Search This Blog

8.3.10

பெண்கள் இட ஒதுக்கீடும் - அண்ணல் அம்பேத்கரும்



இன்று உலகம் முழுவதும் மகளிர் நாள் கொண்டாடப்படுகிறது. உலகில் பெண்கள் சரிபாதி என்று சொல்லப்பட்டாலும் அந்த எண்ணிக்கையிலும் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுவிட்டது. இந்தியாவிலும் அதே நிலைதான் (1000 ஆண்களுக்க 933 பெண்கள்). தமிழ்நாட்டிலோ 1000 ஆண்களுக்கு 987 பெண்கள். உலகம் முழுவதும் பெண்களின் எண்ணிக்கையில் சரிவுக்குக் காரணம் ஒரு வகையில், பெண்கள் மீதான ஒடுக்குமுறையே!

பெண் என்றால் ஆடுமாடு என்ற நினைப்பு. அடிமைக்குரிய சொற்கள் எல்லாம் பெண்கள் மீதுதான்! இன்னும் சொல்லப்போனால், பெண்கள் தாழ்வு மனப்பான்மை உடையவர்களாக இருப்பதும், ஒரு பெண் இன்னொரு பெண்ணை இழிவாக நினைப்பதும் சமூக அமைப்பின் வீழ்ச்சியையே காட்டுவதாகும்.

பெண்கள் அடிமை என்பதில் மதத்திற்கு மிக முக்கியமான பாத்திரம் உண்டு. வேலைக்குச் செல்லும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள் என்றும், விதவைப் பெண்கள் தரிசு நிலத்திற்கு ஒப்பானவர்கள் என்றும் லோககுரு என்று சிலரால் உயர்த்தப்படுகிற சங்கராச்சாரியார்களே சொல்கிறார்கள். இன்னும் கூட எந்த மதத்திலும் பெண்கள் தலைமை இடத்துக்கு வரத் தகுதியற்றவர்களாகவே ஆக்கப்பட்டுள்ள நிலை.

உலகப் பொருளாதார அமைப்பு 2009 இல் ஆண் பெண் முன்னேற்றத்தில் இடைவெளி 134 நாடுகளில் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடுகிறது. பெண்கள் முன்னேற்றத்தில் இந்தியா 114 ஆவது இடத்தில்தான் இருக்கிறது.

மும்பை பன்னாட்டு மக்கள் தொகை பற்றிய நிலவரம் திருமணமான 25-49 வரையிலான பெண்களில் அய்ந்தில் ஒருவரே பத்தாம் வகுப்புக்கு மேல் இந்தியாவில் படிப்பதாகக் கூறுகிறது.

எல்லாத் துறைகளும், மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் அத்தகைய உயர்மட்டப் பதவிகளில் அதிகபட்சமாக 7 விழுக்காடு பெண்கள்தான் இந்தியாவில் பணியாற்றுகின்றனர்.

கல்வி, வேலை வாய்ப்புகளில் 50 விழுக்காடு இடங்கள் பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று தந்தை பெரியார் கூறிய கருத்துகள் இந்தியத் துணைக் கண்டத்திற்கு மட்டுமல்ல, உலகக் கண்ணோட்டத்திலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய மிக உயர்ந்த வழி காட்டும் கருத்தாகும்.

2007 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக இந்தியாவில் பதிவான குற்றங்கள் 1,85,312 ஆகும். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் பாரதபுண்ணிய பூமி யில் ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார். 43 நிமிடங்களுக்கு ஒருமுறை பெண் கடத்தப்படுகிறார். நாள்தோறும் குடும்ப வன்முறைகளால் மரணம் அடையும் பெண்கள் 56.

இவற்றிற்கெல்லாம் என்னதான் முடிவு? இங்கும் தந்தை பெரியார்தான் வருகிறார். பெண்கள் விடுதலைக்கு ஒருக் காலமும் ஆண்கள் முன்வர மாட்டார்கள். பெண்களே தங்கள் விடுதலைக்குப் போராட முன்வரவேண்டும். இன்னும் சிங்காரத்திலும், அணி, மணி, ஆடை, அலங்காரத்திலும் பெண்கள் மூழ்கிக் கிடப்பார்களேயானால், அதன் பலன் ஆண்களின் ஆதிக்கம், முரட்டுக்கரம் பெண்கள் மீது பாய்ந்து கொண்டுதானிருக்கும்.

பெண்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடுவது என்றால் ஆட்சி அதிகாரத்திலும் அவர்களுக்குரிய இடம் கட்டாயம் தேவை. நியாயமாக சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் 50 விழுக்காடு இடங்கள் பெண்களுக்குத் தேவை. கடந்த 60 ஆண்டு-களில் எந்தக் கால கட்டத்திலும் நாடாளு-மன்றத்தில் பெண்-களுக்கான இடங்கள் 10 விழுகாட்டைத் தாண்டவே இல்லை.

இன்று இந்திய நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 விழுக்காடு இடத்துக்கு உறுதியளிக்கும் சட்டம் நிறைவேறும் என்று தெரிகிறது.

அதே நேரத்தில் அதில் சமூகநீதிஉள் ஒதுக்கீடு தேவை என்பதைத் திராவிடர் கழகம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே வருகிறது. கடந்த இரு நாள் அறிக்கைகளிலும் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் இதனை மிகவும் வலியுறுத்தியுள்ளார். இது மிகவும் முக்கியமானதாகும்.

தந்தை பெரியார் கூறியுள்ளது போலவே அண்ணல் அம்பேத்கர் கூறியுள்ள கருத்து இந்த இடத்தில் மிகவும் முக்கியமானதாகும்.

தேசிய சர்க்கார் என்றால் பார்ப்பன சர்க்கார்தானே? 1937 இல் தேசியம் வெற்றி பெற்ற 7 மாகாணங்களும் பார்ப்பன முதல் மந்திரிகளின் ஆதிக்கத்தில்தானே இருந்து வந்திருக்கின்றன? நாளைக்கு எல்லா மக்களும் ஓட்டுக் கொடுத்து, அதன் மூலம் ஒரு சர்க்காரை ஏற்படுத்தினாலும் அதிலும் பார்ப்பனர்கள்தானே ஆட்சி செலுத்துவார்கள்?இது மாத்திரமா? பெண்களுக்கு ஸ்தானம் வழங்கினாலும் பார்ப்பாத்திகளே மெஜாரிட்டியாக வருவார்கள். தொழிலாளிக்கு ஸ்தானம் வழங்கினாலும் அதற்கும் பார்ப்பனர்களே பிரதிநிதிகளாய் வருவார்கள் என்று அண்ணல் அம்பேத்கர் கூறுகிறார். (சென்னையில் உரை -குடிஅரசு 30-.9.-1944)

சமூக நீதியில் அக்கறை கொண்ட அரசியல் கட்சிகள் இதைக் கவனத்தில் கொண்டு, அடுத்து இதில் கவனம் செலுத்தவேண்டியது அவசியமும், அவசரமும் ஆகும்.

-------------------------- ”விடுதலை” தலையங்கம் 8-3-2010

0 comments: