மாரியம்மாள்
திராவிடர் கழகத்தின் தொண்டர்கள் குறிப்பாக மகளிர் அணியினரைச் சேர்ந்தவர்கள் எவருடனும் ஒப்பிட முடியாத அளவுக்குக் கொள்கைச் செங்கோல் ஓச்சக் கூடியவர்கள்.
அதிலும் குறிப்பாக திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பெண்கள் என்றால், வீரமும், தியாக உணர்வும் கொப்பளித்துக் கிளம்பும்.
நமது தலைவர் ஆசிரியர் மானமிகு வீரமணி அவர்கள் அடிக்கடி கூறுவார்கள்: என்னுடைய உண்மையான சொந்தங்கள் நிறைந்த பகுதி இந்த விவசாயப்பகுதி என்று மிகுந்த பெருமிதத்துடன் கூறுவார்கள்.
போராட்டம் என்றால் ஆண்களைப் பின்னுக்குத் தள்ளி முன்வரிசையில் நிமிர்ந்து நிற்கும் வீரத்துக்குச் சொந்தக்காரர் அவர்கள்.
(கண்கொடுத்தவணிதம் பெரியார் பெருந்தொண்டர் உத்திரபதியின் வாழ்விணையர் மாரியம்மாளை தமிழர் தலைவர் சந்திக்கும் நெகிழ்ச்சி...).
திருவாரூர், நாகை, நன்னிலம் வட்டாரங்களில் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் வீரமணி வருகிறார்கள் என்றால், அதுதான் அவர்களுக்கு ஊர்த் திருவிழா. உவகை குலுங்கும் உணர்வுப் பெருவிழா.
அந்தத் தாய்மார்கள் நமது ஆசிரியர் அவர்களின் கரங்களைப்பற்றிக் கொண்டு காட்டும் அந்தப் பாசமழையிருக்கிறதே, அதற்கு ஈடு பொன்னோ, பொருளோ அல்ல! அது ஒரு உயர்ந்த இலட்சியத் தொண்டர்களின் வீறுமிக்கக் கொள்கைப் பாசறையின் பற்றுப் பரிவர்த்தனை!
ஒரு தகவல் திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மானமிகு எஸ்.எஸ். மணியம் (95 வயது நிறைந்த இளைஞர்) இன்று மதியம் 12 மணியளவில் ஒரு தகவலைத் தெரிவித்தார்.
உடல் அணுக்கள் எல்லாம் சிலிர்த்தன, கண்கள் குளமாயின.
திருவாரூரையடுத்த கண்கொடுத்தவனிதம் கழகத்தின் பாடிவீடு. பெரியார் பெருந்தொண்டர் உத்திராபதி என்னும் கருஞ்சட்டை வீரர். அவருடைய இணையர் மாரியம்மாள் (வயது 78). சிறிதுகாலமாக உடல்நலமற்று இருந்தார். தமிழர் தலைவர் அவர்களை தாம் மரணமடைவதற்குமுன் ஒருமுறை பார்க்கவேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். நேற்று (14.3.2010) அப்பகுதிக்குச் சென்ற தமிழர் தலைவரிடம் அந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சற்றும் தயங்காமல் அம்மையாரைக் காண தமிழர் தலைவர் விரைந்தார். நேற்று மதியம் 12 மணிக்குச் சந்தித்தார். அந்தச் சந்திப்பு ஓர் நிகழ்ச்சியல்ல, நெகிழ்ச்சி!
மானமிகு எஸ்.எஸ். மணியம் அவர்கள் இன்று மதியம் தந்த தகவல் என்ன தெரியுமா? இன்று காலை அந்த அம்மையார் மரணமுற்றார் என்பதுதான்.
இயக்கத் தலைவரை சந்திக்கும் தமது இறுதி விருப்பம் நிறைவேறிய மகிழ்வில் அம்மையார் தம் கண்ணசைவை நிறுத்திக்கொண்டு விட்டாரே!
இந்த உணர்வுக்கு ஈடு இணையாக இன்னொன்றையும் எடுத்து இயம்பத்தான் முடியுமா? இதுதான் திராவிடர் கழகம்.
------------------------- மயிலாடன் அவர்கள் 15-3-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
0 comments:
Post a Comment