Search This Blog

14.3.10

பெண்களின் கவனம் மனுவாதிகளின் பக்கம் திரும்பும் நாள் எந்நாளோ!

மனுவாதி பக்கம் திரும்புக!


கேள்வி: பெண்களைப் பற்றி உங்களின் உண்மையான அபிப்பிராயம் தான் என்ன?

பதில்: உயர்ந்தவர்கள். அப்படி இருக்க விருப்பம் இல்லாதவர்கள். (18-.3.-2009)

கேள்வி: பெண்களுக்கு சமஉரிமை என்றால் உங்களுக்கு ஏன் கசக்கிறது?

பதில்: யார் இப்படியெல்லாம் என்னைப் பற்றி புரளி கிளப்பி விடுகிறார்களோ, தெரியவில்லையே! பெண்களுக்குச் சம உரிமை தேவைதான். மாமியார், மருமகள் ஆகியோருக்குச் சம உரிமை வந்தால், அது வரவேற்கத் தக்கதுதான். (22-.-4.-2009)

கேள்வி: பெண்களிடம் எதைக் கற்றுக் கொள்ள வேண்டும்?

பதில்: என்ன தவறு செய்தாலும், அந்தத் தவறை தான் செய்யாதது போலவும், மற்றவர்கள்தான் அதற்குக் காரணம் என்பது போலவும் நடந்து கொள்கிற திறமை, அதைக் கற்றுக் கொண்டால் ஆண்களும் கூட நிம்மதியாக இருக்கலாமே? (20-.5.-2009)

கேள்வி: மத்திய அமைச்சரவையில் பெண் அமைச்சராக தமிழகத்திலிருந்து ஒருவர் கூட நியமிக்கப்படவில்லையே?

பதில்: தப்பித் தவறி ஏதாவது நல்லது நடக்கிற மாதிரி தெரிந்தால் போதும் உங்களைப் போல் பலருக்கு ஆட்சேபம் வந்துவிடுகிறது. யார் கண்டது? உங்கள் குறை தீராது என்று சொல்லிவிட முடியுமா என்ன? குடும்பத்தில் சமநீதி காண்பதற்கு வழி பிறந்தால், உங்கள் குறை நீங்கிவிடலாமே! (17-.6-.2009)

கேள்வி: மக்களவையில் மகளிருக்காக இட ஒதுக்கீடு மசோதா நூறு நாள்களுக்குள் நிறைவேற்றப்படும் என்று குடியரசுத் தலைவர் தனது உரையில் கூறியுள்ளாரே?

பதில்: சில தண்டனைகள் சொன்னபடி நடப்பதில்லை. அஃப்ஸல் தூக்குத் தண்டனை அப்படியே பெண்டிங் ஆக இருக்கிறதே? அந்த மாதிரி இதுவும் தொங்கலில் விடப்பட்டால்தான் உண்டு. (24-.6.-2009)

கேள்வி: மக்களவை சபாநாயகர் பெண் என்றால் இனி அமளியின்றி சபை நடைபெறுமா?

பதில்: ஒரு வீட்டில் பெண்கள் அதிகாரம் ஓங்கி இருந்தால், அந்த வீட்டில் அமளி, துமளி இல்லாமல் போய்விடுமா? அந்த மாதிரிதான் இதுவும். (1-.7.-2009)

கேள்வி: இந்தியாவில் உள்ள 617 ஹைகோர்ட் நீதிபதிகளில் 45 பேர்தான் பெண் நீதிபதிகளாக உள்ளனர். மேலும் 6 ஹைகோர்ட் நீதிபதிகளில் ஒரு பெண் நீதிபதி கூட இல்லை. அதே போல் சுப்ரீம் கோர்ட்டிலும் ஒரு பெண் நீதிபதி கூட இல்லை. இது குறித்து தங்கள் கருத்து என்ன? (டைம்ஸ் ஆஃப் இந்தியா. 3.-8.-2009)

பதில்: நாடு சுதந்திரம் அடைந்தபோதும், அதைத் தொடர்ந்து சில வருடங்களிலும் பெண் நீதிபதிகளே இருந்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். இப்பொழுது 45, 61 என்றெல்லாம் கணக்கு வருகிறது. சரி, சுதந்திரம் அடைந்தபோதும், அதைத் தொடர்ந்து சில ஆண்டுகளிலும், நீதித் துறையிடம் மக்களுக்கு இருந்த நம்பிக்கை இப்பொழுது இருக்கிறதா? நீதித் துறையில் பெண்களின் எண்ணிக்கை வளர்ந்து என்ன முன்னேற்றம் காணப் பட்டது? அந்த எண்ணிக்கையை அதிகமாக்குவதால், மேலும் என்ன முன்னேற்றம் வந்து விடும்? (2-.9-.2009)

கேள்வி: பெண்கள் சிறப்பு ரயில் திட்டம் பெண்கள் இட ஒதுக்கீட்டுக்கான அச்சாரம் என்று ப.சிதம்பரம் கூறுகிறாரே?

பதில்: அப்படியானால் சிறப்பு ரயில் ஓட்டாமலேயே, இத்தனை காலமாக பெண்கள் பலர் எம்.பி., எம்.எல்.ஏ. பதவிகளைப் பெற்றிருக்கிறார்களே, அதெல்லாம் என்ன? கள்ளப் பயணம் மாதிரி, அதுவும் கள்ளப் பதவிகளா? (2-.9.-2009)

கேள்வி: பெண்களால் ரகசியத்தைக் காப்பாற்றவே முடியாது என்று இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளதே?

பதில்: பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே, மஹாபாரதத்தில், இது மிகத் தெளிவாகச் சொல்லப் பட்டிருக்கிறது. அது ஆண் ஆதிக்கத் தீர்ப்பு; இன்று சொல்லப்பட்டிருப்பது, ஆராய்ச்சியின் முடிவு. அதை ஏற்காதவன் மூடநம்பிக்கையில் உழல்பவன். (14.-10.-2009)

கேள்வி: பெண்கள் நாட்டின் கண்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

பதில்: இருக்கலாம். அந்தக் கண்களின் பார்வையைச் சரி செய்கிற மூக்குக் கண்ணாடிகள்தான் ஆண்கள் என்பதும் சரியாக இருக்கலாமே! (4-.11.-2009)

கேள்வி: கருநாடகாவில், ஷோபாவின் அமைச்சர் பதவி தியாகத்தாலும், பா.ஜ.க. மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் செய்து வைத்த சமரசத்தாலும் கருநாடக பா.ஜ.க. அமைச்சரவையின் சிக்கல் தீர்ந்துள்ளதே? பெண்களின் பெருமை இப்போதாவது தங்களுக்குப் புரிந்திருக்குமே?

பதில்: புரிகிறதே! ஒரு பெண்மணி தன் பதவியைவிட்டு விலகுவதாலும், மற்றொரு பெண்மணி தனக்கு எந்தப் பதவியையும் நாடாமல் சமரசம் தேடியதாலும் பிரச்சினை தீர்ந்திருக்கிறது. அதாவது பெண்களில் பதவியை நாடாமல் இருக்கிற வரை பிரச்சினைகள் தீர வழியுண்டு. இதைத்தானே நீங்கள் சுட்டிக் காட்டுகிறீர்கள். புரிகிறது. (2-1.2.-2009)

மேற்கண்ட கேள்வி பதில்கள் எல்லாம் இடம் பெற்ற பத்திரிகை எதுவாக இருக்க முடியும்?

21 ஆம் நூற்றாண்டின் மனுவின் தத்துப் புத்திரனாக இருக்கக்கூடிய திருவாளர் சோ ராமசாமியின் துக்ளக்கில் எழுதப்பட்டவைதான் இவை.

இவை ஒவ்வொன்றிற்கும் தனியே பதவுரை, பொழிப்புரை, கருத்துரை தேவைப்படாது.

பட்டப்பகலில் சூரியனுக்கு விலாசமா தேவை?

பார்ப்பனர்களா?

பழைய காலமெல்லாம் மாறிவிட்டது

இன்றைக்கு எவ்வளவோ மாற்றம்

எவன் அவுட்டுத்திரி வைத்திருக்கிறான்?

எவன் பஞ்சகச்சம் வைத்துக் கட்டுகிறான்?

காலமாற்றம் அவர்களையும் விட்டு வைக்கவில்லை என்று அவாளுக்காக வக்காலத்து வாங்கும் ஆசாமிகள் நம்மவாளிடத்திலே உண்டு.

மாற்றமா? அது வெளிப்புறத்தில்தான்.

தோற்றத்திலும் மாற்றம் இருக்கிறது. மறுக்கவில்லை.

ஆனால் உள்ளத்தில் மாற்றம் உண்டா? எண்ணத்தில் ஏற்பட்டுவிட்டதா மாற்றம்? சிந்தனையில் சிறிதாவது முன்னேற்றம் உண்டா என்றால் இல்லை - இல்லவே இல்லை என்பதற்கு ஆணி அடித்தாற் போன்ற எடுத்துக் காட்டுதான் மேலே எடுத்துக் காட்டப்பட்டவை.

எந்த ஓர் இடத்திலாவது பெண்கள் என்றால் அவர்களுக்கு மனிதக் கூறுதான் என்று ஏற்றுக் கொள்ள இடம் இருக்கிறதா?

பெண்கள் உயர்ந்தவர்கள்தானாம். ஆனால் இப்படி இருக்க விருப்பம் இல்லாதவர்களாம்.

உயர்ந்தவர்களாக இருக்க விருப்பம் இல்லாதவர்கள் எப்படி உயர்ந்தவர்களாக இருக்க முடியும்?

இப்படி ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் அந்தர் பல்டி அடிக்கும் ஆசாமிகள்தான் அவாள் அகராதியில் அறிவாளியோ அறிவாளி!

ஒரு முறை பின்பொறியால் சிரித்துத் தொலையுங்கள்.

இதில் ஒரு வெட்கக்கேடு என்ன தெரியுமா?

இவ்வளவு இழிவாகப் பெண்களை இந்தப் பார்ப்பான் விமர்சித்திருந்தாலும், கொச்சைப் படுத்திக் கூவினாலும், முற்போக்கு முத்திரை குத்தி அலையும் எந்தப் பெண்கள் அமைப்பும் அது பற்றியெல்லாம் மூச்சு விடுவதில்லை. ஒரு கண்டன அறிக்கைகூட கொடுப்பதில்லை.

திராவிடர் கழகம்தான் தீயாக எழவேண்டும். விடுதலைதான் வேங்கைப் புலியாக பாயவேண்டும்.

எழுத்துக்கு எழுத்து செம்மையாகக் கொடுக்கும் சாட்டை பெரியார் திடலில்தான் இருக்கிறது. கருஞ்சட்டைக்காரரின் கையில்தான் அது சுழன்று கொண்டே இருக்கிறது.

பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்-கீடு பற்றிய பிரச்சினையில் இருவேறு கருத்துகள் உண்டு. ஒன்று உள் ஒதுக்கீடு இல்லாத இட ஒதுக்கீடு; இன்னொன்று உள்ஒதுக்கீடு இருந்தே தீரவேண்டும் என்கிற வற்புறுத்தல்.

மூன்றாவது ஒரு கூட்டம் இருக்கிறது. அதுதான் சோ போன்ற மனுதர்ம மலத்தை மடியில் கட்டிக் கொண்டு அலையும் கூட்டம்.

தினமணி என்ற பெயர் இருக்கும்; இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற நாமம் இருக்கும்; கோயங்கா வீட்டுக் கணக்கப் பிள்ளையான குருமூர்த்தி வடிவத்திலும் இருக்கும்.

பெண்களுக்கு இடஒதுக்கீடு கூடவே கூடாதாம். அது வீண் வேலையாம். இந்தச் சட்டம் வருவதால் பெண்களுக்குப் புதிதாக ஆகப் போவது ஒன்றும் கிடையாதாம்; வெறும் கண்துடைப்புதானாம்.

பெண்கள் மீதான அக்கறை காரணமாகச் சொல்லப்படுவதா இவை? அல்ல, அல்ல. பெண்கள் மீதான வக்கிரக் குணத்துடன் வடிகட்டி எழுதப்படும் வருணாசிரமவாதிகளின் குமட்டல்கள் இவை.

டெக்கான் கிரானிக்கல் (9-.3-.2010) ஆங்கில நாளேட்டில் (பக்கம் 2 இல்) திருவாளர் சோ ராமசாமியின் பேட்டி வெளிவந்துள்ளது.

அப்பட்டமான மனுதர்மத்தின் அசல் அக்மார்க் முத்திரையுடன் கருத்துச் சொல்லியிருக்கிறார்.

சட்டமன்றங்களும், நாடாளுமன்றமும் பெண்களுக்கான சட்டங்களை இயற்றவில்லையா? பின் எதற்காக பெண்களுக்கென்று தனி ஒதுக்கீடு? அதனால் என்ன பலன் ஏற்பட்டு விடப் போகிறது?

பெண்களுக்கான தொகுதிகள் ஒதுக்கப் பட்டால் அந்த இடத்தில் யார் நிறுத்தி வைக்கப்படுவார்கள்? ஏற்கெனவே சட்ட மற்ற உறுப்பினர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களின் மனைவிமார்களோ மகள்களோதான் நிறுத்தி வைக்கப்படுவார்கள்?

தேர்ந்தெடுக்கப்படும் இந்தப் பெண்கள் ஆண்களின் பினாமியாகத் தானிருப்பார்கள் என்று மூக்கால் அழுகிறார்.

உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்ட பொழுதும் இதே கூட்டம் இந்த வகையில்தான் மண்ணை வாரி இறைத்தது.

உள்ளாட்சிகளில் பெண்கள் போய் உட்கார்ந்ததால் என்ன கெட்டுப் போய்விட்டது? எதில் தோல்வி அடைந்துவிட்டார்கள்?

வாய்ப்புக் கொடுப்பதற்கு முன்பே வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்வது ஆற்றாமையின் வெளிப்பாடு. மனுதர்ம குயுக்தியின் கோணல் புத்தி!

543 உறுப்பினர்கள் கொண்ட மக்களவையில் குறைந்த பட்சம் 181 பெண்கள் வீற்றிருக்கப் போகிறார்களே - பொறுக்குமா இந்தப் பூதேவர்களுக்கு? வீங்கி வெடித்திட மாட்டார்களா?

தங்கள் உரிமைகளுக்காக இன்னொருவரிடம் கையேந்தி நின்ற காலத்திற்குக் கல்தா கொடுக்கப் பட்டுவிட்டதே!

ஆண்களுக்கு உள்ள ஒவ்வொரு உரிமையும் தங்களுக்கும் வேண்டும் என்று ஓங்கிக்குரல் கொடுப்பார்களே அது இன்னொரு வகையில் இந்த ஈரோட்டுக் கிழவனாரின் கொள்கைக்கு அல்லவா வெற்றியாக முடியும்?

தமிழ்நாட்டைப் பீடித்த பெரியார் சரக்கு டில்லிப் பட்டணம் வரை அம்பலம் ஏறிவிட்டதே என்ற ஆத்திரத்தில் அம்மிக் குழவியை எடுத்து வயிற்றில் குத்திக் கொள்கிறது சோ கூட்டம்.

33 சதவிகிதத்துக்காகப் போராடும் பெண்களின் கவனம் இந்த மனுவாதிகளின் பக்கமும் திரும்பும் நாள் எந்நாளோ!

---------------- மின்சாரம் அவர்கள் 13-3-2010 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

1 comments:

Happy Smiles said...

Hello Friend,  Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

 
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com
 
 

(Pls ignore if you get this mail already)