Search This Blog

28.3.10

அஞ்சாநெஞ்சன் அழகிரி பற்றி அய்யா பெரியார்

அஞ்சா நெஞ்சன்

அஞ்சா நெஞ்சன் என்கிற அடைமொழி கழகத்தில் பட்டுக்கோட்டை கே.வி.அழகிரிசாமி அவர்களுக்கு மட்டுமே கிடைத்த அரிய பட்டம்.

முன்னாள் இராணுவ வீரரான அவர் தன்மான இயக்கக் காலந்தொட்டு தந்தை பெரியார் அவர்களின் படைவரிசையில் தன்னிகரில்லாச் சிப்பாய்.

அவர் மறைந்தபோது (28-3-1949) அவரைப் பற்றி தந்தை பெரியார் வெளிப்படுத்திய கருத்துகள்அஞ்சா நெஞ்சன் புகழ் உடலில் என்றைக்குமே தங்கி ஒளிவிடும் பதக்கங்களாகும்.

தோழர் அழகிரி நல்ல பேச்சாளர். மக்களின், சிறப் பாக இளைஞரின் அபி மானம் பெற்றவர். அவர் நல்ல செலவாளி. தனக்கென ஒரு காசும் சேர்த்துக் கொண்டவர் அல்லர். என்னைப் பற்றிப் புகழ்ந்து பேசுவதை தனது பெரும் பணியாகக் கொண்டி ருந்தார்.

அவரைப் பல முறை கண்டித்திருக்கிறேன்; கோபித்திருக்கிறேன். அவர் முன்கோபி. ஆனால் என்னிடத்தில் எந்நிலையிலும் கருத்து வேறுபாடு கொண் டது கிடையாது. அவருக்கு அடிக்கடி பணக் கஷ்டங்கள் வருவது சகஜம். அதனால் அதில் அவருக்கு எவ்வித தொல்லைகள் ஏற்பட்ட போதிலும், தன் கருத்தையோ, கொள்கையையோ, லட்சியத்தையோ, தொண்டையோ கொஞ்சம் கூட மாற்றிக் கொண்டது கிடையாது. பிடிவாதமான கட்சிப் பற்றுடன் நடந்து கொண்டார். அவரை விலைக்கு வாங்கிவிடலாம் என்று எண்ணிய எதிரிகளை ஏமாற்றியிருப்பாரே யொழிய, அவர்களின் வலையில் ஒரு நாளும் சிக்கியவர் அல்லர்

நேற்று வரை கூறி வந்த கருத்துக்கு மாறுபாடான ஒரு கருத்தை எங்கோ ஒரு இடத்தில் நான் கூறினால், அதற்காக என்னிடம் எவ்வித விளக்கமோ, சமா தானமோ எதிர்பார்க்காமல், அக்கருத்தைப் பின் பற்றியே தமது பிரச்சாரத்தை ஆரம்பித்து விடுவார் என்று தந்தைபெரியார், அழகிரி பற்றிக் கூறினார் என்றால், இது தந்தை பெரியார், அஞ்சாநெஞ்சன் அழகிரியோடு மட்டுமே சம்பந்தப்பட்ட கருத்தல்ல. ஒரு இயக்கம், தலைமை, பின்பற்றுவோர்க்கிடையே இருக்க வேண்டிய பாலத்தின் இலக்கணம் இது.

தமிழர்களிடையே உள்ள பெருங்குறை ஸ்தாபன ரீதியாகத் தொடர்ந்து பணியாற்றிடப் பழகிடாத, பக்குவப்படாத குணமாகும்.

அழகிரி பற்றி அய்யா கூறிய இந்தக் கருத்தை தொண்டர்கள் வாசிப்பது மட்டுமல்ல. சுவாசிப்பதும் முக்கியமாகும். கலைஞருக்கு கழகத்தில் ஒரு முன்மாதிரி அஞ்சா நெஞ்சன் அழகிரியே! அவர் நினைவாகத்தான் தன் மகனுக்கு அப்பெயரைச் சூட்டினார். நடிகவேள் எம்.ஆர்.ராதாவுக்கு நடிகவேள் என்ற பட்டம் அளித்ததும் அஞ்சாநெஞ்சன் அழகிரியே!

அஞ்சாநெஞ்சன் மறைந்த நாளில் அவர் நிலைக்க வைத்துச் சென்ற உணர்வுகளை உள்வாங்கிக் கொள்வோம்! வீறு நடைபோடுவோம்!!

வாழ்க பெரியார்! தொடர்க அழகிரியின்பாட்டை!!

-------------- மயிலாடன் அவர்கள் 28-3-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: