Search This Blog

25.3.10

சாக்கடைதான் புண்ணிய கங்கையாம் - யானைக்குக் கோவணமா?


யானைக்குக் கோவணமா?

புனித கங்கை என்று இந்து மதக்காரர்கள் போற்றிப் புகழ்பாடும் கங்கையைச் சுத்திகரிக்க ஆயிரம் கோடி ரூபாய் மத்திய நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது போதுமானதல்ல; மேலும் மூவாயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்து மதத்தில் புனித நதி என்றும் சிவபெருமான் தலையில் குடியிருக்கும் தெய்வப் பெண் என்றெல்லாம் பிரமாதமாகக் கூறுகிறார்கள்.

சூரிய வம்சத்துப் பிறந்த பகீரதச் சக்ரவர்த்தி தன் பாட்டன் முதலியவர்களின் சரிதங்களைக் கேட்கையில், பிதுர்க்கள் அநேகர் கபிலர் கோபத்திற்குட்பட்டு சாம்பராய் நரக வேதனைப்படுதல் அறிந்து அதை நீக்க, அநேக ஆண்டுகள் பிர்மன், கங்கை, சிவமூர்த்தி முதலியோரை எண்ணித் தவம் புரிந்து சிவமூர்த்தியால் கங்கையின் ஏழு துளிகளைப் பூமியில் வரப் பெற்றனர்.

பார்வதிதேவி விளையாட்டாக சிவமூர்த்தியின் கண்களை மூட, அக்கரத்தின் வழிப் பெருகிய நீர் வெள்ளங்கொள்ள, அதைச் சிவமூர்த்தி தரித்தனர் என்றும், விஷ்ணு திரிவிக்கிரம அவதாரங்கொண்டு மூவுலகளந்தபோது திருவடி சுவர்க்கமடைய அண்டமுடைந்து ஆகாய கங்கை கால்வழி ஒழுகியதால் உண்டானது என்றும் கங்கையைப்பற்றி அளந்து கொட்டியுள்ளனர்.

இந்தக் கங்கையில் மூழ்கினால் பாவங்கள் தொலையும் என்றும், செத்த பின் உடலை எரித்து, அந்தச் சாம்பலைக் கங்கையில் கரைத்தால் மோட்சலோகு கிட்டும் என்றும் அள்ளிக் கொட்டி வைத்துள்ளார்களே நமது வினாவெல்லாம் இதுதான்;

இவ்வளவு தெய்வத்தன்மை பொருந்திய கங்காதேவி எப்படி அசுத்தமானாள்? சுத்தப்படுத்தவேண்டும் என்று கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்படுகிறது என்றால், இதன் பொருள் என்ன?

கங்கை புனிதமானது தெய்வத்தன்மை பொருந்தியது என்பது பொய்யாக இருக்கவேண்டும். இல்லை, இல்லை, கங்கை புனிதமானவள்தான்; தெய்வத்தன்மை பொருந்தியவள்தான் என்பது உண்மையானால், அதைச் சுத்தம் செய்யவேண்டிய அவசியம் இல்லை; அவ்வாறு அரசு நிதி ஒதுக்கி சுத்தம் செய்ய முற்படுவது தெய்வத்தன்மையை அவமதிப்பதாகும் என்றும் இந்து மதக் குத்தகையாளர்கள் குரல் கொடுக்கவேண்டும்.

உண்மையான நிலவரம் என்ன? கங்கை உற்பத்தியாகும் இடத்திலிருந்து கடலில் கலக்கும் வரை அதன் பயண தூரம் 2,525 கிலோ மீட்டராகும். வழிநெடுக இந்தக் கங்கையில் கலக்கப்படும் அசுத்தங்களையும், கழிவுகளையும் நினைத்தாலே குடலைப் புரட்டும்.

காசி நகரில் மட்டும் நாள் ஒன்றுக்கு இந்தக் கங்கையில் கலக்கும் சாக்கடையின் அளவு 20 மில்லியன் காலனாகும். நாள்தோறும் 400 பிணங்கள் எரிக்கப்பட்டு, அவற்றின் சாம்பல் கங்கை நீரில் கரைக்கப்படுகின்றன.

9000 கிழட்டுப் பசுக்கள் இந்தக் கங்கையில் உயிரோடு வீசி எறியப்படுகின்றன. காசியில் பட்டுத் தொழிலில் ஈடுபடுவோர் 2 லட்சம் பேர்கள். இதன் இரசாயனக் கலவை எல்லாம் இந்த நதியில்தான் சங்கமம் ஆகின்றன.

காசியில் சராசரியாக நாள் ஒன்றுக்கு மோட்சம் சென்றடையும் நம்பிக்கையில் குளிப்போர் எண்ணிக்கை 70 ஆயிரம்.

1927, 1963, 1970 ஆம் ஆண்டுகளில் இந்தத் தூய்மை கெட்ட கங்கை என்னும் சாக்கடையால் கடும் நோய் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கில் மடிந்தனர்.

பொதுவாக இந்தியாவில் குழந்தைகள் மரணம் என்பது 1000 க்கு 94 என்றால், காசி வட்டாரத்தில் அது 133.94 விகிதாச்சாரமாக உள்ளது.

காசியையடுத்து காஜியாபாத்தில் பொதுத்துறை நிறுவனங்களின் கழிவுகள் கங்கையில்தான் கலக்கின்றன. இந்தக் கழிவில் ஓபியம் என்ற போதை இருப்பதால், இந்தத் தண்ணீரைக் குடிக்கும் குரங்குகளும் போதை வெறிக்கு ஆளாகின்றனவாம்.

பிகார், பாட்னாவில் நிமிடம் ஒன்றுக்கு 34 முதல் 41 பிணங்கள் எரிக்கப்பட்டு கங்கையில் கரைக்கப்படுகின்றன. மிக அதிகமாகப் பாதிக்கப்படும் நகரம் கொல்கத்தா என்று கூறப்படுகிறது.

இந்தச் சாக்கடைதான் புண்ணிய கங்கையாம், தெய்வாம்சம் பொருந்தியதாம் இதனைத்தான் சுத்திகரிக்கப் போகிறார்களாம் யானைக்குக் கோவணம் கட்டும் கதைதான்!


-------------- “விடுதலை” தலையங்கம் 24-3-2010

1 comments:

Padmanaban said...

பிறகு பெரியார் , வீரமணி பற்றி ஆராய நிதி ஒதுக்கலாமா?