண்டியவராக அவர் திகழ்கிறார்.

ஒரு முறை இவர் லாகூரில் தங்கியிருந்த போது அங்கு வந்த முகலாயப் பேரரசர் அக்பர் இவரைச் சந்திக்க விரும்பி வந்தார். பொது உணவுச் சாலையில் உணவருந்தினால்தான் குருவைப் பார்க்க முடியும் என்பது அவரிடம் எடுத்துச் சொல்லப்பட்டது. பேரரசர் அனைவருடனும் ஒன்றாக அமர்ந்து உணவுண்ட பின்னரே குருவைப் பார்த்தார். உள்ளபடியே சமரசம் உலவியிருக்கிறது.

--------------------தொடரும்.., சு.அறிவுக்கரசு அவர்கள் ”விடுதலை” 19-2-2010 இல் எழுதிய கட்டுரை

0 comments: