1400 ஆண்டுகளுக்கு முன் அரபு நாட்டில் தோன்றிய முகமது நபி அவர்களும், 2000 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் தோன்றிய வள்ளுவப் பெரியாரும் அடிப்படைத் தத்துவத்தில் சமமான சீர்திருத்தவாதிகளேயாவர்.
நபிகள் நாயகம் அவர்கள் மக்களுக்குப் போதித்த நல்லறிவுக் கருத்துகளும், வள்ளுவப் பெருந்தகையார் மக்களுக்குப் போதித்த அறிவுக் கருத்துகளும், ஒரே தன்மையுடையன என்றே கூறலாம். நபிகள் நாயகம் அரபு மக்களின் காட்டுமிராண்டித்தன்மையை எதிர்த்துப் போராடி, அறிவுக் கருத்துக்களை நாட்டில் பரப்பினார்.
வள்ளுவப் பெருந்தகை ஆரிய மக்களால் தமிழகத்தில் புகுத்தப்பட்ட காட்டுமிராண்டித் தன்மைகளை எதிர்த்துப் போராடி அறிவுக் கருத்துகளை மக்களிடையே பரப்பினார்.
நபிகள் நாயகம் அவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர். வள்ளுவப் பெருத்தகையார் அறிவு நம்பிக்கை கொண்டவர். நபிகள் நாயகம்கடவுளால் தனது கொள்கைகளை மக்களுக்கு அறிவுறுத்த தூதராக அனுப்பப்பட்டவர் என்று சொல்லப் பட்டவர்.
வள்ளுவப் பெருந்தகையார் கடவுள் ஒருவர் இருப்பதாகவோ, கடவுளுக்கும் தனக்கும் யாதாவதொரு சம்பந்தம் இருப்பதாகவோ சொல்லவேயில்லை; கருத்துக் கொண்டிருப்பதாகக் காட்டவும் இல்லை.
நபிகள் நாயகம் தன் கருத்தில், தனது உபதேசத்தில் வெற்றி பெற்றார். பல கோடி மக்களைத் தன்னைப் பின்பற்றுபவர்களாகவும், சிஷ்யர்களாகவும் கொண்டு ஒரு மாபெரும் மதத் தலைவராகவும் ஆனார்.
வள்ளுவப் பெருந்தகையோ எவருக்குமே சமயத் தலைவராகவில்லை. தன்னைப் பின்பற்ற தனக்கு சிஷ்யர்களாக ஒருவருமே இல்லாதவரானார்; இதன் காரணம் என்ன என்றால் அரபு நாட்டில் ஆரியன் (பார்ப்பனன்) இல்லை; தமிழகத்தில் (இந்திய நாட்டில்) பார்ப்பனன் எல்லாத் துறையிலும், மற்ற மக்களை அடிமைப்படுத்தி ஆதிக்கங் கொண்டு இருந்ததே, இருப்பதே ஆகும். தமிழ் நாட்டில் மாத்திரமே வள்ளுவரைப் பாராட்டுவோர் சிலர் (இப்போது சற்று அதிகமானவர்கள்) உண்டு என்றாலும், அவர்கள் வள்ளுவரைப் பின்பற்றுபவர் என்று சொல்லி விட முடியாது. பாராட்டுகிறவர் என்று வேண்டுமானால் சொல்லலாம். நபிகள் நாகயக்தை முஸ்லிம் மக்கள் எல்லோரும் கடவுளின் தூதர் என்றே கருதி பக்தியும், பயமும் மரியாதையும் காட்டி வருவதோடு, நாயகத்தைப் பின்பற்றி வழிபடுவதாகவே கூறுகிறார்கள்.
வள்ளுவப் பெருந்தகையாரைத் தமிழகத்தில் வள்ளுவர் கொள்கைக்கு எதிரியான சைவன், தன் சமயத்தவர் என்று சொல்லி அவரது பெருமையைக் கெடுத்தான்.
வள்ளுவப் பெருந்தகையாகரைத் தமிழகத்தில் சைவனாவது - வைணவனாவது நாயன்மார்களைப் போன்றோ, ஆழ்வார்களைப் போன்றோ கூட எவனும் கருதுவதில்லை. சைவனுக்குத் தேவாரம், திருவாசம், பெரியபுராணம் முதலிய பக்தி நூல்களும் புராணங்களும்தான் சமய ஆதாரமாகவும், சமய வழிபடு நூல்களாகவும், வைணவனுக்கு இராமாயணம், பாரதம், பாகவதம், நாலாயிரப் பிரபந்தம் முதலிய பக்தி நூல்களும், புராணங்களும்தான் சமய ஆதாரங்களாகவும், சமய நூல்களாகவும் இருக்கின்றனவே ஒழிய, இவர்களுக்குச் சமயத் தலைவரோ, சமயத் தலைவர் கூறிய ஒழுக்க நூல்களோ காண்பதற்கு இல்லை; மற்றும் நபிகள் நாயகத்தைப் பின்பற்றுவோருக்குக் கடவுள் உண்டு; கடவுள் கட்டளை உண்டு; அக்கடவுளிடம் ஒழுக்கம், உயர்வு உண்டு.
சைவர், வைணவர் ஆகியோருக்கும், வள்ளுவப் பெருந்தகையைப் பாராட்டுவோருக்கும் ஒரே கடவுள் இல்லை; ஆனால் பல கடவுள்கள் உண்டு; அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மையும், பெயரும், நடப்பும் கொண்டதாகும் என்பதோடு, கடவுள்களுக்கும், ஒழுக்கம் என்பவற்றிற்கும் சிறிதும் சம்பந்தமே இல்லாத தன்மை உடையனவாகவே இருக்கும். கடவுளிடம் ஒழுக்கம் இருப்பதாகச் சொல்லலாம்; ஆனால் நடத்தையில் இருக்காது.
நபிகள் நாயகம், ஒரே ஆண்டவன் உண்டு; அவன் ஊர்பேர் உருவம்,பிறப்பு இறப்பு,விருப்பு வெறுப்பு வேண்டியது வேண்டாதது இல்லாதவன் என்று சொன்னதோடு, இருப்பதாகச் சொல்லுவது, பாபம்,தவறு, அறியாமை மடமை என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்.
சைவனும், வைணவனும், வள்ளுவரைப் பாராட்டுகிறவனும் நபிகள் நாயகம் சொன்ன கடவுள் தன்மைக்கு மாறாகப் பல கடவுள்களையும், அவற்றிற்குப் பல உருவங்களையும், பல பிறப்புகளையும், இறப்புகளையும், விருப்பு வெறுப்புகளையும், மனைவி மக்களையும், மற்றபடி கொலை, கூடாஒழுக்கம் முதலிய பாதகச் செயல்களையும், மற்றும் பல காட்டுமிராண்டித்தனமான குணங்களையும், நடப்புகளையும் கொண்டவைகளாகக் கற்பித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
சிவனோ, விஷ்ணுவோ, பிரம்மாவோ மற்றும் சைவ, வைணவ சமயத்தவர் கடவுள்களாகக் கருதும் மற்றவர்களோ கடவுள்கள் அல்ல; தேவர்களே ஆவார்கள் என்பதுதான் அவர்களைப் பற்றிய ஆதாரங்கள், வேத, சாஸ்திரங்கள் கூறுவனவாகும்.
ஏனெனில், இவர்கள் எல்லோரும் மேற்கண்ட ஒரு கடவுளை ஒரு கடவுள் வணங்கியதாகவும், அவைகளைக் குறித்து தவம் செய்ததாகவும், ஒருவரிடம் ஒருவர் வரம் பெற்றதாகவும், ஒருவரிடமிருந்து ஒருவர் தோன்றியதாகவும், ஒருவரை ஒருவர் தோற்றுவித்ததாகவும், மற்றும் பல ஆபாச காரியங்கள் செய்ததாகவும் கூறப்பட்டிருக்கின்றன. இப்படிக் கூறி இருப்பதானது வேத, சாஸ்திர, உபநிஷத், புராண இதிகாசங்களிலேயே ஒழிய, சமய விரோதிகளாலோ, வேறு சமயத்தார்களாலோ அல்ல; நபிகள் நாயகத்தைப் பின்பற்றுவதாகக் கூறி இஸ்லாம்களாக இருக்கிற மக்கள் யாவரும் நபிகள் நாயகம் சொன்னபடி நடப்பதாகவும், நாயகம் நடந்தபடி நடப்பதாகவும் சொல்லி நடித்து வருகிறார்கள். ஆனால் சைவனோ, வைணவனோ, வள்ளுவப் பெருந்தகையாரைப் பாராட்டிப் போற்றுபவனோ, அவரவர் கடவுள்கள் சொன்னது போலவோ, நடந்தது போலவோ நடப்பது கிடையாது; நடிப்பதும் கிடையாது. சாம்பலைப் பூசிக் கொண்டால் சைவன் செம்மன், களி மண் பூசிக் கொண்டால் வைணவன்; குறளில் இரண்டு பாட்டைப் பாடிவிட்டால் குறளன் என்று ஆகிவிடுகிறார்கள்.
ஆனால், அதோடு கூடவே சிவன், விஷ்ணு முதலான கடவுள்களை அடைய எப்படிப்பட்ட கொலைபாதகச் செயலையும், ஒழுக்கம் கெட்ட செயலையும் செய்யலாம் என்கின்ற எண்ணத்தையும், நடத்தையையும் கொண்டவர்களாகவே பெரும்பாலான சைவர்கள், வைணவர்கள் நடந்து வருகிறார்கள்; நடக்க ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.
நபிகள் நாயகம் அவர்கள் பக்தி, அன்பு, - ஒழுக்கம் ஆகிய மூன்றையும் ஆண்டவன் கட்டளையாக அறி-வுறுத்தியிருக்கிறார். இன்று பெரும்பாலாக நாம் காணும் முஸ்லிம்களிடம் பக்திதான் அதிகமாக இருக்கிறது. அன்பும் ஒழுக்கமும் இருக்கின்றது என்றாலும், பக்தி இருக்கின்ற அளவில் 10 இல் 100 இல் ஒரு பங்கு கூட காண முடியாது. இப்படி இருப்பது முஸ்லிம்களிடையே மாத்திரம் அல்ல; இது மனித ஜீவ இயற்கையே ஆகும். எப்படி எனில் பக்திக்காகப் பொருள் நட்டமோ, ஆசை பங்கமோ அவசியமில்லை. உதாரணமாக 5 வேளைத் தொழுகையின் மூலம் பெரிய பக்தியைக் காட்டி விடலாம். இதற்குப் பொருள் நட்டம் அடைய வேண்டிய அவசியமில்லை; ஆனால் விவகாரம் கூடாது; திருட்டு கூடாது; மோசடி கூடாது; பொய் கூடாது; பித்தலாட்டம் கூடாது; உபகாரம் செய்ய வேண்டும்; அன்பு காட்ட வேண்டும் என்பன போன்ற விஷயங்களைக் கடைப் பிடிப்பதனால் இதில் பொருள் நட்டமும், லாபக் குறைவும், ஆசைப் பங்கமும், மனக்குறையும் (முதலிய பல) ஏற்படுகின்றன. இதனாலேயே உலகில் ஒழுக்கமுடையவர்களை விட பக்தர்களும், பக்திமான்களும் உலகில் மலிந்து கிடக்கிறார்கள். ஒழுக்க உபதேசிகளைவிட பக்தி உபதேசிகள் ஏராளமாய் கிளம்பிவிடுகிறார்கள். முஸ்லிம்களும் மனிதர்களே ஆதலால் மனிதத் தன்மையை அவர்களுக்கும் புகுத்தினேன்.
வள்ளுவப் பெருந்தகையார் கடவுளையோ, பக்தியையோ காட்டவில்லை; ஒழுக்கத்தையும், அறிவையுமே அதிகமாக முக்கியமாகக் காட்டியுள்ளார். நபிகள் நாயகம் அவர்களும் அறிவைப் பெருமைப்படுத்தி இருக்கிறார்; என்றாலும், தான் சொன்னவற்றை எல்லாம், அறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்; அறிவுக்கு ஏற்றால் ஏற்றுக்கொள்; இல்லாவிட்டால் தள்ளிவிடு என்று சொல்லவில்லை. ஏனெனில், நாயகம் தாம் சொல்லுவதாக எதையும் சொல்லவில்லை. எல்லாம் பெரிதும் ஆண்டவன் சொல்லச் சொன்னதாகப் பொருள்படும்படியாகவே சொல்லியிருக்கிறார். ஆண்டவனால் சொல்லச் செய்தவைகளை மனிதன் அறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்ப்பது என்றால், அப்போது ஆண்டவனின் கருத்து என்ன ஆவது? என்கின்ற பிரச்சினை எழும். ஆதலாலேயே இஸ்லாத்தில் அறிவுக்கு மதிப்பு இருந்தாலும், நபிகள் நாயகம் சொன்னவற்றிலும், குர் ஆனில் சொல்லப்படுபவைகளிலும் அய்யம் கொண்டோ, தெளிவு ஏற்படவில்லை என்றோ, ஆராய்ச்சி செய்ய எந்த முஸ்லிமும் கருதக்கூடாது; அல்லது முயலக்கூடாது என்பது முஸ்லிம்களின் கொள்கைகளில் ஒன்று; (அது) அமலில் இருக்கிறது. அதற்கு மற்றும் ஒரு காரணம் என்னவென்றால் ஆண்டவன் சொன்னதாகச் சொல்லப்படுபவை எல்லாம் அறிவுக்குப் பொருத்தமானது என்பது மாத்திரமல்லாமல், எக்காலத்திற்கும் பொருத்தமானது என்றும் கருதப்படுகிறது.
அவை இன்றைக்கு யாருக்கு எப்படிப்பட்டாலும், அவை நல்ல எண்ணத்தோடும், உண்மையான நம்பிக்கையோடும், மக்கள் பால் உள்ள மெய் அன்போடும் சொல்லப்பட்டவை என்பதை எந்த அறிவாளியும் ஒப்புக் கொண்டே தீருவான். வள்ளுவப் பெருந்தகையார் ஆண்டவன் எனக்குச் சொல்லி உனக்குச் சொல்லச் சொன்னான் என்று சொல்லாவிட்டாலும், அவர் தமக்குச் சரி என்று பட்டதையும், (தாம்) உண்மை என்று கருதியதையும் மக்களுக்கு நலம் பயக்க வேண்டும் என்ற எண்ணத்தின் மீதே பல கூறியிருக்கிறார். என்றாலும்,
யார் யார் வாய்க் கேட்பினும், அவற்றின் மெய்ப் பொருள் காண்பது மனிதன் கடமை என்றும், எது பற்றியதாயினும் மெய்ப்பொருள் காணவேண்டியது மனிதனின் கடமை என்றும் கூறியிருக்கிறார். இவர் மாத்திரம் அல்லாமல் புத்தர் பெருமான், நான் சொல்வதைக் கூட நம்பி ஏற்றுக் கொள்ள வேண்டாம்; உன் ஆராய்ச்சி, அறிவு, என்ன சொல்லுகிறதோ அதை ஏற்றுக் கொள்; நம்பு என்றார். இவர்கள் ஏன் இப்படிச் சொன்னார்கள் என்றால், இவ்விருவரும் தாங்கள் மனிதர்கள் என்று தங்களை முடிவு செய்து கொண்டதோடு, மனிதத் தன்மையை உணர்ந்தவர்கள். ஆதலால் தங்கள் கருத்து என்கின்ற தன்மையில் பேசி இருக்கிறார்கள். அன்றியும் தங்களுக்கு மேற்பட்ட ஒரு கடவுள் இருந்து கொண்டு தங்களை நடத்துகிறார்; தங்களைச் சொல்லச் சொல்லுகிறார் என்கின்ற நம்பிக்கை இல்லாதவர்கள்; இருப்பதாகக் கூறாதவர்கள்.
எப்படி இருந்தாலும், நபிகள் பெருமானும், வள்ளுவப் பெருந்தகையாரும் மக்கள் நல்வாழ்வுக்கு ஆகவேண்டிய கருத்துகளை - காரியங்களை நல்ல எண்ணத்துடன் எடுத்துக் கூறியவர்களேயாவார்கள். மதவேறுபாட்டால் பெரியோர்கள் எல்லாம் மதவாதிகளாகக் கருதப்படுபவர்களாக ஆகிவிட்டதால், மக்கள் யாவருமே மதக்காரர்களாகப் பிரிவினைப்பட்டவர்களாகி விட்டதால், ஒருவர் சொன்னதை அவர் மதக்காரர் அல்லாதவர் சரியானபடி மதிப்பதில்லை; கொள்ளுவதும் இல்லை. இதற்கு மற்றொரு இயற்-கைச் சங்கடம் என்னவென்றால், இப் பெரியார்கள் சொன்னவை எல்லா மக்களுக்கும், எக் காலத்திற்கும் பொருத்தமானது; ஏற்றுக் கொள்ளத் தக்கது என்கின்ற வாதமாகும். இந்த வாதம் இயற்கைக்கு முரண்பட்டதாகும். காலம் மாறுதல் அடையத்தக்கது; இயற்கை சக்திகள் என்பவை எல்லாம் மாறுதல் அடையத் தக்கவையாகும்; அவற்றிற்கு ஏற்பக் கருத்துகளும் மாறும் இயல்புடையதாகும்.
எனவே, மாற்றம் ஏற்படவேண்டும் என்று சொல்லப்படுவதாலேயே பெரியார்களுடைய கருத்துகள் தவறுடையதாக ஆகிவிடாது.
---------------------தந்தை பெரியார் "விடுதலை", 19-8-1955
1 comments:
'இன இழிவு தீர இஸ்லாமே நன்மருந்து' -இது பெரியார் சொன்னது.
தங்களின் கட்டுரையை படிக்கும் பொழுது தாங்கள் இஸ்லாத்தை பற்றி முழுமையாக அறியவில்லை என்பது தெரிகிறது.
//நபிகள் நாயகத்தைப் பின்பற்றுவதாகக் கூறி இஸ்லாம்களாக இருக்கிற மக்கள் யாவரும் நபிகள் நாயகம் சொன்னபடி நடப்பதாகவும், நாயகம் நடந்தபடி நடப்பதாகவும் சொல்லி நடித்து வருகிறார்கள்.//
நீங்கள் சொல்லும் அந்த நடிகர்கள் ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அது இஸ்லாம் என்றில்லை, எல்லா மதத்தவர்களிலும், ஏன் தங்களை பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் உங்கள் போன்றவர்களிலும் அது போன்றவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
//ஆண்டவனால் சொல்லச் செய்தவைகளை மனிதன் அறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்ப்பது என்றால், அப்போது ஆண்டவனின் கருத்து என்ன ஆவது? என்கின்ற பிரச்சினை எழும். ஆதலாலேயே இஸ்லாத்தில் அறிவுக்கு மதிப்பு இருந்தாலும், நபிகள் நாயகம் சொன்னவற்றிலும், குர் ஆனில் சொல்லப்படுபவைகளிலும் அய்யம் கொண்டோ, தெளிவு ஏற்படவில்லை என்றோ, ஆராய்ச்சி செய்ய எந்த முஸ்லிமும் கருதக்கூடாது; அல்லது முயலக்கூடாது என்பது முஸ்லிம்களின் கொள்கைகளில் ஒன்று;//
மன்னிக்கவும். இறைவனோ, அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ ஒரு போதும் அப்படி சொல்லவில்லை. மாறாக, பின்வரும் குர்ஆன் வசனம் என்ன சொல்கிறது என்று பாருங்கள்.
இந்த குர்ஆனை அவர்கள் ஆராய்ந்து பார்க்க மாட்டார்களா? அல்லது அவர்களின் இதயங்கள் மீது பூட்டுக்கள் போடப்பட்டு இருக்கின்றனவா? [குர்ஆன் 47:24]
முடிந்தால் நீங்களும் ஒரு முறை குர்ஆனை படித்துப் பாருங்கள். படிக்கும் போது நடுநிலைமையோடு படியுங்கள்.
இஸ்லாத்தை முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டுமானால், நீங்கள் குர்ஆனை படியுங்கள். மாறாக மீடியாக்கள் மூலம் தெரிந்துக்கொள்ள முயலாதீர்கள்.
Post a Comment