Search This Blog

18.3.10

அரசு அலுவலகங்களில் மத வழிபாட்டுத் தலங்களை அமைக்கக்கூடாது

அரசு அலுவலகங்களில் மத வழிபாட்டுத் தலங்களை அமைக்கக்கூடாது
அரசின் நடவடிக்கையை அமல்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு


அரசு அலுவலகங்களில் மத வழிபாட்டுத் தலங்களை அமைக்கக்கூடாது என்ற அரசின் நடவடிக்கையை அமல்படுத்த வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் தாழையூத்து சங்கர்நகரை சேர்ந்தவர் முத்துராமன். இவர் மதுரை உயர்நீதமன்றக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறி இருந்ததாவது:-

நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், அரசு மருத்துவமனை, தாலுகா அலுவலகங்களில் இந்து கோவில்கள் இருக்கின்றன. இந்த கோவில்களில் தினமும் பூஜையும் நடத்தப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் பிரதோஷம் போன்ற சிறப்பு நாள்களில் சிறப்பு பூஜையும் நடத்தப்படுகிறது. அரசு அலுவலகங்களில் எல்லா மதத்தினரும் பணியாற்றுகின்றனர். எல்லா மதத்தினரும் தங்களது பணிகளுக்காக அரசு அலுவலகங்களுக்கு வந்து செல்கின்றனர்.

இதுபோன்ற சூழ்நிலையில் அரசு அலுவலகங்களில் இந்து கோவில்கள் மட்டும் அமைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுவது பிற மதத்தினரை புண்படுத்துவது போன்றதாகும். அரசு அலுவலக வளாகங்களில் மத வழிபாட்டுத் தலங்களை அமைக்கக்கூடாது என்று அரசு ஏற்கெனவே ஆணை பிறப்பித்துள்ளது.

இந்த ஆணை அரசு அலுவலகங்களில் அமல்படுத்தப்படுவது இல்லை. எனவே இந்த ஆணையை அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் இந்த ஆணை பின்பற்றப்படுவதைக் கண்காணிக்க மாவட்ட அளவில் குழு அமைக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எப்.எம்.இப்ராகிம் கலிபுல்லா, கே.பி.கே.வாசுகி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

அரசு அலுவலகங்களில் மத வழிபாட்டுத் தலங்களை அமைக்கக்கூடாது என்று ஏற்கெனவே அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டியது அரசின் கடமை. ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அதை அமல்படுத்த அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசு அலுவலக வளாகங்களில் மத நல்லிணக்கம் பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.


------------------ நன்றி:-”விடுதலை” 18-3-2010

0 comments: