மதக் கலவரம் நடக்கும் மாநிலங்களில் மத்திய அரசு தலையிடும் அதிகாரம் வழங்கும் சட்டம் ஒன்றினை விரைவில் நிறைவேற்றயிருப்பதாக, மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்பமொய்லி கூறியுள்ளார்.
இப்படி ஓர் அவசியம் ஏற்பட்டதற்கே காரணம், பல மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் அமைந்ததுதான். ஒரிசாவில் பாரதீய ஜனதா கட்சியின் ஆதரவில் ஆட்சி அமைந்ததும் ஒரு காரணம்தான்.
அயோத்தியில் வெறும் கரசேவை செய்யப்படும்; அங்குள்ள மசூதிக்கு எவ்வித சேதாரமும் ஏற்படாது என்று அன்றைய உத்தரப்பிரதேச முதலமைச்சர் கல்யாண்சிங் (பா.ஜ.க.) உச்சநீதிமன்றத்திலேயே உத்தரவாதம் அளித்தார். ஆனால், அதற்கு மாறாக கரசேவை என்ற பெயரால், பாபர் மசூதி பா.ஜ.க.வின் முக்கியப் பெருந்தலைவர்களின் வழிகாட்டுதல்படி, அவர்களின் முன்னிலையில் இடித்து நொறுக்கப்பட்டது. அதன் காரணமாக அம்மாநில ஆட்சியையும் கலைக்கும் ஒரு நிலை ஏற்பட்டது.
பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் காரணமாக இந்தியாவின் பல பகுதிகளிலும் மதக் கலவரம் ஏற்பட்டது (தந்தை பெரியார் பிறந்த _ திராவிடர் கழகம் பணியாற்றுகிற தமிழ்நாட்டைத் தவிர!)
மும்பையில் அதன் எதிர் விளைவாக 13 இடங்களில் குண்டு வெடிப்பு நடந்தது; 900 பேர் பலியானார்கள்.
பொதுவாக மாநிலங்களின் அதிகாரங்களை மய்ய அரசு எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதுதான் நமது நிலைப்பாடு என்றாலும், பாரதீய ஜனதா போன்ற மதவெறி அமைப்புகள் ஆட்சியில் அமரும்போது, மத்தியில் இப்படி ஒரு சட்டம் தேவைதான் என்று கருதும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தை ஆண்டு கொண்டிருந்த நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி ஆட்சி, திட்டமிட்ட வகையில் சிறுபான்மை மக்களை முசுலிம்களை வேட்டையாடிக் கொன்று குவித்தது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட முசுலிம்கள் கொல்லப்பட்டனர்.
அன்றைய குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் அவர்கள், பிரதமர் வாஜ்பேயிடம் இதுகுறித்துத் தொடர்புகொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டும், நல்லவர்(?) வாஜ்பேயி கண்டுகொள்ளாத மவுன சாமியாராகவே இருந்தார்.
இந்த நிலையில் மாநிலத்தை ஆளும் ஒரு கட்சி மதவெறி கொண்டதாக இருப்பதைத் தடுப்பது ஒருபுறம் இருக்கட்டும்; மத்தியிலேயே அப்படி ஓர் மதவாத அரசு அமைந்தால் அதற்கு என்ன பரிகாரம் என்பது மிக முக்கியமான கேள்வியாக எழுந்து நிற்கிறது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச் சார்பின்மையைக் கேலி செய்யக்கூடிய அதில் நம்பிக்கையில்லாத ஒரு கட்சி ஆட்சி அமைக்க, இன்னும் சொல்லப்போனால், அத்தகையவர்கள் தேர்தலில் போட்டியிட தகுதியவற்றவர்கள் என்ற நிலையை உரு-வாக்க ஒரு சட்டம் வந்தால் பயனுள்ளதாக இருக்கும்போல் தோன்றுகிறது.
தங்கள் கட்சி ஆளும் ஒரு மாநிலத்தில் மதக் கலவரம் நடக்கும்போது அதனை வேடிக்கை பார்ப்பதும், குடியரசுத் தலைவரே வேண்டுகோள் விடுத்தும் கேளாக் காதினராக இருப்பதும், எவ்வளவு பெரிய விபரீதத் தன்மை கொண்டது என்பதை எண்ணிப் பார்க்கவேண்டாமா?
மாநிலங்களில் நடக்கும் மதக் கலவரத்தைத் தடுக்க மத்திய அரசு தலையிடலாம் எனும் கருத்து உருவாகியுள்ள இந்தக் காலகட்டத்தில், மத்திய அரசே மதவாத ஆட்சியின்கீழ் வருமேயானால், அதனைத் தடுக்க என்ன செய்வது என்பதையும் யோசிக்க வேண்டியதும் கட்டாயமாகும்.
------------------"விடுதலை” தலையங்கம் 26-3-2010
0 comments:
Post a Comment