Search This Blog

15.1.10

தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட யாருமே முன்வரவில்லையா?

தமிழ்த் தாய் வாழ்த்து!


இந்த வாரம் குமுதம் வார இதழில் (13.1.2010) தமிழ்த்தாய் வாழ்த்து பற்றி ஒரு தகவல் வெளிவந்துள்ளது.


தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட யாருமே முன்வரவில்லை. அழைப்பு விடுத்த முதல்வர் கலைஞருக்கு இது பேரதிர்ச்சி. ஆனால், துணிந்து பாடி வரலாற்றில் இடம் பெற்றார் டி.எம். சவுந்தர்ராஜன், பி.சுசீலாவுடன் இணைந்து அவர் பாடிய நீராருங்கடலுடுத்த என்று தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்தான் இன்றைக்கு தமிழ் நெஞ்சங்கள் அனைத்திலும் குடிகொண்டிருக்கிறது. துணிச்சல்மிக்க மதுரைக்காரர் என்று பாராட்டியது கலைஞர் மட்டுமல்ல, தமிழ்த்தாயும்தான். அந்தக் குரலில் இருந்த கம்பீரம் தமிழைத் தலைநிமிர வைத்தது என்று குமுதம் செய்தி வெளியிட்டுள்ளது.


யாருமே முன்வரவில்லை; முதலமைச்சருக்கு இது பேரதிர்ச்சி என்பதெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட ஒன்றுதான் என்றாலும், இதன் பின்னணியில் மிக முக்கியமாக தமிழர்கள் புரிந்துகொள்ளவேண்டிய, உணரவேண்டிய ஒரு முக்கிய தகவல் உண்டு.


கடவுள் வாழ்த்து என்ற பெயராலேயே கண்டதைப் பாடிக் கொண்டிருந்தனர். இந்த நேரத்தில், கடவுள் வாழ்த்தைத் தூக்கி எறிந்துவிட்டு, அந்த இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தைக் கொண்டுவந்து வைக்க முதலமைச்சர் கலைஞர் அவர்கள் விரும்பினார். திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமியைக் கொண்டு பாடச் செய்து இசைத் தட்டு தயாரித்தால் சிறப்பாக இருக்கும் என்று முதலமைச்சர் விரும்பினார். அதற்காகக் கேட்கப்படும் தொகையையும் அளிக்க அரசு தயாராகவே இருந்தது.
என்ன நடந்தது தெரியுமா?


நீராருங்கடலுடுத்த என்ற அந்தப் பாடலை கடவுள் வாழ்த்துக்கு நிகராகப் பாடமாட்டேன் என்று எம்.எஸ். சுப்புலட்சுமி மறுதலித்துவிட்டார் என்பதுதான் அந்த முக்கிய தகவல் ஆகும்.


தமிழச்சியான மதுரை சுந்தரவடிவு சுப்புலட்சுமி (எம்.எஸ். என்பது இதுதான்) பார்ப்பனரான கல்கி சதாசிவ அய்யரைக் கல்யாணம் கட்டிக்கொண்டு மடிப்பாச்சிக் கட்டிக்கொண்டு, அவா, இவா என்று பேச ஆரம்பித்து அக்கிரகாரத்து மாமியாகவே ஆகிவிட்டார் என்பதுதான் உண்மை.


தமிழன் பார்ப்பனர் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டால், பார்ப்பனராக ஆவதும், பார்ப்பனன் தமிழ்ப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டால் தமிழ்ப் பெண் அக்கிரகார மாமியாகவே மாறிவிடுவதும் யதார்த்தமானதாகும்.


தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழால் பிழைத்தாலும் அவர்கள் எப்படியிருக்கிறார்கள் என்பதைத் தமிழர்கள் உணரவேண்டாமா?

குறிப்பு: சென்னைப் பெரியார் திடலில் (14.6.1983) சங்கராச்சாரி யார்? என்ற தலைப்பில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றுகையில், இந்தத் தகவலை வெளியிட்டபின்புதான் வெளியுலகுக்கே இது தெரிய ஆரம்பித்தது.


------------------- மயிலாடன் அவர்கள் 13-1-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: