மகளிர்க்கு மார்ச் 8 அன்று முதலில் இடஒதுக்கீடு கதவு திறக்கட்டும் அடுத்து உள் ஒதுக்கீடு வழங்கி வெற்றி பெற வேண்டும் அய்க்கிய முற்போக்கு கூட்டணியினருக்கு தமிழர் தலைவர் முக்கிய வேண்டுகோள்
மார்ச் 8 அன்று மகளிர் இட ஒதுக்கீடு மசோதா உறுதியாக நிறைவேறப் போகிறது. இதோடு முடிந்து விட்டது என்று அய்க்கிய முற்போக்கு கூட்டணி எண்ணாமல் அடுத்த கட்ட உள் ஒதுக்கீட்டிற்கும் வகை செய்யவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:
63 ஆண்டு சுதந்திரத்திற்குப் பிறகு
நம் மக்கள் தொகையில் சரிபகுதி 50 விழுக்காடு பெண்கள். வாக்களிப்போரிலும் அதே நிலைதான்; என்றாலும் மக்களாட்சி எனப்படும் நமது ஆட்சியில் அவர்களது பிரதிநிதிகள் அதே அளவுக்கோ அல்லது அவர்களது தொகையில் மூன்றில் ஒரு பங்கோ கூட நாடாளுமன்ற இரு அவைகளிலோ, நாட்டின் சட்ட மன்றங்களிலோ இல்லை - அதுவும் 63 ஆண்டு சுதந்தி ரத்திற்கும் பிறகு என்பது வேதனைக்கும் வெட்கத்திற்கும் உரியது.
கலைஞர் ஆட்சியில் செயலாக்கம்
ஊராட்சி உள்பட உள்ளாட்சித் துறைகளில் கணிசமான அளவு மகளிர் பிரதிநிதிகளை இன்று பார்க்க முடிகிறது என்றால், அதற்கு முக்கிய காரணம் ஆண்களின் தாராள குணத்தால் அல்ல; விட்டுக் கொடுத்த பெருந்தன்மையால் அல்ல. சட்டத்தை ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தபோது இயற்றி தமிழ் நாட்டில் கலைஞர் ஆட்சியின்போது இது செயலாக்கத்திற்கு வந்ததேயாகும்!
இன்று சுமார் 7 மேயர்கள் இருந்தால் அதில் 3 மேயர்கள் பெண்கள் (மதுரை, திருச்சி, சேலம்) உள்ளனர்! இது போலவே நகராட்சிகள், ஒன்றியங்கள், மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள், ஊராட்சிகள் முதலியவற்றிலும் மகளிர் ஆட்சியைக் காண முடிகிறது.இது வரவேற்கத்தக்க மாற்றம்.
85 ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் சொன்னார்
இது போலவே சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் - தந்தை பெரியார் அவர்கள் 85 ஆண்டு களுக்கு முன்பே சொன்னது போல 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வரவில்லை என்றாலும், அவர்களுக்கு மூன்றில் ஒரு பங்காவது, 33 விழுக்காடாவது தரப்படும் சட்டம் நாடாளுமன்றத்தில் கடந்த 16 ஆண்டுகளுக்கு மேலாகியும், பிரதமருக்கு மேல் பிரதமர் வரும் போது எல்லாம் உறுதி அளிப்பதும், பிறகு அது ஊறுகாய் ஜாடியில் போடப்படுவதும் தொடரும் துயரக் கதையாகும்!
இதற்கு அடிப்படைக் காரணம் ஆண் ஆதிக்கம் முதல்வர் கலைஞர் அவர்கள் பொருத்தமாக ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி.
ஆனால் அதற்கும் மூலகாரணம் என்ன தெரியுமா?நம் நாட்டு மனுக்குல ஆட்சிதான்; அதிலும் மூளைகளில் ஏறிச் சவாரி செய்த கொடுமையால் விளைந்த ஒன்று!
பெண்களுக்கு தனி முகவரியே இல்லையே!
ஒரு பெண் பிறந்து வளரும்போது தனது தந்தையின் ஆதிக்கத்தின் கீழும், திருமணம் ஆனபிறகு, கணவன் ஆதிக்கத்தின் கீழும், பிள்ளை பிறந்து அது வளர்ந்த நிலையில்அந்த ஆண் பிள்ளையின் அதிகாரத்தின்படியும்தான் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்ற மனுதர்ம சாஸ்திர விதியும் அதன் படியே காலங்காலமாக அமைந்த நடைமுறையும் ஆகும்!
வர்ணாஸ்ரம முறைப்படி, பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர் என நால் வகைக்குக் கீழே பஞ்சமர்.
அதற்கும் கீழேதான் அனைத்துக் குலப் பெண்களும் அடங்கும்.
பெண்களுக்குத் தனி முகவரியே இல்லாத நிலை (Identity Crisis)) என்பதை விட மிகப் பெருங்கொடுமை உண்டா? இந்த லட்சணத்தில் பெண் தெய்வங்களுக்குக் கோயில்களும், வழிபாட்டிற்கும் குறைச்சல் இல்லை! வெட்கம்! மகாவெட்கம்!!
இதனை மாற்ற சமூகப் புரட்சி இயக்கங்கள்தான் முனைப்போடு செயலாற்றிய தலைவர்களான மகராஷ்டித்தின் ஜோதிராவ் பூலே, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்ற அறிஞர்கள்தான் இயக்கம் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்கள்.
மகளிர் மசோதா
எப்படியோ மகளிர் மசோதா 8 ஆம் தேதி (மார்ச்) நாடாளுமன்றத்தில் நிறைவேறவிருக்கிறது.
இந்த இட ஒதுக்கீட்டுச் சட்டம் பற்றி நமக்கு மனதில் ஒதுக்கீடு (Mental Reservation) உறுத்தல் உண்டு.
பாலியல் நீதியுடன் சமூக நீதியும் (Gender Justice Combined with Social Justice) இணைந்த சட்டமாக இச்சட்டம் நிறைவேறவேண்டியது இன்றைய ஜாதிகள் மலிந்துள்ள சமுதாயத்திற்கு மிகவும் தேவையானதாகும்; என்றாலும் அதையே வலியுறுத்தி கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் ஆகிவிடக்கூடாது என்பதால், அதை வலியுறுத்துவதில் இன்னமும் ஆழ்ந்த நம்பிக்கையும் விழைவும் உள்ள நம்மைப் போன்ற (திராவிடர் கழகம்- திராவிடர் இயக்கம்) அமைப்புகள்,முதலில் கதவு திறந்து உள்ளே செல்லட்டும் மகளிர். பிறகு அடுத்து, சமூக நீதிப்படி, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை சமூகத்தவர்க்கும் இட ஒதுக்கீடு உள் ஒதுக்கீட்டுக்கான ஆணைகள்அல்லது சட்டத்திருத்தங்களை வலியுறுத்தி வெற்றி பெற வைப்போம் என்பது இன்றைய கால கட்டத்தில் யதார்த்தத்தை ஒட்டிய அணுகுமுறையாக அமைவதே சரி.
இனியும் காலம் கடத்தக்கூடாது
அதையும் விடாமல் வற்புறுத்தி வெற்றி அடை வோம் சமூக நீதியை இனி எந்தக் கொம்பனாலும் விரட்டிவிடமுடியாது!
எனவே, வரும் மார்ச் 8 உலக மகளிர் நாள் என்பது இன்னமும் சிறப்பு இரு அவைகளிலும் நிறைவேறட்டும் சட்டமாக. இனியும் காலங் கடத்தக் கூடாது.
இதில் ஆளுங்கட்சி, பிரதான எதிர்க் கட்சிகளான பா.ஜ.க., தி.மு.க., அ.தி.மு.க. திரிணாமுல், இடதுசாரிகள் இவைகள் எல்லாம் ஓரணியில் நின்று வாக்களித்தால் (Whip ஏவுனர்கள் ஆணையிட்டுள்ளார்கள் என்பது நல்ல செய்தி).
அடுத்த கட்ட நடவடிக்கை
மசோதாவை மாநிலங்கள் அவையில் ஆதரிப்போர் எண்ணிக்கை 168 ஆகும். எதிர்ப்பு அணி(இன்று வரை) மொத்தம் 39.
மக்கள் அவையில்
ஆதரவு வாய்ப்பு - 426
எதிர்ப்பு அணி (உத்தேசம்) - 79
எனவே இம்முறை உறுதியாக மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேறிட பிரகாசமான வாய்ப்பு தென்படுகிறது.
ஆனால், இதோடு முடிந்துவிட்டது என்று அய்க்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளும் (U.P.A.) யும் ஆதரவு தரும் என்று எண்ணாமல், சமூகநீதி (Social Justice) இட ஒதுக்கீடும் தருவது அவசியம் என்றுஅடுத்த கட்ட நடவடிக்கையிலும் ஈடுபட்டு அதிலும் வெற்றி பெற்று ஒரு புதிய எழுச்சியை மகளிர் மறுமலர்ச்சியை உருவாக்குதல் காலத்தின் கட்டாயம். மிகப் பலரை வெகு சிலர் எவ்வளவு காலம்தான் ஏமாற்றி வாழ்தல் நியாயம்?
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
----------------”விடுதலை” 7-3-2010
0 comments:
Post a Comment