அந்தக் கடைசி 30 ஆண்டுகள்
அன்னை மணியம்மையார் அவர்களின் நினைவு நாள் இந்நாள் (1978). வைதிக மனப்பான்மையோடு நினைவு நாளைக் கடைப்பிடிப்பார்கள். பகுத்தறிவாதிகளான நாமோ, கொள்கை ரீதியாக இயக்க ரீதியாகச் சிந்திக்கக் கூடியவர்கள்.
தந்தை பெரியார் அவர்கள் 95 ஆண்டுகாலம் வாழ்வதற்குக் காரணமாக, ஊக்க, ஊட்டச் சக்தியாக இருந்த அன்னையார் தமது வாழ்வை 58 ஆண்டுக்குள் முடித்துக்கொண்டார் என்பது வேதனைக்குரியதாகும்.
கூப்பிட்டால் வந்துவிடுவார்; கொடுத்தால் சாப்பிட்டுவிடுவார் என்று தந்தை பெரியார் அவர்களைப்பற்றி அன்னை மணியம்மையார் அவர்கள் மிகவும் சரியாகவே கணித்தவர்கள். அந்த வகையில் அய்யா அவர்களின் உடல்நலனைப் பேணுவதில் அம்மா அவர்கள் கண்டிப்பானவர்களாக இருந்தார்கள் என்பது தாம் ஏற்றுக்கொண்ட பணியின் கடமையின் செயல்பாட்டுக்கும் பெருமை சேர்க்கக் கூடியதேயாகும்.
மணியம்மையார் இயக்கத் தொண்டுக் கென்றே என்னிடம் வந்த 20 ஆண்டில் எனது வீட்டு வசதிக்கான பல காரியங்களுக்கு தேவைக்கு உதவி செய்து வந்ததன் காரணமாக என் உடல்நிலை எப்படியோ என் தொண்டுக்குத் தடையில்லாமல் நல்ல அளவுக்கு உதவி வந்ததால், என் உடல் பாதுகாப்பு, வீட்டு நிருவாகம் ஆகியவற்றில் எனக்குத் தொல்லை இல்லாமல் இருக்கும் வாய்ப்பை அடைந்தேன் (விடுதலை, 15.10.1962) என்கிறார் தந்தை பெரியார்.
தந்தை பெரியார் அவர்களின் கடைசி 30 ஆண்டுகால பொதுவாழ்க்கை என்பது மிகவும் புரட்சிகரமானது.
பொதுவாக வயது ஏற ஏற சோர்வு ஏற்படுவதும், தளர்ச்சி அடைவதும், கொள்கைகளில் சமரசம் காண்பது என்பதும் இயல்பாக நாட்டில் நடக்கக்கூடியதுதான், காணக்கூடியதும்கூட!
ஆனால், தந்தை பெரியார் இதற்கு முற்றிலும் விதிவிலக்கு. பிள்ளையார் உடைப்பு, ராமன் படம் எரிப்பு, குலக்கல்வி எதிர்ப்பு, தேசியக்கொடி எரிப்பு அறிவிப்பு, ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு எரிப்பு, தமிழ்நாடு நீங்கலாக இந்திய தேசப்பட எரிப்பு என்று பீறிட்டுக் கிளம்பிய எரிமலையாக அமைந்தது தந்தை பெரியார் அவர்களின் கடைசி 30 ஆண்டுகாலம்.
சுற்றுப்பயணங்களும் இந்தக் காலகட்டத்தில் மிகக் கடுமையானதாகவே இருந்து வந்திருக்கின்றன.
இவ்வளவையும் தந்தை பெரியார் அவர்களால் செய்ய முடிந்திருக்கிறது என்றால், அவற்றின் பின்புலமாகவும், பலமாகவும் இருந்திருக்கிறார் அன்னை மணியம்மையார் என்பதுதான் உண்மை.
தந்தை பெரியார் அவர்களின் உடல் ஒத்துழைப்பு என்ற ஒன்று மட்டும் இல்லாதிருந்தால், இந்தத் தீவிரமான பணிகளிலும், பிரச்சாரத்திலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்க முடியாது.
என் உடல்நிலை எப்படியோ என் தொண்டுக்குத் தடையில்லாமல் நல்ல அளவுக்கு உதவி செய்து வந்தார் மணியம்மையார் என்று தந்தை பெரியார் கூறியதற்கான பொருள் இதுவே!
கல்வி நிறுவனங்களையும் இந்தக் காலகட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் தொடங்கியதால், அவற்றின் பொறுப்பையும் கூடுதலாகச் சுமக்கும் ஒரு நிலையும் அம்மா அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது.
கைவிடப்பட்ட குழந்தைகளை மருத்துவமனையிலிருந்து கொண்டு வந்து தன் மடியிலும், தோள்களிலும் அந்தப் பச்சிளங் குழந்தைகளைச் சுமந்து வளர்த்தெடுத்தது என்பதெல்லாம் சாதாரணமானதல்ல!
பொதுத்தொண்டின் முழு பரிமாணம் என்பது என்ன என்பதை இந்த இரு தலைவர்களின் வாழ்வுமூலம் அறிந்துகொள்ளலாம்.
அதனால்தான் பல்கலைக் கழகத்திற்குக்கூட பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் என்னும் பெயரைச் சூட்டினார் தமிழர் தலைவர்.
தந்தை பெரியார் மறைவிற்குப் பிறகும், தந்தை பெரியார் வைத்த நம்பிக்கைக்கு ஒளியூட்டும் வகையில், பெருமை சேர்க்கும் வகையில் கழகத்தை நடத்திக் காட்டிய சாதனையும் அன்னையாரைச் சார்ந்ததாகும்.
இத்தகைய வரலாற்று வீராங்கனை எளிமை, அடக்கம் எனும் இரு கால்களால் நடந்துகாட்டி, பொதுவாழ்வின் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
அம்மா அவர்களின் நினைவு நாளில் அவர்தம் வரலாற்றுப் பாதையை அரிமா பார்வையுடன் நோக்கி, நாம் நமது இலட்சியப் பயணத்தைத் தொடர்வோமாக!
வாழ்க தந்தை பெரியார்!
வாழ்க அன்னை மணியம்மையார்!
----------------------- "விடுதலை” தலையங்கம் 16-3-2010
3 comments:
பெரியார் அவர்களால் கண்ணீர்த்துளிகள் என்றும் கூத்தாடிகள் என்றும் வர்ணிக்கப்பட்ட dmk மற்றும் admk பொறிக்கிக்ககளுக்கு அவர் ஜால்ரா அடித்தது அவருடைய கடைசி கால சாதனை.
அரசு ஊழியர்களுக்காக வாதாடும் இடதுசாரி தொழில்சங்கங்களை கேட்டுக்கொள்கிறேன்,(அந்தகாலத்து சிவ.இளங்கோ தலைமை மாதிரி சங்கங்களை அல்ல)உங்கள் உறுப்பினர்களை பொதுமக்களிடம் குறிப்பாக ஏழை எளிய மக்களிடம் கனிவாகவும்,பொறுப்புடனும் நடக்க வலியுறுத்துங்கள்.
ஜால்ரா அடிக்க வேண்டிய அவசியம் பெரியாருக்கு என்றுமே இருந்ததில்லை.
உங்களின் பார்வையில் தான் கோளாறு உள்ளது. சரிப்படுத்திக் கொள்ள நிறைய படிக்க வேண்டும்.
Post a Comment