Search This Blog

25.1.10

கடவுள் இல்லை என்பதை நிரூபித்த காஞ்சி அர்ச்சகப் பார்ப்பனர்

கடவுள் இல்லை என்பதை காஞ்சி அர்ச்சகர் தேவநாதன் நிரூபித்திருக்கிறாரே!
சிவகாசி பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் பேச்சு

கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் கோயில் அர்ச்சகர் தேவநாதன் நிரூபித்திருக்கிறார் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

இதோ வீடியோ காட்சி

இதோ வீடியோ எடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். இதோ ஒலி பெருக்கி இருக்கிறது. இந்த கூட்டத்திற்கு வராதவர்கள் கூட என்னுடைய உரையைக் கேட்க உதவுகிறது. இதெல்லாம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு உண்டா? வீடியோ எடுக்கிறார்களே இது எவ்வளவு பெரிய சாட்சியம். இதிலே அம்மி சாட்சி எல்லாம் வர முடியாது. அருந்ததி சாட்சி எல்லாம் இதிலே வர முடியாது. நாளைக்கு அக்னி சாட்சி எல்லாம் வர முடியாது. வந்தால் ஃபயர் சர்வீசும் சேர்ந்து வர வேண்டும்.

ஆனால், இன்றைக்கு வீடியோ சாட்சியை எடுத்துக்கொள்கிறார்கள். இது உச்சநீதிமன்ற தீர்ப்பிலே இருக்கிறது. அந்த அளவிற்கு மிகச் சிறந்த அறிவியல் கருவி. திருமணத்திற்கு யார் யார் வந்தார்கள் என்னென்ன பேசினார்கள் என்பதை எல்லாம் தெரிந்துகொள்ளலாம். இதை கண்டு பிடித்தவர்கள் யார்? முப்பத்து முக்கோடி தேவர்களில் ஒருவருக்காவது இது பற்றி தெரியுமா? படிக்காதவர் தான் தந்தை பெரியார்

அறிவை யாரும் வெறுக்க முடியாது. அந்த அறிவினுடைய குழந்தைகள் தான் அறிவியலாக மலருகின்றன. அதனுடைய சாதனைகளைத் தான் நாம் இன்றைக்கு எல்லோரும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.

படிக்காதவர் என்று அழைக்கப்பட்ட தந்தை பெரியார் அவர் சுதந்திரமாக சிந்தித்ததினுடைய விளைவாக இனிவரும் உலகம் என்ற நூலில் மிகச் சிறப்பான கருத்துகளை சொல்லியிருக்கின்றார்.

வாய்பாடு புத்தகத்தை விட சிறியது. அந்த இனிவரும் உலகம் நூலில் தந்தை பெரியார் சொல்லுகின்றார்; இனிவரக்கூடிய உலகம் எப்படியிருக்கும் என்று 70 ஆண்டுகளுக்கு முன்னாலே சொல்லியிருக்கின்றார்.

பரிசோதனைக் குழாய் குழந்தை

வருங்காலத்தில் ஆண்களுடன் சேராமலேயே பரிசோதனைக் குழாய் குழந்தை பிறக்கும் என்று சொன்னார். வேறு விஞ்ஞானிகள் கூட யாரும் சொல்லவில்லை. அது மட்டுமல்ல வருங்காலத்தில் ஒவ்வொருவருடைய கையிலும் தொலைப்பேசி இருக்கும்; ஒவ்வொருவருடைய தொப்பியிலும் ரேடியோ இருக்கும். இன்றைக்குப் பார்த்தீர்களேயானால் சில பேர் இரண்டு செல்ஃபோன் வைத்திருக்கிறார்கள்.

இந்த செல்ஃபோன் வளர்ச்சி பயங்கரமாக வளர்ந்திருக்கிறது. நமது வீடுகளில் உள்ள வாண்டு, கோண்டுகளுக்குத்தான் செல்ஃபோனை முழுமையாகப் பயன்படுத்துவது எப்படி என்பது தெரியும். வயதானவர்களுக்குத் தெரியாது.

ரேடியோவில் ஒரு செய்தி கேட்டேன்

அந்த செல்ஃபோனில் எத்தனை வகையான செயல்கள் இருக்கின்றன என்பதையும் அவை அத்தனையையும் சிறிய குழந்தைகள் தான் இன்றைக்குத் தெரிந்து வைத்திருக்கின்றன. அந்த செல்ஃபோனிலேயே போட்டோ, எடுக்கலாம், உரையாடலை ரெக்கார்ட் பண்ணலாம். நேற்று வானொலியில் அறிவியலைப் பற்றி ஒரு செய்தியைக் கேட்டுக்கொண்டு வந்தேன். அதிலே கருத்து சொல்லப்பட்டது. இனிமேல் வரப்போகிறது. அந்த செல்ஃபோனுக்கு யார் உரிமையாளரோ அவர் மட்டும்தான் பேச முடியும். மற்றவர்கள் அழுத்தினால் பேச முடியாது. அந்த அளவிற்கு அடுத்த கட்டத்திற்கு நாங்கள் போகியிருக்கிறோம் என்று செல்ஃபோன் தயாரிப்பு அறிவியலாளர்கள் கருத்து சொல்லியிருக்கிறார்கள்.

ராமன் கையில் செல்ஃபோன் இருந்திருந்தால்

தயவு செய்து நீங்கள் நினைத்துப் பாருங்கள். ராமன் கையில் செல்ஃ-போன் இருந்திருந்தால், இராமாயணம் இவ்வளவு பெரியதாக வளர்ந்திருக்குமா? (கைதட்டல்)

ராமன் என்ன செய்வான்? உடனே போலீசுக்கு தகவல் கொடுப்பான். என்னுடைய மனைவியை இராவணன் அடித்துக் கொண்டு போனானா? அல்லது வேறு எவனாவது அடித்துக்கொண்டு போனானா யார் என்று பாருங்கள் என்று கேட்பார்.

கொலை பண்ணினவனை காவல்துறையில் கொண்டு போய் நிறுத்துகிறார்களே. செல்ஃ-போன் மூலம் யார் யாரை தொடர்பு கொண்டார் என்பதைக் கண்டுபிடித்து கொலையாளியைக் கண்டு பிடித்துவிடுகிறார்களே!.

வால்மீகி பாடி இவ்வளவு பெரிய இராமாயணம். அதற்குப் பிறகு பெரிய இராமாயணம். செல்ஃபோன் இருந்திருந்தால் இராவணன் தான் சீதையைக் கடத்திக் கொண்டு போனான் என்பது தெரிந்திருக்கும். இராவணனும் விசயம் தெரிந்து போய்விட்டதே என்று சீதையை திரும்பக் கொண்டு வந்து விட்டிருப்பான். இதை கற்பனையாக நினைத்துப் பார்த்தால் ரொம்ப விசயங்கள் தெரிய வரும்.

70 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் சொன்னார்

இவ்வளவு பெரிய காலம் இன்றைக்கு வளர்ந்திருக்கிறது. 70 ஆண்டுகளுக்கு முன்பு இதைத்தான் தந்தை பெரியார் சொன்னார். இனிவரும் காலத்தில் இப்படி எல்லாம் இருக்கும் என்று சொன்னார்கள். அது மட்டுமல்ல, இப்பொழுது வீடியோ கான்பரன்சிங் வந்திருக்கிறது.

நமது முதலமைச்சர் கலைஞர் சென்னையில் இருந்து கொண்டே குடிஅரசு இதழின் பதிப்பு நூலை வெளியிட்டார். சேலத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் முதலமைச்சருடன் பேசினோம். முதல்வர் வீடியோ கான்பரன்சிங்கில் பேசுகிறார்

சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் பல வளர்ச்சித் திட்டங்களை முதலமைச்சர் கலைஞர் தொடங்கி வைக்கிறார்.அதே போல மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் பேசுகிறார். டெல்லியில் மற்ற இடங்களில் இருந்து ஆசிரியர் பாடம் எடுக்கிறார்கள். மற்ற மாணவர்கள் எல்லாம் அதை வீடியோகான்பரன்சிங் மூலம் பார்த்து படித்து தெரிந்துகொள்ளுகிறார்கள். குறிப்பெடுத்துக் கொள்கிறார்கள்.

எதிரே ஆசிரியர் இல்லை. பேராசிரியர் இல்லை. ஆனால் வகுப்பு பாடம் எடுப்பது நடக்கிறது. எப்படி முடியும்? காரணம் ஆறாவது அறிவு-பகுத்தறிவு.

அவனுக்கென்ன ஆறறிவா?

இதை ஜப்பான்காரன் கண்டுபிடித்தான்,அமெரிக்காகாரன் கண்டு பிடித்தான் என்பதல்ல; யாராக இருந்தாலும்அவனுக்கும் ஆறறிவு. ஏழாவது அறிவு ஒன்றும் கிடையாது.- நமக்கும் ஆறறிவு- பகுத்தறிவு. நாம் அறிவைப் பயன்படுத்தவில்லை. நாம் கல்லிலே முட்டிக்கொண்டோம். நாம் இன்னமும் அய்யப்பன் கோவிலுக்குப் போய்க்கொண்டிருக்கின்றோம்.

நமக்கு இன்னமும் அறிவு பூர்வமான சிந்தனை வரவில்லை. போகும்பொழுது நமக்கு அறிவுத் தெளிவுவில்லை என்பதை எல்லோரும் புரிகிற மாதிரி ஹரிஹர புத்ரா, ஹரிஹரபுத்ரா என்று கத்திக்கொண்டு செல்லுகிறார்கள்.

கடவுள் நம்பிக்கை என்பது

இதற்கு என்ன பொருள் என்றே இவனுக்குத் தெரியாது.அரி என்றால் விஷ்ணு. அரன் என்றால் சிவன். சிவனும் ஆம்பிளை, விஷ்ணுவும் ஆம்பிளை. இரண்டு பேரும் சேர்ந்து பெற்ற பிள்ளை என்பதை சத்தம்போட்டுக்கொண்டு போவதா? எந்த காலத்தில் இப்படி நடப்பது? 21ஆம் நூற்றாண்டில் இப்படி நடப்பதா?

கடவுள் நம்பிக்கை என்பதிருக்கிறதே அது பொடி போடுகிற மாதிரி. சிகரெட் பிடிக்கிற மாதிரி. சிலருக்குத் தண்ணீர் போடுகிற மாதிரி. இது என்ன பழக்கம் என்றால் விட முடியவில்லை என்று சொல்லுவார்கள்.

எங்களைப் பார்த்து சொல்லுவார்கள். எல்லாம் சரிதாங்க. கடவுளைப் பற்றி பேசுகிறீர்கள் பாருங்கள். இதைமட்டும் நீங்கள் நிறுத்தி விட்டால் உலகத்தில் இந்தமாதிரி வேறு ஒரு கட்சியே இல்லிங்க என்று சொல்லுவார்கள். இது எங்களுக்குப் பெருமை அல்ல. கடவுள் மீது என்ன எங்களுக்குத் தனிப்பட்ட முறையில் என்ன தகராறா?

காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் லீலை

கடவுள் இருந்தால் அல்லவா கோபம் வரும் இல்லாதவனைப் பற்றி எங்கே கோபம் வரும்?ஆனால்கடவுள் இருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு எல்லோரும் செய்கிறார்கள். நாங்கள் கடவுள் இல்லை என்று நிரூபிப்பதற்குப் பதிலாக பார்ப்பனர்களே அதை செய்திருக்கிறார்கள். காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் பற்றிய செய்தி தினமும் பத்திரிகைகளில் வருகிறது. இந்த தேவநாதன் என்ற அர்ச்சகர் என்ன செய்திருக்கிறார்? முக்கியமான வேலை பண்ணியிருக்கிறார். அதுவும் அந்த அர்ச்சகர் தேர்ந்தெடுத்த இடம் இருக்கிறது பாருங்கள் கோவில் கருவறைக்குள். கடவுள் கருவறை என் பது புனிதமானது என்று அந்த இடத்திற்கு நம்மை விடமாட்டேன் என்கிறான்.

1930ஆம் ஆண்டு ஒரு சம்பவம்

இன்னும் ஒரு தெளிவான செய்தியை சொல்ல வேண்டுமானால் 1930 களில் பெரிய அளவுக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒரு பெரிய திருட்டு நடந்தது. மதுரை மீனாட்சி அம்மனுடைய நகை காணாமல் போனது. அப்பொழுது வெள்ளைக்காரன் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. வெள்ளைக்கார அதிகாரிகள் பார்த்தார்கள். இதை எப்படி கண்டுபிடிப்பது என்று யோசித்தார்கள். போலீஸ் துறையில் கெட்டிக்கார அதிகாரி யார் என்று பார்த்தார்கள்.

இப்படிப்பட்டவர் இன்வெஸ்டிகேசன் மேற்கொண்டால்தான் சரியாக இருக்கும்,- நகையைத் திருடிய குற்றவாளி பிடிபடுவான் என்று நினைத்தார்கள். காவல்துறை மேலதிகாரிகள் எல்லாம் உட்கார்ந்து பேசினார்கள்.

பார்ப்பன அதிகாரியைப் போட்டார்

நம்முடைய அதிகாரிகள் இன்றைக்கு நிறையபேர் வந்திருக்கிறார்கள். அன்றைய காலகட்டத்திலே நம்முடைய அதிகாரிகளே மிகவும் குறைச்சலானவர்கள் தான். வெள்ளைக்காரர்கள் அதிகாரிகளாக இருந்தார்கள். சில பார்ப்பனர்கள் அதிகாரிகளாக இருந்தார்கள்.

ஒரு பார்ப்பன அதிகாரி பெயரைச்சொல்லி, இவரை அந்த ஸ்பெஷல் டீமில் போட்டால் கண்டுபிடித்துவிடுவார் என்று சொன்னார்கள்.

ஒரு மாதம் ஆனது; இரண்டு மாதம் ஆனது; கண்டுபிடிக்க முடிய வில்லை. உடனே வேறு ஒருவரைப் போட வேண்டும் என்று நினைத்தார்கள்.

குடந்தை சின்னத்தம்பி சகோதரர்

அப்பொழுது குடந்தை சின்னத்தம்பி என்று ஒருவர் இருந்தார். திராவிட இயக்கத்தில் இருந்தவர்.அவருடைய உற்ற சகோதரர் மதுரையிலே போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தார். ரொம்ப நேர்மையானவர். அவர் நாடார் சமுதா யத்தைச் சார்ந்தவர். அவருடைய பெயர் கணபதி என்று கருதுகின்றேன். வெள்ளைக் காரன் யார் யார் ரெக்கார்டு நன்றாக இருக்கிறது என்று எடுத்துப் பார்த்தார்கள். அப்பொழுது மதுரை எஸ்.அய். அதிகாரியினுடைய ரெக்கார்டு நன்றாக இருக்கிறது. இவரை அனுப்பாமல் அவரை ஏன் அனுப்பினீர்கள் என்று கேட்கின்றார்கள்.

நான்ஆர்டர் போடுகிறேன் என்று பெரிய வெள்ளைக்கார அதிகாரி உத்தரவு போட்டார். வெள்ளைக்கார அதிகாரி போட்ட அந்த மதுரை போலீஸ் இன்ஸ்பெக்டரை கோவிலுக்குள் உள்ளே விட மறுத்து விட்டார்கள்.

---------------(தொடரும்) “விடுதலை” 22-1-2010

0 comments: