Search This Blog

9.2.10

ஏக இந்தியா புகழ் பாரதீய ஜனதா கட்சியும், சங் பரிவாரங்களும்


மலாய் நிகழ்ச்சி உணர்த்துவது என்ன?

மலாய் இனத்தவர்களுக்கு நிகராக சலுகைகளை தமிழர்களோ, சீனர்களோ கேட்பார்களேயானால், அவர்களின் குடியுரிமை ரத்து செய்யப்படும் என்று மலேசியப் பிரதமர் அலுவலக சிறப்பு அதிகாரி நசீர்சிபர் கூறினார்.

இந்தக் கருத்துக்குக் கடும் எதிர்ப்பு புயலாக வெடித்துக் கிளம்பியது. அதன் விளைவு என்ன தெரியுமா? அவர் பதவி விலக நேரிட்டது. பதவி விலகியதோடு அல்லாமல் பகிரங்க மன்னிப்பும் கேட்டுள்ளார்.

இந்த நிகழ்வையும், இந்தியாவில் சிவசேனா என்ற கட்சியின் எண்ணங்களையும், வெளிப்-பாடுகளையும், நடத்தைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தியா என்ற ஜனநாயக நாடு எந்த அளவு தரம் தாழ்ந்து போயிருக்கிறது என்பதை அறிந்துகொள்ளலாம்.

இதில் ஒரு வினோதம் என்னவென்றால், இவர்கள் இந்தியத் தேசியம்பற்றி வாய் கிழிய, மூக்கு முட்ட ஆவேசக்குரல் கொடுப்பவர்கள்.

பாரத மாதா என்ற சொல்லை பயப்பக்தியாகப் பகரக்கூடியவர்கள் இந்த சிவசேனாவோடு அரசியல் ரீதியாகவும், கலாச்சாரக் கொள்கை ரீதியாகவும் தொப்புள்கொடி உறவு வைத்துள்ளவைதாம். ஏக இந்தியா புகழ் பாரதீய ஜனதா கட்சியும், சங் பரிவாரங்களும்.

மும்பையில் அந்நியர்களுக்கு இடம் இல்லை. மும்பை மகாராட்டிரக்காரர்களுக்கு மட்டும்தான் சொந்தம் என்று கர்ச்சனை செய்கிறார்கள்.

மாநில வெறி மட்டுமல்ல, முஸ்லிம் எதிர்ப்பு என்ற முரட்டுக் குதிரையிலும் சவாரி செய்கிறார்கள்.

பாகிஸ்தான்காரர்கள் இந்தியாவில் கிரிக்கெட் விளையாடக் கூடாது என்பதற்காக ஆடுகளத்தைச் சேதப்படுத்தியவர்கள் இவர்கள். நடிகர் ஷாருக்கான் அய்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானியர்களும் விளையாடவேண்டும் என்ற ஒரு கருத்தை சொன்னதற்காக அவர் குறி வைக்கப்படுகிறார். கொச்சைத்தனமாக விமர்சிக்கப்படுகிறார். அவர் நடித்த திரைப்படத்தை வெளியிட அனுமதிக்கமாட்டோம் என்று அனுமார் பாய்ச்சல் பாய்கிறார்கள்.

இவ்வளவுக்கும் ஷாருக்கான் இந்த அய்.பி.எல். கிரிக்கெட் போட்டி ஏலம் எடுப்போரின் பட்டியலில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்து ஒன்றை வெளியிட்டதற்காக வெறிப் பாய்ச்சலா? கருத்துச் சுதந்திரத்தின் கடிவாளம் சிவசேனா கூட்டத்தின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதா?

இதை இன்னொரு வகையில் கவனிக்கவேண்டும். உண்மையிலேயே எல்லா வகையிலும், துறைகளிலும் ஆதிக்கம் செலுத்திவரும் பார்ப்பனர்களை எதிர்த்து, தங்களுடைய விகிதாசாரத்துக்குக் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு தேவை என்று சமூகநீதி அடிப்படையிலும், நியாயத்தின் அடிப்படையிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் குரல் கொடுத்தால் இந்தக் கூட்டம் எப்படியெல்லாம் விமர்சிக்கிறது? ஜாதிய உணர்வு என்றும், மக்களைப் பிளவுபடுத்தும் போக்கு என்றும் ஊடகங்கள் வலிமையாகத் தங்களிடம் இருக்கின்றன என்பதற்காகக் கருத்து தெரிவிக்கின்றதே!

இந்த நியாயமான உணர்வை திசை திருப்பத்தான் இத்தகைய அணுகுமுறைகளை இவர்கள் கையாளுகிறார்களோ என்று நினைப்பதற்குக் கண்டிப்பாக இடம் இருக்கிறது.

கர்கரேயைக் கொன்றவர்கள் யார்? என்ற தலைப்பில் சென்னை பெரியார் திடலில் நடத்தப்பட்ட சிறப்புக் கூட்டத்தில் இத்தகைய கருத்து எடுத்து வைக்கப்பட்டது என்பதும் இந்த இடத்தில் நினைவு கூரத்தக்கதாகும்.

திருடனே திருடன் திருடன்! என்று கூவிக் கொண்டு ஓடித் தப்பிக்கும் தந்திரம்தான் இதற்குள்ளும் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

-------------------"விடுதலை” தலையங்கம் 9-2-2010


1 comments:

Bala said...

தற்போது அம்மாநிலத்தில் ஆட்சியில் இருப்பது நம் முத்தமிழ் காவலர், பகுத்தறிவு செம்மல் கலைஞர் அவர் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ்தானே? ஏன் அவர்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை? என்னவோ சிவ சேனா அங்கு தன்னாட்சி புரிவது போலவும் அதனை மாநில அரசு அடக்க முடியாதது போலவும் எழுதி இருப்பது, அரசின் கையலாகா தனத்தை காட்டுகிறது. சிவா சேனா இன வெறியுடன் நடந்து கொள்வது போலவும், காங்கிரஸ் மக்களுக்காக பாடுபடுவது போலவும் உள்ளது. அதிகாரம் இருந்தும் அதனை பயன்படுத்தாமல் இருப்பதுதான் உண்மையான மக்கள் விரோத போக்கு.
எவன் தவறு செய்வான், அவன் மதத்தை எப்படி இதற்கு காரணம் காட்டலாம் என்று ஒரு தலைபட்சமாக சிந்திக்காமல் இருப்பது நல்லது.

பதவி என்று வந்துவிட்டால் ஆத்திகனாவது, நாத்திகனாவது, காங்க்ரசாவது, பி ஜே பி யாவது, அவர்களுக்கு மக்கள் எல்லாம் வெறும் ஆடு மாடுதான். தயவு செய்து மத சார்புள்ள கட்சிகள் மட்டும்தான் உலகமகா அயோக்கியர்கள் என்கிறமாதிரி உருவகப்படுத்ததீர்கள்