Search This Blog

29.3.10

போப் மன்னிப்பு கேட்டால் போதுமா?



நீங்கள் மிகவும் கொடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளீர்கள். நான் மிகவும் வருந்துகிறேன். உங்கள் நம்பிக்கை பாழ்பட்டுவிட்டது. உங்கள் சுயமதிப்பு சூறையாடப்பட்டுவிட்டது.

நான் வெட்கப்படுகிறேன் என்பதை வெளிப்படையாகவே தெரிவித்துக் கொள்கிறேன்.

தேவாலயங்களின் மரியாதை குலைக்கப்பட்டதற்கான அவமானச் செயல் தவிர்க்கப்பட்டிருக்கவேண்டும். அத்தகைய குற்றத்தைப் புரிந்தவர்கள் நிச்சயமாகக் கடவுளின் முன்பு பதில் சொல்லியே தீரவேண்டும். இவர்களின் பாபங்களைப் பற்றி விசாரிக்கும் நியாய விசாரணையின்போது பதிலளித்தே ஆகவேண்டும்.

இவ்வளவும் எழுதியிருப்பது போப். கத்தோலிக்க மதத்தின் உலகத் தலைவர். ஆம். மன்னிப்பை எழுத்து மூலமாகவே தந்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தந்துள்ளார். என்ன பாதிப்பு? யார் பாதிக்கப்பட்டனர்?

அயர்லாந்து நாட்டுக் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்த சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாலியல் வன்செயலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அசிங்கமான இந்தச் செயலைச் செய்தவர்கள் யாரோ காலிகளோ, அயோக்கியர்களோஅல்லர். காமாந்தகாரம் பிடித்த காலிகள், அயோக்கியர்கள். வெள்ளை அங்கி அணிந்து கொண்டு தங்கள் அயோக்கியத்தனங்களை மறைக்க முயலும் கத்தோலிக்க பாதிரிகள்தான் அவர்கள்.

பெரும் தவறுகள் தேவாலயங்களில் நடந்து விட்டன என்று அந்நாட்டு கத்தோலிக மதத் தலைமை ஒத்துக் கொள்கிறதாம். நடந்த கேவலமான செயல் தவறா? குற்றங்கள் அல்லவா! 30 ஆண்டுகளாகத் திட்டமிட்டுச் செய்யப்பட்டு வரும் குற்றங்கள் ஆகும்.

வெறும் மன்னிப்புத் தாள்கள் போதுமா? இக் குற்றங்களைக் கேடயங்களாக இருந்து மறைத்துக் கொண்டு இருக்கும் மத முகமூடி கிழித்தெறியப்பட வேண்டாமா? போப் சிந்திக்கவேண்டும். அவரது மதத்தவர் சிந்திக்கவேண்டும்.

பாதிரியார்களைத் தேர்ந்தெடுக்கும் முறை பற்றி யோசிக்கிறாராம் போப். ஒழுக்கமான, மனிதத் தன்மையுள்ள, அறிவுடன் கூடிய ஆன்மிகப் பள்ளிகள் குறைவாக இருப்பதே, இப்படிப்பட்ட பாதிரிகள் வருவதற்குக் காரணம் என்று கண்டு பிடித்திருக்கிறாராம். அது சரியல்ல.

மாற்று முறை கண்டறியப்படவேண்டும் என்று புலம்புகிறராம் போப். புலம்புவதை விட்டுவிட்டுப் புத்தியைப் பயன்படுத்த வேண்டும்.

முறைகெட்ட பாலியல் புணர்ச்சி முறைகளுக்குக் காரணம் - பெண்ணோடு புணர்வது பாபம் என்று கூறும் மதக் கருத்துகள் அல்லவா? பாதிரிகள் திருமணம் செய்து கொள்வதை அனுமதிக்கும் வேறொரு கிறித்துவப் பிரிவில் இம்மாதிரிக் குற்றங்களைக் காணோமே!

எனவே சரியான வழியில் போப் சிந்திக்க வேண்டியதும் செயல்படவேண்டியதும் மதமவுடீகக் கொள்கைகளை மாற்றி அமைப்பதும்தான் தேவையே தவிர, மன்னிப்பு அல்ல!

மதம் மீதுள்ள அக்கறையல்ல இந்த யோசனைக்குக் காரணம்! மனித மாண்புகள் மதிக்கப்படவேண்டும் என்ற கவலைதான் காரணம்!


------------------- சு.அறிவுக்கரசு அவர்கள் 28-3-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

1 comments:

Karthik Vasudevan said...

//பாதிரிகள் திருமணம் செய்து கொள்வதை அனுமதிக்கும் வேறொரு கிறித்துவப் பிரிவில் இம்மாதிரிக் குற்றங்களைக் காணோமே!//

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, கிருஸ்துவ மதத்தில் உள்ள எல்ல பிரிவுகளிலும் இந்த மாதிரி காலிகள் தான் நிறைந்திருக்கிறார்கள். கூடிய விரைவில் இந்தியாவிலும் தமிழகத்திலும் இந்த காலிகளின் அட்டகசாம் பெருக போகிறது.
http://www.kaartz.in/blog/archives/213