Search This Blog

17.3.10

பெரியார் திடலுக்கு வரும்பொழுது தாயின் கர்ப்பக்கிருகத்திற்கு வருவது போல்...


யாரும் எங்களைப் பார்த்து பேசப் பயந்த காலத்தில் தன்னந்தனியராக துணிச்சலாக வந்து ஆறுதல் கூறியவர் மணியம்மையார் சென்னை பெரியார்திடலில் கவிஞர் கனிமொழி எம்.பி. பேச்சு

நேற்று இரவு சென்னை பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் நினைவு நாளன்று மணியம்மையார் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலை வெளியிட்டு நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர் கவிஞர் கனிமொழி பேசியதாவது:

தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் பகுத்தறிவுக் கவிஞர் கனிமொழி ஆற்றிய உரை வருமாறு:

தாயின் கர்ப்பக்கிருகத்திற்கு வருவது போல்...

இன்றைக்கு அன்னை மணியம்மையார் அவர்களுடைய நினைவு நாள் நிகழ்ச்சிக்கு, நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு அய்யா ஆசிரியர் அவர்கள் அழைத்திருக்கின்றார்கள். ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் பெரியார் திடலுக்கு வரும்பொழுது ஏதோ தாயின் கர்ப்பக்கிருகத்திற்கு மீண்டும் உள்ளே வருகிறேன் என்ற எண்ணத்தோடுதான் இங்கு வருகிறேன் (கைதட்டல்).

தந்தை பெரியார் அவர்களை நேரடியாகப் பார்க்கக்கூடிய வாய்ப்பு எனக்கு இருந்ததில்லை என்றாலும், அவருடைய கொள்கைகளைப் பற்றி ஆர்வத்தோடு படித்திருக்கிறேன். அறிந்திருக்கிறேன். பெரியாரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விழைவு எனக்கு சற்று அதிகமாகவே இருந்தது.

தந்தை பெரியார் என்ற கொள்கைச் சுடரை தெரிந்து கொள்ள எனக்குத் தூண்டுதலாக இருந்தவர் நம்முடைய ஆசிரியர் அய்யா அவர்கள்தான். என் அறிவுக்கு ஆசிரியர் அவர்தான்.

பெரியாரைப் பார்த்ததில்லை

பெரியார் அவர்களை நான் பார்த்ததில்லை என்றாலும் அன்னை மணியம்மையார் அவர்களை ஒரு சில தடவையாவது சந்திக்கக்கூடிய வாய்ப்பை நான் பெற்றிருக்கின்றேன். அவர் எந்த அளவுக்கு மென்மையான மனம் கொண்டவர், கொள்கை உறுதி கொண்டவர் என்பதை இங்கே பேசியவர்கள் எல்லாம் சொன்னார்கள். அன்னை மணியம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய நூல் ஆசிரியர் அவர்களும் குறிப்பிட்டார்கள்.

எமர்ஜென்சி என்ற கொடுமையான காலத்தில், திராவிடர் கழகத்தவர்களும், திராவிட முன்னேற்றக் கழகத்தவர்களும் சிறையில் சொல்லொணா இன்னல்களுக்கும், அல்லல்களுக்கும் ஆளானார்கள் என்பதை நான் அறிந்திருக்கிறேன். எப்படி எல்லாம் சித்ரவதைக்கு ஆளாகி பந்தாடப்பட்டார்கள் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.

நெருக்கடி காலத்தில் எங்களுடைய வீட்டிற்கு திடீரென்று ஒரு பத்துப் பதினைந்து பேர் வருவார்கள். எதற்கு வந்தார்கள் என்ன என்பது எனக்குத் தெரியாது. நான் அப்பொழுது பள்ளிக் கூடம் படித்துக் கொண்டிருந்தேன். அந்த அதிகாரிகள் யாரையும் உள்ளே விடமாட்டார்கள். என்னையும் வெளியே அனுப்பமாட்டார்கள். நானும் பள்ளிக்கூடத்திற்குப் போகவில்லை. அதிலே ஒரு மகிழ்ச்சி. ஏனென்றால் லீவு கிடைத்துவிட்டது என்ற மகிழ்ச்சி.

பூந்தொட்டியையும் சோதனை போட்டார்கள்

திடீர், திடீரென்று வருவார்கள். வீடு முழுக்க சோனையிடுவார்கள். பூந்தொட்டியைக் கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. சோதனை நடத்தினார்கள்.

என்னுடைய தாயார் ராஜாத்தி அம்மையார் அவர்களை தினந்தோறும் இன்கம்டேக்ஸ் அலுவலகத்திற்கு வரச் சொல்வார்கள். காலை முதல் மாலை வரை கேள்விமேல் கேள்வி கேட்டுத் துளைத்தெடுப்பார்கள். எனக்கு அப்பொழுது ஒன்றும் தெரியாது. நான் பள்ளிக்கூடம் விட்டு வீட்டிற்குக் கூட வரமுடியாத சூழ்நிலை.

எங்கள் வீட்டிற்கு அப்பொழுது யாரும் வர மாட்டார்கள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் கூட எங்களிடம் பேசப் பயந்தார்கள். நான், என்னுடைய தாயார், பாட்டி மட்டும் வீட்டில் இருந்தோம்.

நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் கூட அன்றைக்கு எழுதினாரே அண்ணா நினைவிடத்திற்கு வரமுடியாதவர்கள் யார் யார் என்று. நீங்கள் அதைப் படித்திருப்பீர்கள்.

அன்னை மணியம்மையார் கண்கலங்கி ஆறுதல் கூறினார்

ஒரு நாள் நான் வீட்டில் பின்புறம் விளையாடிக் கொண்டிருந்தேன். அன்னை மணியம்மையார் மட்டும் துணிச்சலாக எங்கள் வீட்டிற்கு வந்தார்கள். அவருடன் யாரும் வரவில்லை. என்னம்மா உங்கள் வீட்டைச் சுற்றிப் பார்த்தேன். யாரையும் காணவில்லை. உங்கள் அம்மா எங்கே என்று கேட்டார். அம்மா சமையல் அறையில் சமையல் செய்து கொண்டிருக்கிறார் என்று சொன்னேன்.

இது என்ன கொடுமை? வீட்டில் யாருமே துணைக்குக்கூட ஆள் இல்லையே? என்ன என்று கேட்கக் கூட ஆள் இல்லாத நிலையில் வாழ்ந்து கொண்டி-ருக்கிறீர்களா? என்று கேட்டபடி என்னை அழைத்துக் கொண்டு சென்று, வீட்டில் இருந்த எனது தாயாருக்கு அன்னை மணியம்மையார் அவர்கள் ஆறுதல் கூறினார்கள்.

ராஜாத்தி அம்மையார் கண் கலங்கினார்

என்னுடைய தாயார் ராஜாத்தி அம்மையார் அவர்களிடம் அன்னை மணியம்மையார் நினைவு நாள் நிகழ்ச்சிக்குப் போகிறேன் என்று சொன்னவுடன் என்னுடைய தாயார் கண் கலங்கி இந்த நிகழ்ச்சியைக் கூறினார்கள். அன்னை மணியம்மையார் அவர்களின் அன்பிற்குப் பின்னால் மன உறுதி உடையவராக அவர் இருந்திருக்கிறார். அப்படிப்பட்ட அன்புள்ளம் கொண்டவர்தன் அன்னை மணியம்மையார். ஒரு பெண் பதவி உச்சத்திலே இருந்தாலும் குடும்ப உறவு, பந்தம், கட்டுப்பாடு என்பவற்றிலிருந்து யாராலும் அவ்வளவு சுலபமாக வெளியே வர முடியவில்லை.

திருமணத்திற்கு வர மறுத்தார்

ஆனால் அப்படிப்பட்ட குடும்பம், உறவு இவைகளுக்கு எந்தவித முக்கியத்துவமும் தராமல் தான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்குத்தான் முக்கியத்துவம் அளித்தார். அதில் அவர் உறுதியாக இருந்தார். அதனால் தன்னுடைய கட்சிக்காரர் கொள்கைக்கு எதிராக ஆடம்பரமாகத் திருமணம் நடத்துகிறார் என்று தெரிந்தவுடன் அந்தத் திருமணத்திற்கு வர மாட்டேன் என்று சொன்ன கொள்கை உள்ளம் கொண்டவர்தான் அவர்.

பள்ளிப்படிப்பை மட்டுமே அறிந்தவர். ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். ஒரு மிகப் பெரிய கொள்கைக் கோட்பாடு கொண்ட இயக்கத்தை வழி நடத்திச் சென்றார்.

தியாகச் சுடர் மணியம்மையார்

எஃகு மனம் படைத்தவர். அதனால்தான் திராவிடர் கழகத்தை அவரால் வழி நடத்திச் செல்ல முடிந்தது. தன் வாழ்நாள் முழுக்க தந்தை பெரியாருக்காகவும், இயக்கத்திற்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தியாகச் சுடர் அவர்.

நாம் எந்த திசையிலே செல்கிறோம் என்பதை பெண்கள் புரிந்து கொள்ள முடியாத ஒரு திக்கிலேயே சென்று கொண்டிருக்கிறார்கள்; உணர்வில்லை. அதனால்தான் கோவிலுக்கும், ஆசிரமத்திற்கும் சென்று இன்று விளம்பரத்தால் வியாபாரப் பொருள்களாக, பாதிக்கப்பட்டவர்களாக ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆசிரமத்தை முன் எடுத்து நடத்தக் கூடியவர்கள் அவர்களை நம்பி வரக்கூடியவர்களுக்கு உண்மையாக இருக்கிறார்களா?

பெண்கள் போகப்பொருளா?

ஆண் இனம் பெண் இனம் கேவலப்படுத்தப்பட்ட அளவுக்கு பாதிக்கப்படவில்லை. பெண்கள் போகப் பொருள்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். பெண்களை மய்யப்படுத்தி ஊடகங்கள் அவர்களை விற்பனைப் பொருள்களாக ஆக்குகின்றன.

அதனால்தான் திராவிட இயக்கக் கருத்துக்கள் இந்த சமுதாயத்திற்குத் தேவைப்படுகின்றன.

பெண்கள் உரிமை பெற...

பெண்களுக்கு மனஉறுதியை, சமூக உரிமையை, அரசியல் உரிமையைப் பெற்றுத் தரத்தான் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் போராடிக் கொண்டிருக்கின்றன. அதனால்தான் தலைவர் கலைஞர் அவர்களுடைய வழிகாட்டுதல்படி பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பெற்றிருக்கின்றோம். பெண்கள் அரசியலில் காலடி எடுத்து வைக்கக்கூடிய சூழ்நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. பெண்கள் சமுதாயம் மாறவேண்டும் என்பதற்காகத்தான் அம்மா அவர்கள் பாடுபட்டார்கள். அத்தகைய தியாக உள்ளம் கொண்ட, மென்மை உள்ளம் கொண்ட, கொள்கை, இலட்சிய உறுதி கொண்ட அன்னை மணியம்மையாரை இன்றைக்கு நாம் போற்றிப் பாராட்டுகிறோம். இவ்வாறு கனிமொழி பேசினார்.

----------------------- " விடுதலை” 17-3-2010

0 comments: