Search This Blog

10.3.10

எல்லோருக்கும் முன்னோடியாக குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டவர் ஆசிரியர் கி.வீரமணி

குடும்பக் கட்டுப்பாடு பிரச்சினையில் மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் மதுரை சங்கமம் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் உரை

குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை பெண்களை விட ஆண்கள் செய்துகொள்வதுதான் சிறந்தது என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறினார். மேலும் இதை மக்களிடத்தில் ஒரு விழிப்புணர்வுப் பிரச்சாரமாக செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மதுரையில் 21.2.2010 அன்று நடைபெற்ற சுயமரியாதை குடும்பங்களின் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. கேள்விபதில் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இடையில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் அளித்த ஒரு பதில் விளக்கம் வருமாறு:

இது போன்ற குடும்ப கலந்துறவாடல்களில் நாம் மனம் திறந்து பேச வேண்டும். பல திருமணங்கள் தோல்வி அடைவதற்கு என்ன காரணம்? பல பேருடைய வாழ்க்கை மிகவும் சங்கடமாக இருப்பதற்கு என்ன காரணம்?

இதில் ஆண்களுக்கு ஒரு சங்கடம் கூட கிடையாது. குழந்தை பிறந்தவுடனே குடும்பக் கட்டுப்பாடு நீ பண்ணிக்கொள்ளம்மா என்று வாழ்விணையரிடம் சொல்வது அவர்கள் தெளிவாக சிந்தித்து செய்து கொண்டாலும் உண்டு; அல்லது கணவர் சொல்கிறார் அதிக குழந்தை பிறந்தாலும் தொல்லை என்று நினைத்து குடும்பக்கட்டுப்பாடு செய்து கொண்டாலும் உண்டு. இது பெண்களுக்கு சிக்கலான, சிரமமான ஒன்று, ஆண்களுக்கு இதில் ஒன்றுமே கிடையாது. ஒரு சங்கடமும் கிடையாது. ஆண்களுக்கு இரண்டு நரம்புகளை கட்பண்ணி ஒரு முடிச்சுப் போடுகிற மாதிரியான செய்தி இது, அவ்வளவுதான். இங்கே கழக துணைப் பொதுச்செயலாளர் மகப்பேறு மருத்துவர் டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்கள் கூட கூறினார். (தனது கணவர் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன் செய்தால் பாலியல் ரீதியாக உறவில் சரியாக இருக்காது என்கிற எண்ணம் இருக்கிறது. ஆண்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்டால் கடினமான வேலைகளைக் கூட செய்து கொள்ள முடியாது. அதனால் கணவன் குடும்பக்கட்டுப்பாடு செய்துகொள்ள வேண்டாம். பெண்களே செய்து கொள்கிறோம் என்கின்ற மூடநம்பிக்கை இருக்கிறது. இதை நாங்கள் மாற்ற முயற்சித்திருக்கிறோம்)

இப்படி மகப்பேறு மருத்துவர் டாக்டர் மாதிரி இருக்கிறவர்கள் சொன்னால்தான் விளக்கமாக இருக்கும். இந்த மாதிரி பிரச்சினைதான் மிக முக்கியம். இந்த மாதிரி செய்திகள் தெரியாத இன்னொரு பக்கம் இருக்கிறது. பல பெண்கள் ஏற்கெனவே மருத்துவமனைக்கு வந்திருப்பார்கள். பல பெண்களுடைய அனுபவங்களை கேட்டதாலே தெளிவாகச் சொல்லியிருக்கிறார். குடும்பப் பிரச்சினைகள் பற்றி எல்லாவற்றையும் பேசலாம். பெண்கள் மத்தியில் குடும்பக் கட்டுப்பாடு பற்றி தவறான செய்திகள் பரவியிருக்கிறது. பெண்ணுக்கு எதிரி பெண்கள்தான். பெண் அடிமைத்தனம். ஆண்களால் திணிக்கப்படுவதைவிட, பெண்களால் தான். அதிக அளவுக்கு பெண்ணடிமைத்தனமே இருக்கிறது. மூடநம்பிக்கைகள், இப்படி இவை அத்தனையுமே இருக்கின்றன.

1964ஆம் ஆண்டு என்று நினைக்கின்றேன். நான் திடீரென்று முடிவு பண்ணினேன். என்னுடைய வாழ்விணையரிடம் கலந்தேன். இங்கேதான் நான் இந்த செய்தியை சொல்கிறேன். வேறு எங்கும் நான் சொன்னதில்லை.

என்னுடைய வாழ்விணையர் தெளிவானவர். நானே குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்கிறேன் என்று சொன்னார். வேண்டாம் நான் செய்துகொள்கிறேன். நான் மருத்துவ நண்பர்களிடம் இதுபற்றி கலந்து பேசிவிட்டேன். நான் செய்துகொள்கிறேன் என்று எனது வாழ்விணையரிடம் சொல்லி விட்டேன்.

நான் விடுதலை அலுவலகத்திற்குப் போய் அப்பொழுதுதான் இரண்டு ஆண்டுகள் ஆகிறது. சென்னை மீரான்சாகிப் தெருவில் அலுவலகம். நான் அடையாறில் குடியிருக்கிறேன். நான் இதை ஒன்றும் யாரிடமும் சொல்லவில்லை.

இதற்காக மருத்துவமனையில் போய் படுக்க வேண்டிய அவசியமில்லை. ஓ.பி புற நோயாளிகள் மாதிரி தினந்தோறும் சிகிச்சை பெற்றுவிட்டுத் திரும்புகிற மாதிரிதான் நிலைமை இது. மற்றவர்களைவிட என்னுடைய அனுபவத்தைச் சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்.

எங்களுடைய மாமியார், மாமனார் எல்லாம் வந்திருந்தார்கள்.அவர்கள் பாட்டுக்கு அவர்கள் இருக்கிறார்கள். நான் யாரிடமும் இதைப் பற்றி சொல்லவில்லை. இது என்ன மற்றவர்களிடம் கலந்துபேச வேண்டிய விசயமா? இது என்னுடைய தனிப்பட்ட விசயம். இது எனது வாழ்விணையருக்கு மட்டும்தான் தெரியவேண்டிய விசயம். இதில் மற்றவர்களுக்கு உரிமை இருப்பதாக நான் நினைக்கவே இல்லை.

எனது வாழ்விணையரிடம் என்றைக்கு இதை செய்து கொள்ளப் போகிறேன் என்று கூட சொல்லவில்லை. ஏனென்றால் சொன்னால் அவர்களும் வருகிறேன் என்று சொல்லுவார். நான் அதைக்கூட சொல்லவில்லை.

ஆர்.ஜி.கிருஷ்ணன் என்பவர் டீன். அவர் அசாமில் இருந்தவர். அவர் அசாமில்இருந்த பழைய கவர்னருக்கெல்லாம் மருத்துவராக இருந்தவர். நல்ல உணர்ச்சி பூர்வமானவர். தமிழின உணர்வாளர். பார்ப்பன அல்லாத மக்களை கைதூக்கி விடவேண்டும் என்று நினைக்கக்கூடியவர். ஜெனரல் ஹாஸ்பிடல் டீனாக இருந்து ஓய்வு பெற்றவர். அவர் அய்யா அவர்களை எல்லாம் மருத்துவமனையில் வந்து பார்த்தவர். எனக்கு அவரிடம் பழக்கம் உண்டு.

ஒரு வாரத்திற்கு முன்னாலே இது பற்றி கேட்டேன். அவர் சொன்னார், இதில் ஒன்றும் சங்கடமில்லீங்க. அவர் நானே பண்ணுகிறேன் என்றார். நான் அவரைக் கூட எதிர்பார்க்கவில்லை. அவருக்கு கீழ் உள்ள டாக்டரிடம் செய்து கொள்ளலாம் என்று நினைத்தேன்.

இதைப் பற்றி என்ன வழிமுறை என்று கேட்டேன். இது சாதாரணமானதுதான் என்று சொன்னார். நான் ஒரு நாள் காரை எடுத்துக்கொண்டு அடையாறில் இருந்து கிளம்பினேன். என்னுடைய டிரைவரிடம்கூட நான் சொல்லவில்லை. நேரே காரை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு விடப்பா என்று சொன்னேன்.

நான் முதல்நாளே மருத்துவரிடம் சொல்லி விட்டேன். எத்தனை மணிக்கு வரவேண்டும் என்று கேட்டேன். அவர்கள் சொன்ன நேரத்திற்கு சென்று விட்டேன். அங்கு போனவுடன் தான் ஒரு ஃபாரம் ஒன்று கொடுத்தார்கள். அந்த ஃபாரத்தை நிரப்பி மனைவியுடைய ஒப்புதல் வேண்டும் என்று இருக்கிறது. எனக்கு அப்பொழுதுதான் இந்த விசயம் தெரிந்தது. உடனே கார் டிரைவரை அனுப்ப முயற்சித்தேன். டாக்டர் சொன்னார் உங்களுடைய மனைவி கையெழுத்துதானே, நீங்களே போட்டு விடுங்கள் என்று சொன்னார். நான் சொன்னேன் அவங்க கையெழுத்தை நான் எதற்குங்க போட வேண்டும்? நான் டிரைவரை அனுப்பி அரைமணி நேரத்திற்குள் கையெழுத்து வாங்கி வரச்சொல்லி விட்டேன். உடனே அவர்களும் சிகிச்சையை ஆரம்பித்துவிட்டார்கள். என்னுடைய வாழ்வி ணையரும் படித்துப் பார்த்துவிட்டு உடனே கையெழுத்துப் போட்டு அனுப்பி விட்டார்கள்.

எனக்கு மயக்க மருந்து கொடுத்தார்கள். என்ன இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டதே என்று கேட்டேன். வலி ஏற்பட்டால் மாத்திரை போடுங்கள் என்று கூறி மாத்திரை கொடுத்தார்கள். அதையும் வாங்கிக்கொண்டேன். இவ்வளவு சுலபமாக முடிந்துவிட்டதே என்று நினைத்துக்கொண்டு நேராக நான் விடுதலை அலுவலகத்திற்கு வந்துவிட்டேன். நான் வழக்கம் போல தலையங்கம் எழுதினேன். விடுதலை அலுவலக வேலைகளைப் பார்த்தேன். கையிலேயே உணவு கொண்டு வந்து விடுவேன். சாப்பிட்டேன்.

எனக்குக் கொஞ்சம் சங்கடமாக இருந்தது. காய்ச்சல் வந்துவிட்டது. காரணம் என்னவென்றால் பழைய விடுதலை ஆபீஸ் குடோன் மாதிரி தான் இருக்கும். இந்த ரூமிலிருந்து அந்த ரூமுக்குச் செல்வது, அந்த ரூமிலிருந்து இந்த ரூமுக்குச் செல்வது என்று இப்படி இருந்துவிட்டேன்.

அன்றைக்கு வழக்கத்திற்கு மாறாக அதிகமான அளவுக்கு நடந்துவிட்டேன். அதனுடைய விளைவு என்ன என்பது எனக்குத் தெரியவில்லை.

மாலையில் டாக்டரிடம் ஃபோன்பண்ணினேன். நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று கேட்டுவிட்டு வீட்டுக்குப் போவதை விட்டு, விட்டு ஏன் அலுவலகம் போனீர்கள் என்று கேட்டார். பரவாயில்லீங்க வேலை இருந்தது இப்படியே வந்துவிட்டேன் என்று சொன்னேன். பிறகு ஒருநாள் ஓய்வெடுத்தேன். வேறு ஒன்றும் கிடையாது. நான் ஆண்களுக்காக, தோழர்களுக்காக, இதைச் சொல்லுகிறேன். ஆகவே தோழர்கள் தோழியர்கள் குடும்பக் கட்டுப்பாட்டைப் பற்றி சுலபமாக எடுத்துச் சொல்லலாம்.

இதில் புள்ளி விவரம் எடுத்திருக்கிறார்கள். பெண்கள்தான் அதிக அளவுக்கு கருத்தடை செய்து கொள்கிறார்களே தவிர, ஆண்கள் அதிக அளவில் முன்வரவில்லை. கருத்தடை செய்துகொள்ள வரவில்லை என்று சொல்லியிருக்கின்றார்கள்.

நம்முடைய குடும்பங்கள், கழகத் தோழர்கள் மட்டுமல்ல, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள்இதை ஒரு பிரச்சாரமாக தெளிவாக செய்ய வேண்டும். பெண்களுக்கு இந்த வாய்ப்பைக் கொடுக்காமல், ஆண்கள் பயன்படுத்திக்கொள்வோம் என்ற தெளிவான முடிவை நாம் எடுக்க வேண்டும்.

இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.

------------------------ “விடுதலை” 8-3-2010

2 comments:

சசிகுமார் said...

நல்ல பதிவு நண்பரே , தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வந்தவாசி ஜகதீச பாகவதர் said...

என் தந்தையவர்கள் (திரு. பச்சையப்பன்) 1958இல் ஹைட்ரோசிலுக்காக அறுவை சிகிச்சைக்கு டாக்டரிடம் சென்றார். உங்களுக்குத்தான் மூன்று குழந்தைகள் உள்ளனவே, நீங்கள் கு.க அறுவை சிகிச்சை ஏன் செய்துக்கொள்ளக்கூடாது என்று டாக்டர் கேட்டிருக்கிறார். கொஞ்சமும் தயக்கமில்லாமல் செய்துக்கொள்வதாக தெரிவிக்க, இரண்டு அறுவை சிகிச்சையும் அளிக்கப்பட்டது. என் தாயாருக்கே அறுவை சிகிச்சை ஆன பிறகே தெரியும். பின் 1970களில் இதையறிந்த நாங்கள், அவரை மனமார பாராட்டினோம்.