
50% ஒதுக்கீடு
சமூகநீதி வரலாற்றில் இந்நாள் (1980) அடிக்கோடிட்டுப் போற்றப்பட வேண்டிய பொன்னாள்.
ஆம், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் தமிழ் நாட்டில் மலர்ந்து மணம் வீசத் தொடங்கியது இந்நாளில்தான்.
எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழ்நாடு முதல் அமைச்சராகயிருந்த காலகட்டத்தில் ஓர் அரசாணையைப் பிறப்பித்தார். பிற்படுத்தப்பட்டவர்களில் ஆண்டு வருமானம் ரூபாய் 9000 இருந்தால் இனிமேல் அவர்களுக்கு எந்தவித இட ஒதுக்கீடும் கிடையாது என்பதே அவர் பிறப்பித்த அரசாணை (1156 சமூகநலத் துறை நாள் 2.7.1979).
ஆரியம் அகமகிழ்ந்தது! இந்து ஏடோ “Progressive and Meaningful” அறிவிப்பு என்று தலையங்கம் தீட்டியது. பொங்கி எழுந்தது திராவிடர் கழகம். போர் முரசு கொட்டினார் தமிழர் தலைவர் கி.வீரமணி. சமூக நீதியாளர்களையெல்லாம் பெரியார் திடலில் ஒருங்கிணைத்தார். நாடெங்கும் கண்டனக் கூட்டங்கள், மாநாடுகள்.
தி.மு.க., காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம். அல்ல), முஸ்லிம் லீக், ஜனதா கட்சித் தலைவர்கள் எல்லாம் ஒருங்கிணைக்கப்பட்டனர். தமிழர் தலைவர் தலைமையில் வருமான வரம்பு அரசு ஆணையின் நகலைக் கொளுத்தி அந்தச் சாம்பலை கோட்டைக்கு அனுப்பினர் திராவிடர் கழகத் தொண்டர்கள் (26.11.1979),
அனல் பறந்தது நாட்டில். இந்தக் காலகட்டத்தில் மக்களவைத் தேர்தல் வந்தது. இந்தப் பிரச்சினையை முன் வைத்து திராவிடர் கழகம் பெரும் புயலைக் கிளப்பியது.
அதுவரை தேர்தலில் தோல்விகளையே கண்டறியாத எம்.ஜி.ஆர். முதன் முதலாக மிகப் பெரும் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது. புதுவை உள்ளிட்ட 40 இடங்களில் போட்டியிட்டு 38 இடங்களில் தோல்வியைத் தழுவினார், திகைத்தார். ஏன் இந்தத் தோல்வி?
ஆம் புரிந்துகொண்டார். தமிழ்நாட்டின் வகுப்புரிமை என்னும் புலிவாலைத் தவறாக மிதித்து விட்டோம். பெரியார் மண் என்பதையே மறந்தோம். அதனால் வட்டியும் முதலுமாக அனுபவிக்க நேர்ந்தது என்று உணர்ந்தார்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அவசர அவசரமாகக் கூட்டினார் (21.1.1980). திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்களின் கருத்தையே மிக முக்கியமாகக் கேட்டார் முதலமைச்சர்.
இது தொடர்பான பிரச்சினைகளைக் கேள்விகளாக்கி அதற்கான பதில்களை அச்சிட்டு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் அளித்து, தக்க விளக்கமும் கொடுத்தார் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களுக்குப் புரியும்படி.
கூட்டம் முடிந்து நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் திராவிடர் கழகமும், அதன் பொதுச்செயலாளர் வீரமணியும் வருமான வரம்பு ஆணை பற்றி செய்த பிரச்சாரத்தினை மக்கள் நம்பினார்கள் என்று ஒப்புக்கொண்டார்.
தான் பிறப்பித்த வருமான வரம்பு ஆணையை விலக்கிக் காண்டதோடு, அதுவரை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இருந்து வந்த 31 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் அளவை 50 விழுக்காடாக உயர்த்தி அறிவித்தார். அது இந்நாளில்தான் (1980)
வரலாறைத் தெரிந்து கொள்ளாத இனம் வறுமையில் மூழ்கிவிடும். வாழ்வையும் இழந்துவிடுமே!
---------------------- மயிலாடன் அவர்கள் 28-1-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
0 comments:
Post a Comment