Search This Blog

11.1.10

மும்பை தாக்குதல் - கர்கரேயைக் கொன்றது யார்? - 3


கர்கரேயைக் கொன்றது யார்? (3)

(முகமூடி அணிந்துள்ள ஆர்.எஸ்.எஸ். அதன் ஆயுதமான ஹிந்துத்வத்தை எப்படியெல்லாம் சந்தர்ப்பத்திற்கேற்ப பயன் படுத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ள மிக அருமையான நூல் கர்கரேயைக் கொன்றது யார்? என்ற தலைப்பில், ஓய்வு பெற்ற அய்.பி.எஸ். அதிகாரியும் விருப்ப ஓய்வு பெற்று பதவி விலகிய மகாராஷ்டிர அய்.ஜி.யுமான முஷ்ரப் அவர்கள் எழுதியுள்ள நூல்!

பல திடுக்கிடும் உண்மைகள், மறைக்கப்படும் செய்திகள், இவற்றிற்கெல்லாம் மூல காரணங்கள் பார்ப்பனப் பிடிப்புக்குள் சிறைப்பட்டுள்ள அல்லது பார்ப்பனமயமான இந்திய உளவுத் துறையும், இந்திய ஊடகத்துறையும், கடமை தவறி ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனுநீதியின் மறு உருவங்களாகத் திகழ்கின்றன.

இந்நூல் முன்னுரை, மற்றும் முக்கிய சில அத்தியாயங்களை தமிழ் கூறும் நல்லுலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, மானமிகு சு.அறிவுக்கரசு அவர்கள் தமிழாக்கம் செய்து தருகிறார்; படியுங்கள்; (பேச்சாளர்கள்) பரப்புங்கள்.

- ஆசிரியர் கி.வீரமணி)



7) உலகச் செய்திகளைத் தயாரித்து அளிக்க வேண்டிய முக்கிய பணியைச் செய்ய வேண்டிய அய்.பி.அதை விடுத்து குண்டு வெடிப்பு வழக்குகள் எல்லாவற்றிலும் தேவையில்லாமல் மூக்கை நுழைத்துத் தவறான, ஒருதலைப் பட்சமான விசாரணை செய்வது ஏன்?

8) மும்பை பயங்கரவாதத் தாக்குதல் பற்றிக் கிடைத்த மிக முக்கிய உளவுத் தகவலை, மும்பை காவல் துறைக்கும்,மேற்குத் திசை கப்பற் படையினர்க்கும் அய்.பி. தராமல் மறைத்தது ஏன்?

9) மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய 35 செல்பேசி எண்கள் அய்.பி.க்குத் தெரிந்திருந்தும் அவற்றைக் கண்காணிக்காமல் விட்டது ஏன்?

10) ஹேமந்த் கர்கரே இறந்து சில மணி நேரங்களுக்குள்ளாகவே, அவர் இடத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய வகுப்பு-வாதியான கே.பி. ரகுவன்ஷி என்பாரை நியமிக்கும்படி அய்.பி.ஏற்பாடு செய்தது ஏன்?

11) மும்பை தாக்குதல் வழக்கின் விசாரணையை அய்.பி. ஏன் தொடக்க முதலே கையாண்டு வெளிநாட்டு அமைப்பான எஃப். பி. அய். நம் நாட்டு விசாரணையில் தலையீடு செய்வதற்கான நிலையை ஏற்படுத்தியுள்ளது?

மேற்காணும் அய்ய வினாக்கள் ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாகவும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவையாகவும் உள்ளன என்பதை என் ஆராய்ச்சி தெரிவிக்கிறது. வேதனைதரும் இந்த விளையாட்டில் முக்கிய பங்கு ஏற்பவர்கள் பார்ப்பனர்கள் - அதிலும் பார்ப்பனர்களில் மிகச் சிறு பிரிவைச் சேர்ந்தவர்கள் - இவர்களின் போதனைக்கு ஆட்பட்ட பார்ப்பனர் அல்லாதவர்கள் - பார்ப்பன மயமான அய்.பி.பார்ப்பனர்களின் செய்தி ஊடகங்கள் முதலியோர் உள்ளனர். அவர்களின் முக்கிய வேலைத் திட் டமே இந்தியச் சமூகத்தில் பார்ப்பனர்களின் வல்லாண்மையை நிறுவ வேண் டும் என்பது மட்டுமே. தொடக்கத்தில் இந்துக்களின் சமூக, மத விவகாரங்களைக் கட்டுப்படுத்திடும் சக்தியாக விளங்கவேண்டும்-என்றுதான் அவர்களின் குறிக்கோள். ஆனால் முசுலிம்களுக்கு எதிரான பிரச்சாரம் வெற்றி பெற்ற-தைத் தொடர்ந்து அரசியல் அதிகாரத்தையும் கைப்பற்ற வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கி அதன் காரணமாக வகுப்பு மோதல்களை மேலும் வேகமாகத் தூண்டிவிட்டு, ராமஜென்மபூமி போன்ற விஷயங்களைப் பெரிதாக்கினர். பாபர் மசூதியை இடித்த பிறகு அவர்களின் அரசியல் சக்தி அதிகமாகி, சுதந்திரத்திற்குப் பின் வகுப்பு வாத அரசியல் வளர்ச்சியின் உச்சகட்டத்தை அடைந்துவிட்டது.

அதிகார ருசியைச் சுவைத்தவுடன் பார்ப்பனர்களின் பேராசை கூடி விட்டது. ஆனாலும் பார்ப்பனர் அல்லாதாரின் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து அதிகாரத்தைப் பங்கிட்டுக் கொள்வதில் பல பார்ப்பனர்களுக்குத் திருப்தியில்லை; தங்கள் ஆசையைப் பூர்த்தி செய்து கொள்ள பார்ப்பனர் அல்லாதார் கூட்டு உதவாது என்பது அவர்களின் கருத்து. அவர்களுக்கு முழு அதிகாரமும் வேண்டும். அர சமைப்புச் சட்டப்படி அமைக்கப்பட்ட மத்திய அரசைத் தூக்கி எறிந்து விட்டு, இந்து ராஷ்ட்ரம் என்கிற பெயரில் பார்ப்பன ராஷ்ட்ரத்தை அமைக்க பல்வேறு சதிகளில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் தொடர்ச்சியாகக் குண்டு வெடிப்புச் சம்பவங்களை நிகழ்த்தி, பழியை முசுலிம்கள் மீது போட்டு விடுவது என்பதும் அதற்கு அய்.பி. இல் இருக்கும் அபிமானிகள் உதவுவார்கள் என்பதும் அவர்களின் திட்டம். அதன் பிறகு பத்திரிகை, ஊடகத் துறை ஒரு கலவரமான குழப்பச் சூழ்நிலையை நாட்டில் ஏற்படுத்தும்; அதன்மூலம் நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றலாம் என்பதும் திட்டத்தின் பகுதியாகும். ஆனால் நாட்டுக்கு நல்லதாகவும் அவர்களுக்குப் பொல்லாததாகவும் அமைந்துவிட்ட வகையில் 2008 மாலேகான் குண்டு வெடிப்புச் சம்பவம் பற்றி விசாரித்த மகாராட்டிர பயங்கரவாதச் செயல் தடுப்புப் பிரிவின் தலைவர் ஹேமந்த் கர்கரே இவர்களின் சதித் திட்டத்தை அம்பலப்படுத்தி விட்டார். இந்தப் புலன் விசாரணை பாதியில் இருக்கும் போது நவம்பர் 26 இல் மும்பையில தாக்குதல் நடை பெற்றது; விசாரணை தடைபட்டது. சந்தேகத்திற்கு இடமான சூழ்நிலைகளில் ஹேமந்த் கர்கரே தாக்குதலின்போது கொல்லப்-பட்டார்.

அய்.பி. தனக்குக் கிடைத்த முக்கியமான தகவல்களைத் தொடர்புடைய-வர்களுக்கு அளித்திருந்தால் இந்தத் தாக்குதலையே தடுத்திருக்க முடியும். இதில் அய்.பி. இன் கெட்ட நோக்கத்தை மேலும் மெய்ப்பித்திடும் வகையில் மிகவும் சர்ச்சைக்கிடமான வகுப்பு வெறி பிடித்த அதிகாரியான கே.பி.ரகுவன்ஷி, கர்கரேயின் இடத்தில் அவர் இறந்த சில மணி நேரத்திற்குள்ளாகவே பணி அமர்த்தப்பட்டார். மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினஸ்- காமா- ரங்க பவன் சந்து பயங்கரவாதச் செயல்களில் பலத்த சந்தேகத்திற்கு ஆளாகியுள்ள அய்.பி. அமைப்பின் அதீத அவசரமும் ஆர்வமுமே இதற்குக் காரணம். இதன் மூலம் ரகுவன்ஷி விசாரணையை மேற் கொள்ளவும் வெளிநாட்டு உளவு நிறுவனமான எஃபி.அய். இன் உதவியுடன் விசாரணையை முடித்திடவுமான சந்தர்ப்பம் வாய்த்துவிட்டது.

மேற்காணும் நிகழ்ச்சிகளை, இந்த நூலில் நான் வரிசைப்படுத்தியுள்ளேன். செய்தித் தாள்களின் அறிக்கைகள், மற்றும் அதன் தொடர்புடைய விஷயங்கள் முதலியவற்றைப் பகுத்துப் பார்த்து, தர்க்க நியாயமான முறையில் கருத்துகளை நான் கண்டறிந்துள்ளேன். குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து நூற்றுக் கணக்கான இசுலாமிய இளைஞர்கள் கைது செய்யப்படுவதும், அதனால், குண்டு வெடிப்புகள் நின்று போகாததும், ஆனால் மாலேகான் குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக உண்மை பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்ட பிறகு அவை நின்று போயின என்கிற உண்மைகளும் என் அனுமானக் கருத்துகள் எந்த அளவுக்கு நேர்மையானவை என்பதை ருசுப்பிக்கின்றன.

நடந்து முடிந்த நவம்பர் 26 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ஊடகங்களில் மும்பை குற்றப் பிரிவினாலும் அய்.பி. பிரிவினாலும் பரப்பப்படும் தப்பானதும் திரித்துக் கூறப்படுவதுமான செய்திகளின் மூலம் குழம்பிப் போயிருக்கும் மக்கள் இந்த நூலை எப்படி வரவேற்பார்கள் என எனக்குத் தெரியாது. ஆனால் நூல் முழுவதையும் கவனமாகப் படிக்கும் எவருக்கும் காவல்துறையினர் தரும் தகவல்களைக் காட்டிலும் நேர்மையாக நூலின் தகவல்கள் அமைந்துள்ளன என்பது விளங்காமல் போகாது. எழுதப்பட்டிருப்பவற்றை, அப்படியே ஆராயாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என நான் கூறப் போவதில்லை. அளிக்கப்பட்டிருக்கும் புதிய செய்திகளின் அடிப்படையில், சுதந்திரமான ஓர் அமைப்போ, அல்லது விசாரணை ஆணையமோ (கமிஷன்) எல்லா விவரங்களைப் பற்றியும் விசாரிக்க வேண்டும் என்பதே என் அவா. இதே போன்ற கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவராக எல்.கே.அத்வானி அவர்களேகூட எழுப்பியிருக்கிறார் என்பதை நூலின் ஏழாம் படலத்தில் குறிப்பிட்டு உள்ளேன்.

பார்ப்பனர்களைப் பொறுத்தவரை அவர்கள், கீழ்க்காணும் மூன்றில் ஒரு வகையில் செயல்படுவார்கள். - ஒன்று, இதனை முழுவதும் அலட்சியப் படுத்திவிடுவர் (இந்த விசயத்தில் அப்படி நடக்காது. காரணம் இது மிகவும் உணர்ச்சிகரமானது.) இரண்டு, நூலில் எந்த ஒரு பகுதியையாவது எடுத்துப் போட்டு மக்களின்வெறியைத் தூண்டி விடுவார்கள். மூன்று அப்பாவி மக்களைத் தூண்டிப் போராடச் செய்து இவர்கள் பின்னால் பதுங்கிக் கொள்வார்கள். இந்து மதத்தின் முரண்பாடுகள் என்கிற பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நூலுக்காக இப்படித்தான் செயல்பட்டார்கள்.


---------------------”விடுதலை” 9-1-2010

0 comments: