சர். ஏ.டி. பன்னீர்செல்வம
்
சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் பார்_அட்லா அவர்களின் நினைவு நாள் இந்நாள் (1940).
இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்குமுன் லண்டன் சென்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்து, பார்_அட்லா படித்து வந்தார் என்றால், அது என்ன சாதாரணமா?
சிறிது காலம் தஞ்சையில் வழக்குரைஞர் பணி ஆற்றினார் என்றாலும், எங்கு பார்த்தாலும், பார்ப்பனர் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்ததைக் கண்ட பன்னீர்செல்வம் அவர்கள் நீதிக்கட்சியில் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டார். பிறகு தந்தை பெரியாரின் தலைமையை ஏற்று சுயமரியாதை இயக்கத்தில் தம்மைப் பிணைத்துக் கொண்டார்.
1929 இல் செங்கற்பட்டில் கூடிய சுயமரியாதை மாகாண மாநாட்டில் சுயமரியாதை இயக்கத்தின் துணைத் தலைவராக இவர் தேர்வு செய்யப்பட்டார். இரண்டாம் நாள் நடைபெற்ற பார்ப்பனர் அல்லாத வாலிபர் மாநாட்டுக்கு (18.2.1929) தலைமை வகித்து சங்கநாதம் செய்தார் பன்னீர்செல்வம்.
தஞ்சாவூர் மாவட்டத் தலைவராக இருமுறை இருந்து அரும்பணியாற்றினார்.
அவர் அந்தப் பொறுப்பில் இருந்தபோதுதான் திருவையாற்றில் பார்ப்பனர்களுக்காக மட்டுமே நடத்தப்பட்ட சமஸ்கிருதக் கல்லூரியின் பெயரை அரசர் கல்லூரி என்று பெயர் மாற்றம் செய்து தமிழில் புலவர் படிப்புக்கும் வழி செய்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ராசாமடம், ஒரத்தநாடு ஆகிய இடங்களில் இருந்த விடுதி-களைச் சீர்திருத்தி, பார்ப்பனர் அல்லாத மாணவர்களும் தங்கிப் படிக்க ஏற்பாடு செய்-தார். அந்தக் காலகட்டத்தில் இந்த இரு விடுதிகளும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்-பட்ட மாணாக்கர்கள் தங்கிப் படித்து கல்வி பெறும் நல்-வாய்ப்பினைக் கொடுத்தது.
நீதிக்கட்சி அமைச்சரவையில் அமைச்சராகவும் பணிபுரிந்துள்ளார். தஞ்சாவூர் நகராட்சித் தலைவராகவும் இருந்திருக்கிறார்.
நீதிக்கட்சி தோற்று பெரிய நெருக்கடிக்கு ஆளானபோது, கட்சிக்குப் புதிய தலைவர் தேவை அதுவும் பெரியார்தான் அதற்குத் தகுதியானவர் என்று கூறி 28.11.1938 இல் கூடிய நீதிக்கட்சிக் கூட்டத்தில் முத்தையா செட்டியார் முன்மொழிய, அதனை வழிமொழிந்தவர் செல்வம் ஆவார்.
சென்னையில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டுக்குத் (29.12.1938) தலைமை வகிக்க வேண்டிய பெரியார் சிறையில் இருந்ததால், பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். அவருக்கு அணிவிக்கவந்த மாலையைக் கையில் வாங்கி, என் தோளுக்கு வந்த மாலையை தலைவர் பெரியார் தாளுக்குச் சூட்டுகிறேன்! என்று கூறி, அங்கு வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் படத்துக்கு அணிவித்து மகிழ்ந்தார். இங்கிலாந்தில் உள்ள இந்திய அமைச்சருக்கு ஆலோசனைக் குழு உறுப்பினராக செல்வம் தேர்வு செய்யப்பட்டார். அவர் சென்ற அனிபா விமானம் ஓமான் கடலில் விழுந்தது. அரிய செல்வத்தை நாடு பறிகொடுத்தது! (வயது 52).
அவர் மறைவையொட்டி காலம் சென்ற பன்னீர்செல்வமே என்று தந்தை பெரியார் குடிஅரசில் எழுதிய அந்தக் கட்டுரையை இன்று படித்தாலும் கண்ணீர், வெள்ளம்போல் பெருக்கெடுக்கும் _ அது ஒரு சகா இரங்கல் இலக்கியம்.
--------------- மயிலாடன் அவர்கள் 1-3-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
குறிப்பு: ஏ.டி. பன்னீர்செல்வம் நூற்றாண்டு விழாவை திருவாரூரில் பேரணி நடத்தி (1.6.1988) திராவிடர் கழகம் சிறப்புடன் கொண்டாடி மகிழ்ந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments:
Post a Comment