தேவை தமிழ்!
சென்னை மாநகராட்சி மன்றத்தில் ஓர் அருமையான முடிவினை எடுத்திருக்கிறார்கள். செய்தியாளர்களிடம் வணக்கத்திற்குரிய மேயர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ள கருத்து வரவேற்கத்தக்கதாகும்.
சென்னை மாநகரில் வணிக நிறுவனங்களில் வைக்கப்படும் விளம்பரப் பலகைகளில் தமிழ் கண்டிப்பாக இடம் பெறவேண்டும். பெரிய எழுத்துக்களில் அது வடிவமைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் இருந்து கொண்டு, தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட ஒரு நாட்டின் தலை நகரில் மாநகராட்சி இப்படி ஒரு தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதை எண்ணி வருந்த வேண்டியுள்ளது என்றாலும் நிலையை நிமிர்த்திட முன் வந்த தமிழுணர்வு மிகவும் போற்றி வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
புரட்சிக் கவிஞர் பாடினார்:
வாணிகர் தம் முகவரியை
வரைகின்ற பலகையில், ஆங்கலமா வேண்டும்?
வானுயர்ந்த செந்தமிழால் வரைக என
அன்னவர்க்குச் சொல்ல வேண்டும்
என்ற புரட்சிக் கவிஞரின் கனவை நனவாக்கியதற்குப் பாராட்டு!
தமிழில் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டினால், தங்க மோதிரம் என்று அறிவித்த உணர்வும் நமது மாநகரத் தந்தையையே சாரும்.
தமிழ்க் குடும்பத்துப் பிள்ளைகளுக்கு அண்மைக் காலங்களில் வைக்கப்படும் பெயர்களைக் கேட்டால், குருதி சூடேறுகிறது. நாம் தமிழ்நாட்டில் தான் இருக்கிறோமா என்ற கேள்வியை எழுப்புகிறது. நமது உடலை நாமே கிள்ளிப் பார்த்துக் கொள்ள வேண்டியதாக உள்ளது.
திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டினால் வரி விலக்கு என்று முதலமைச்சர் கலைஞர் அறிவிக்க வேண்டிய நிலைதான் இன்றும்.
ஏனிந்த நிலை? நமது கல்வித் திட்டத்தின் கோளாறா? நுகர்வோர் கலாச்சாரமும், புதிய பொருளாதாரமும், ஊடகங்களும், திரைப்படங்களும் தமிழ் மக்களின் சிந்தனைகளைச் சேற்றுக் குட்டைகளாக உருமாற்றி விட்டனவா?
இதுபற்றியெல்லாம் சிந்திக்க வேண்டும். உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் இந்த கால கட்டத்தில் மிக மிக மிக சிந்திக்கப்பட வேண்டிய, செயல்படவேண்டிய மிகமிக முக்கியமான கருத்து இது.
இன்னொன்று! நமது மதிப்பிற்குரிய தலைவர்கள் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, ஆகிய தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்ட சாலைகள் அவ்வாறு அழைக்கப்படாமல் இன்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை என்றும், மவுண்ட்ரோடு என்றும் பெயர்ப்பலகைகளில் பொறிக்கப்பட்டு உள்ளனவே, ஊடகங்கள் அழைக்கின்றனவே, அவற்றையும் தடுக்க வேண்டாமா?
இதற்காக திராவிடர் கழகம் போராட்டம் நடத்தியதுண்டு. (14.8.1996) காவல்துறை ஆணையர் பொறுப்பேற்றுக் கொண்டதால் அப்போராட்டம் நிறுத்தப்பட்டது. தேவைப்பட்டால் திராவிடர் கழகம் கையில் எடுத்துக் கொள்ளும். வணக்கத்திற்குரிய சென்னை மாநகரத் தந்தை இதையும் கவனத்தில் கொள்வார்களாக!
-------------- மயிலாடன் அவர்கள் 18-3-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
0 comments:
Post a Comment