ஒரே தரம்! பல நிறம்!
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசம் சித்ரகூடப் பகுதியிலிருந்து பஞ்சம் பிழைக்க டில்லிக்கு வந்தான் சிவமூரத் திவிவேதி என்பவன். பெயர்தான் திவிவேதி (இருவேதம் படித்தவன்). தொடக்கப் பள்ளிப் படிப்பு மட்டுமே படித்தவன். என்ன வேலை கிடைக்கும்? காவலர் வேலைதான் கிடைத்தது. பார்க் ராயல் ஓட்டலில் காவலர் வேலை. ஊதியம் போதாத நிலையில் வேறு வேலை தேடினான். கிடைத்ததோ பகுதிநேர வேலைதான். உடம்பு பிடித்து விடும் வேலை. கவுரவமாகச் சொல்லவேண்டும் என்றால் மசாஜ் வேலை.
1997 இல் மசாஜ் வேலையில், பாலியல் தொழிலில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டான். மறு ஆண்டில் மேலும் ஒரு வழக்கில் சிக்கினான். இந்த முறை திருட்டுக் குற்றம்.
இந்தக் கிரிமினலுக்கு மாமா வேலை பார்க்கும் இரண்டு பேர்களின் சகவாசம் ஏற்பட்டது. பாலியல் தொழிலுக்குப் பெண்களை ஏற்பாடு செய்யும் தொழிலில் கொடிகட்டிப் பறந்தவர்கள் இருவரும். திவிவேதியும் இத்தொழிலில் ஈடுபட்டுப் பேரும் புகழும் பணமும் பெற்றான்.
புரோக்கராக இருப்பதை விட முதலாளியாக இருப்பது கொழுத்த லாபம் தருமே என்று திட்டம் போட்டான். வெற்றிகரமான முதலாளி ஆவதற்கு வேடம் போட்டால் நன்றாக இருக்கும் என்று எண்ணினான். அவன் போட்ட வேடம் சாமியார் வேடம்.
இச்சுதாரி சாந்த் சுவாமி பீமானந்த்தஜி மகராஜ், சித்ரகூடம் என்று திவிவேதி வேடம் புனைந்து பெயர் வைத்துக் கொண்டான்.
இவனுடைய விபச்சார விடுதியின் வணிகம் செழிப்பாக வளர்ந்து வந்த நிலையில் மாட்டிக் கொண்டான். சங்கிலித் தொடராக விபச்சார விடுதிகளை நடத்தியதில் 60 கோடி ரூபாய்க்கு மேல் அள்ளிக் குவித்த குற்றத்திற்கான வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவனது வாடிக்கையாளர்கள் அனைவரும் பெரும் பணக்காரர்கள். பாலியல் தொழிலாளிகள் அனைவரும் அழகிகள். தொலைக்காட்சி நடிகைகள், வானூர்திப் பணிப் பெண்கள், அயல் நாட்டு விமானப் பெண்கள் என அனைவருமே அளவுக்கு அதிகமாக சம்பாதிப்பவர்கள். அவர்களே பணக்காரர்கள் எனும் நிலையில், பணத்திற்காக தொழிலுக்கு வந்தவர்கள் அல்ல. சதைத் தினவு தீர்வதற்காக வந்தவர்களாம்.
39 வயதான திவிவேதி எப்போதுமே தனியாக இருக்கும் இளம் பெண்களையே பிடிப்பானாம். பணி செய்பவர்கள், கல்லூரியில் படிப்பவர்கள் போன்ற பெண்களை நோட்டம் விட்டுப் பிடித்துப் பரிசுப் பொருள்களைக் கொடுத்து அசத்தி மடக்கி விடுவானாம். ஓர் இரவுக்கு பெண்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை தருவானாம்.
இவனுக்கு சிம்லா, புனே, பெங்களூரு, வாரணாசி, லக்னவ் போன்ற பெருநகரங்களில் நிறைய சொத்துகள் உண்டு. பயங்கர கிரிமினல் தாதா சிவகுமார் படேல் என்பவனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவன். படேல் என்கவுண்டரில் செத்துப் போனானன். திவிவேதி கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறான்.
திவிவேதி படிக்காதவன், இவனது ஜாதியில் எவனோ வேதம் படித்த காரணத்தினால் இரண்டு வேதம் படித்ததால் திவிவேதி என்று பெயர். அது இவனுக்கும் ஒட்டிக் கொண்டு தொடர்கிறது. ஆனால் இவனுக்குத் தெரிந்தது இரண்டு வேதங்கள் என்றே கூறலாம்.
ஒன்று செக்ஸ், மற்றது பணம்.
*************************************************************
ஆந்திர ஆபாசம்
இவன் வேறு ஒரு நித்யானந்தா. இவன் பெயர் ஏ.ஏகாம்பரேசுவர ராவ். ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் லக்காவரம் கிராமத்தில் 14 ஏக்கர் நிலம் உள்ளவன். அங்கே இவனது ஆசிரமம் உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணா மாவட்டப் பகுதியிலிருந்து லக்காவரம் வந்தவன். வாஸ்துசாஸ்திர நிபுணன் எனப் புளுகி, ஜோசியம், மருத்துவம் எனப் பல பித்தலாட்டங்களையும் செய்து பணம் பார்த்தவன். தன்னுடைய அமானுஷ்ய சக்தியால் எந்த நோயையும் குணப்படுத்தி விடுவேன் எனப் புளுகுபவன்.
இவன் அய்தராபாத் நகரின் சன்த் நகர் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துத் தங்கி வருவது வாடிக்கை. அங்கே பல பெண்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். ஆபாச நீலப்படப் பிடிப்பு நடப்பதாகவும் செய்திகள் உலவின. நித்யானந்தாவே பல பெண்களுடன் உடலுறவு கொள்ளும் காமாந்தகாரன். வயதோ 51 தான்.
அவன் வீட்டில் ஒரு நள் காவல் துறையினர் நுழைந்து சோதனையிட்டனர். நடந்தது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு. பெட்டி, பெட்டியாக சுககரா 50 எனும் மாத்திரைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. ஆபாச சினிமாப் படக் குறுந்தகடுகள் நிறைய கிடைத்தன. நிறைய கள்ள ரூபாய் நோட்டுகள், புலிநகம், சிறுத்தைத் தோல் முதலியவையும் கைப்பற்றப்பட்டன. இந்த மாத்திரைகள் ஆண்மைக் குறைவை ஈடு செய்யும் வீரியம் தருபவை. இவனுக்குப் பெயர் வந்ததே, இவன் நடத்திய யாகங்களால்தான். ஆயிரக்கணக்கிலான இவனது சீடர்கள் இவனது பெருமைகளைப் பேசிப் பரப்பி வந்தனர். இந்தச் சீடர்களில் பெரும்பாலோர் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும்தான்.
2008 இல் அரசு அருங்காட்சியகத்தில் புகுந்து திருட முயன்ற இரண்டு திருடர்களைக் காவல் துறை பிடித்து விசாரித்தது. ஏற்கெனவே நித்யானந்தாவின் ஆசிரமத்தில் 4 லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்த குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.
கொள்ளையடித்த பணத்தைத் திருடர்கள் அனுபவிக்க முடியவில்லை. காவல்துறையினர் கைப்பற்றிக் கொண்டார்களோ என அய்யப்பட வேண்டாம். அவை அனைத்தும் கள்ளக் கரன்சிகள்.
திருடர்கள் கம்பிக் கதவுக்குப் பின்னால், சாமியார் நித்யானந்தாவும் கம்பிக் கதவுக்குப் பின்னால் இருந்து தற்போது ஜாமீனில்!
*****************************************************
உடுப்பி உலுத்தன்
கருநாடக மாநிலம் உடுப்பியில் பரயாய மடத்தின் தலைவர் லட்சுமிவரதீர்த்த சாமிஜி என்பவன். இவன் மடத் தலைவனானதே ஒரு கதை. இவனது அண்ணன் ஆர்யா என்பவன்தான் பிரம்மச்சர்யம் கடைப்பிடித்து வந்தவன். மடத்தின் தலைவனாக வரவேண்டிய நிலையில் திடீர் என்று பிரம்மச்சரியத்தைக் கைவிட்டு கிருகஸ்தனாகி விட்டான். அடுத்து அவன் தம்பிக்கு சன்யாசம் தந்து மடத்தில் சேர்த்தபோது அவன் சிறுவன். அய்ஸ்கிரீமும் சாக்லேட்டும் தந்து ஆசை காட்டிச் சடங்குகளைச் செய்தனர்.
உடுப்பியில் உள்ள சிரூர் மடாதிபதியாக ஆக்கப்பட்டபோது அவனுக்கு வயது 14 மட்டுமே. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பரயாய பீடத்தின் தலைவராக மூன்றாம் முறையாக நியமிக்கப்பட்டான். இந்தி யோக்கியனுக்குக் கடந்த 15 ஆண்டுகளாக ஒரு பெண்ணுடன் தொடர்பு. அவளின் பெயர் சாரதா. இந்தத் தம்பதிகளுக்கு ஓர் ஆணும் பெண்ணும் குழந்தைகள். ஆண், உடுப்பி, மாதவ கிருபை பாடசாலையில் படித்து வருகிறான். மகள் பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை. மகன் பெயர் விஷால்.
மடாதிபதிக்கு நவநாகரீக உடை அணிந்துகொண்டு அடிக்கடி பெங்களூரு போய் வரும் பழக்கம் உண்டு. பெங்களூரில் தோல் இசைக் கருவிகள் வாசிப்பதிலும் நீந்துவதிலும் நேரத்தைச் செலவிடுவார். நீச்சல் அடிப்பது நீரில் மட்டும் அல்ல, விஸ்கியிலும்தான்.
*****************************************************
மலையாள மனோகரன்
இந்தியாவின் பைத்தியக்கார விடுதி என்றார் கேரளாவை! சொன்னவர் வீரத் துறவி(!) விவேகானந்தர். அதை எண்பிப்பது போல அமிர்த சைதன்ய சுவாமியின் திருவிளையாடல்கள்.
சந்தோஷ் மாதவன் எனும் ஆள் துபாய்க்குப் பிழைக்கப் போனான். போன இடத்தில் ஃபிராடு செய்து மாட்டிக் கொண்டான். கைதாகும் நிலையில் தப்பி ஓடி வந்துவிட்டான்.
வழக்கம் போலவே, தாடி, மயிர் வளர்த்துக்கொண்டு சாமியார் ஆகிவிட்டான். கொச்சிக்குப் பக்கத்தில் பொன்னக்கரை எனும்இடத்தில் ஆசிரமம் வைத்தான். வழக்கம்போலவே பெண்கள் வந்தனர், தங்கினர். அவர்களில் 15 வயதுச் சிறுமியைப் பாலியல் உறவு கொண்டு, அதனைப் படமும் பிடித்துச் சினிமாவாக்கினான். அவள் தந்த புகாரின் பேரில் 2006 இல் ஆசிரமம் சோதனையிடப்பட்டது.
இவன் ஓர் அறக்கட்டளை தொடங்கி நடத்தி இருக்கிறான். அறக்கட்டளைக்குத் தேவை என்று நிலம் குறைந்த விலைக்குப் பேசி முடிப்பான். பத்திரப் பதிவு அறக்கட்டளையின் பேரில் நடக்காது. வேறு நபர்களின் பெயரில் பதிவு நடக்கும். உள்விவகாரம் என்னவென்றால் குறைந்த விலைக்குப் பேசி முடித்த சொத்தினை அதிக விலைக்கு மூன்றாம் நபர்களுக்கு விற்பனை செய்து இவன் காசு பார்த்து-விடுவான்.
இந்தத் தொழிலில் இவனுக்கு ஏராள நண்பர்கள். அரசியல் வாதிகள், அதிகாரவர்க்கத்தினர் இதில் அடங்கும். கொச்சி நகரில் ஓர் ஆசிரமம் அமைத்தான். சாந்திதீரம் என்று பெயர் வைத்தான். தன் காமாந்தகாரக் காரியங்களுக்காகவும் பித்தலாட்டப் பிழைப்புக்காகவும் இந்த இடம். இங்கே வந்து, தங்கிப் போகும் ஆள்கள் முழுக்க அரசியல்வாதிகளும், காவல் துறை உயர் அதிகாரிகளுமே.
சந்தோஷ் மாதவன் மாட்டிக்கொண்டு 22 மாதங்களாகிவிட்டன. அரசியல்வாதிகளும் காவல் அதிகாரிகளும் மாட்டவில்லைஇன்னும்.
*******************************************************
செத்தும் கெடுப்பான்
ஒரிசா மாநிலத் தலைநகரம் புவனேஸ்வரின் முக்கிய மய்யப் பகுதி. ஒன்றரை ஏக்கர் நிலம் சாமியார் ஒருவனுக்கு மாநில அரசால் வழங்கப்பட்டது. சாமியாரின் பெயர் ஜி (நி) பாபா. ஆசிரமும் ஆஸ்பத்திரியும் கட்டினான். மருத்துவம் பார்த்துக் கொள்ள வந்தவர்களை விட, அமைதி தேடியும், பொழுதைப் போக்கவும் வந்த பக்தர்களின் எண்ணிக்கைதான் ஏராளம்.
அரசியல் கட்சித் தலைவர்கள் சுயலாபத்திற்காக பாபாவின் தலைக்குப் பின்னால் ஓர் ஒளிவட்டத்தை உருவாக்கினர். அவன் முகத்தில் தெய்வீக தேஜஸ் எப்போதும் ஒளி வீசிக் கொண்டிருக்கிறது என்று கதை கட்டிவிட்டார்கள். நம்பிய மூடர்கள் வரிசையில் நின்று வணங்கிப் பணத்தைக் கொட்டினார்கள்.
பார்த்தார் ஒரு பத்திரிகையாளர். ஆள்களை அமர்த்தினார். சீடர்களே சிக்கினர். அவர்களின் உதவியுடன், ஒத்துழைப்புடன், ரகசிய கேமிரா கொண்டு மடத்தின் உள் நடவடிக்கைகளைப் படம் பிடித்தார். பத்திரிகையில் வெளியிட்டார். ஆன்மசுகம் தருபவை என்னென்ன என்பதைப் படம் பிடித்துக் காட்டினார். சாமியாரின் அயோக்கியத் தனங்களை அறிந்து கொண்டோர், அடிக்க வந்தனர். அரசாங்கமும் விழித்துக் கொண்டது.
சாமியார் அம்பேல். கல்கத்தாவுக்கு ஓடிப் போனார். அங்கேதான் பாபாவுக்குத் தலைமையகம். பல ஆண்டுக் காலம் அஞ்ஞானவாசம். மக்களின் ஞாபக மறதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற சபலம் பாபாவுக்கு ஏற்படவே, புவனேஸ்வர் திரும்பினார். பக்தர்கள் படையெடுத்தனர். பாபாவின் மோசடி வணிகம் புத்துயிர் பெற்றுத் தொடர்ந்தது. திடீர் என 2004 இல் பாபா செத்துப் போனான்.
பிறகு? அவன் சமாதி இப்போது கோயிலாகி விட்டது. செத்தும் கெடுக்கிறான்.
0 comments:
Post a Comment