Search This Blog

12.1.10

மும்பை தாக்குதல் - கர்கரேயைக் கொன்றது யார்? - 4



(முகமூடி அணிந்துள்ள ஆர்.எஸ்.எஸ். அதன் ஆயுதமான ஹிந்துத்வத்தை எப்படியெல்லாம் சந்தர்ப்பத்திற்கேற்ப பயன் படுத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ள மிக அருமையான நூல் கர்கரேயைக் கொன்றது யார்? என்ற தலைப்பில், ஓய்வு பெற்ற அய்.பி.எஸ். அதிகாரியும் விருப்ப ஓய்வு பெற்று பதவி விலகிய மகாராஷ்டிர அய்.ஜி.யுமான முஷ்ரப் அவர்கள் எழுதியுள்ள நூல்!

பல திடுக்கிடும் உண்மைகள், மறைக்கப்படும் செய்திகள், இவற்றிற்கெல்லாம் மூல காரணங்கள் பார்ப்பனப் பிடிப்புக்குள் சிறைப்பட்டுள்ள அல்லது பார்ப்பனமயமான இந்திய உளவுத் துறையும், இந்திய ஊடகத்துறையும், கடமை தவறி ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனுநீதியின் மறு உருவங்களாகத் திகழ்கின்றன.

இந்நூல் முன்னுரை, மற்றும் முக்கிய சில அத்தியாயங்களை தமிழ் கூறும் நல்லுலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, மானமிகு சு.அறிவுக்கரசு அவர்கள் தமிழாக்கம் செய்து தருகிறார்; படியுங்கள்; (பேச்சாளர்கள்) பரப்புங்கள்.

- ஆசிரியர் கி.வீரமணி)





கர்கரேயைக் கொன்றது யார்? (4)

முழு நூலையும் படித்து முடிக்காமல், எவ்வித பிரதிபலிப்பையும், வெளிக்காட்டாமல், பார்ப்பனர்களின் பொய்ப் பிரச்சாரத்திற்கு செவி சாய்க்காமல் இருக்குமாறு வாசர்களை கேட்டுக் கொள்கிறேன். அப்படி இல்லாமல் போனால், இந்த நூலை எழுதியதன் நோக்கமே சிதறிப் போகும். இந்துக்களை அடிமைப்படுத்திடும் பார்ப்பனர்களின் தற்காலத் தந்திரங்கள் ஏற்க முடியாதது என்றாலும், நாட்டின் வகுப்புவாதச் சூழ்நிலையைப் பார்க்கும்போது ஏற்பட்டுள்ள பொதுவான கருத்து என்னவென்றால், இந்திய முசுலிம்களில் பெரும்பான்மையோர் நாட்டுப் பற்று இல்லாமல், பாகிஸ்தான் மேல் பற்று கொண்டு இசுலாமியப் பயங்கரவாதிகளின் மீது அனுதாபம் காட்டி வருகின்ற காரணத்தால், நாட்டுப் பற்று மிக்க தேசியவாதிகளான பார்ப்பனர்கள் முசுலிம்களுக்கு எதிராக இருப்பதோடு இசுலாத்தின் அபாயங்கள் குறித்துச் சாதாரண இந்துக்களுக்கு எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 700 ஆண்டு-களுக்கு மேலாக முகலாய மன்னர்கள் நடத்திய கொடுங் கோன்மைகளும் முசுலிம்களுக்கு எதிராகப் பார்ப்பனர்கள் இருப்பதற்கான மற்றொரு காரணம் என்றும் கூறுகின்றனர்.

மேற்காணும் வாதங்களில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது ஒரு புறமிருந்தாலும் இந் நாட்டையும் இந்து மதத்தையும் காப்பாற்ற வக்காலத்து இல்லாமல் வாதாடும் பார்ப்பனர்கள் யார் என்பது பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பார்ப்பனியர்கள் யார் என்றால், பார்ப்பனர்களில் ஒரு சிறு பகுதியினரும், மதவெறி கொண்ட பார்ப்பனர் அல்லாதவர்களில் மிகமிகச் சிறு அளவிலானவர்கள் (இவர்களைப் பூதக்கண்ணாடி கொண்டுதான் பார்க்கவேண்டும் என்கிற அளவுக்குக் குறைவான-வர்கள்) ஆவார்கள். இவர்கள் ஜாதிகள் பிறப்பின் அடிப்படையிலேயே வந்து சேர்கின்றன என்றும், பார்ப்பனர்கள் மிகஉயர்ந்த ஜாதியினர் என்னும் தெய்வீக புருஷர்கள் ஆன காரணத்தால் இந்தியச் சமுதாயத்தை ஆள்வதற்கான நிரந்தரத் தகுதி படைத்தவர்கள் என்றும் நம்பிக் கொண்டிருப்பவர்கள். பார்ப்பனர்கள் முசுலிம்களுக்கு எதிரானவர்களா? அப்படியென்றால் எப்போதிலிருந்து? என்பது இப்-போதைய மில்லியன் டாலர் கேள்வி. பார்ப்பனர்கள் முசுலிம்களுக்கு எதிரானவர்களாக இருந்ததே இல்லை என வரலாறு கூறுகிறது; ஆனால் 1893 இல் அவர்கள் திடீர் என முசுலிம்களுக்கு எதிராகத் திரும்பினார்கள் -அந்த ஆண்டுதான் இந்திய வரலாற்றின் வகுப்புவாதம் தலை விரித்த முக்கியஆண்டு. மத்திய கால வரலாற்றுப் பின்னணியில் இதனை ஆராயலாம்.

700 ஆண்டுக்காலமாக இந்தியாவை முசுலிம்கள் ஆண்டனர் என்பது வரலாற்று உண்மை. இதை யாரும் மறுக்க முடியாது. தற்காலத்தை விடவும் கூடுதலாகப் பார்ப்பன ஆதிக்கம் பற்றி யாருமே கேள்வி கேட்டதில்லை என்பதும் உண்மையே! வலியமையற்ற இந்து மக்கள், அவர்களால் அடிமைப் படுத்தப்பட்டிருந்ததும், பார்ப்பனர்கள் விரும்பிய அனைத்தையும் அவர்கள் செய்து முடித்தனர் என்பதும் அன்றைய நிலை. முசுலிம் ஆட்சியாளர்களுக்கு வேண்டாதவர்களாகப் பார்ப்பனர்கள் இருந்திருப்பார்களேயானால், ஓராண்டுக் காலம்கூட அவர்களை ஆள்வதற்கு அனுமதித்திருக்க மாட்டார்கள். முசுலிம் ஆட்சியாளர்களுக்கு எதிராக இந்துக்களைப் பார்ப்பனர்கள் எழுச்சி பெறச் செய்ததாகவோ, நேரடியாகவோ மறைமுகமாகவோ அவர்களை ஆட்சியிலிருந்து அகற்ற முயன்றதாகவோ வரலாற்றுப் பதிவுகள் எதுவும் கிடையாது. மாறாக, மத்திய கால வரலாறு முழுவதும் பார்ப்பனர்கள் முசுலிம் மன்னர்களுக்கு உதவி புரிந்து ஆட்சியும் நிருவாகமும் சீராக நடை பெறுவதற்கு உதவியதாகத்தான் சான்றுகள் உள்ளன.

முகலாயப் பேரரசர் அக்பரின் அவையில் இருந்த நவரத்தினங்களில் பார்ப்பனர்கள் பலர் இருந்தனர். திப்பு சுல்தானின் ஆலோசர்களும் நிருவாகிகளும் பார்ப்பனர்களே! வகுப்பு வெறியைக் கிளப்பிவிடுவதற்கு தற்போதைய பார்ப்பனியவாதிகள் தாராளமாகப் பயன்படுத்திவரும், முகலாய மன்னர் அவுரங்கசீபின் தர்பாரில் கூட பாதிக்கு மேற்பட்டவர்கள் பார்ப்பனர்களாகவே இருந்துள்ளனர். உண்மையில், பார்ப்பனர்களின் ஆதரவினால்தான் 700 ஆண்டுக்கும் மேலாக முசுலிம்கள்இந்தியாவை ஆளமுடிந்தது; அக்பரும் அவுரங்கசீபும் தலா 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி புரிந்திட முடிந்தது. மத்திய வரலாற்றுக் காலம் முழுவதும் பார்ப்பனர்கள் முசுலிம்களுடன் கொண்டிருந்த சுமுக உறவின் காரணமாகவே இது சாத்தியம் ஆயிற்று. இந்தப் பின்னணியில் பார்த்தால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவராக இருந்த எம்.எஸ்.கோல்வால்கர் நாம் அல்லது நமது தேசியத்திற்கான விளக்கம் எனும்-நூலில் எழுதியுள்ள இந்த நாட்டில் முசுலிம்கள் கால் வைத்த நாள் முதல் இன்று வரை இந்துச் சமூகம், கொள்ளையர்களான அவர்களை தீரத்துடன் எதிர்த்தே வந்துள்ளது என எழுதியிருப்பது அப்பட்டமான பொய். இந்துச் சமூகம் என்பதிலிருந்து பார்ப்பனர்களை நீக்கிட அவர் சம்மதித்தால் இது பொருந்தலாம். புனேயில் ஆட்சி செலுத்திய பேஷ்வா பார்ப்பனர்கள் ஆண்ட 1818 ஆம் ஆண்டு வரையிலும் கூட, 30 விழுக்காடு முசுலிம்கள் வாழ்ந்த நிலையிலும் இந்து முசுலிம் வகுப்புக் கலவரம் நடந்ததாக எந்தப் பதிவும் கிடையாது. பேஷ்வாக்களின் ஆட்சியில், இந்து தாழ்த்தப்பட்டவர்கள் எச்சில் துப்புவதற்கு மண் குவளைகளைத் தம் கழுத்தில் கட்டிக் கொண்டும் (தரையில் துப்பினால் தரை தீட்டுப்படும்) தம்முடைய பாவம் படிந்த பாதங்களின் சுவடு-களை அழிப்பதற்கு வசதியாக அவர்கள் தம் இடுப்பில் துடைப்பத்தைக் கட்டிக்கொண்டு நடக்க வேண்டும் என்றும் கொடுமைப்படுத்தப்பட்டிருந்த நாளில் கூட, முசுலிம்கள் கண்ணியமாகவே நடத்தப்பட்டனர்.

1857 இல் நடந்த முதல் சுதந்திரப் போர் எனப்படும் நிகழ்ச்சியில் இந்துக்கள், பார்ப்பனர்கள், முசுலிம்கள் முதலிய அனைவரும் ஒருங்கிணைந்து போராடினர் என்பதோடு தங்கள் அரசராக முகலாயப் பேரரசர் பகதூர் ஷாவையே அறிவித்தனர். சுருங்கச் சொன்னால் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிக் காலம் வரை முசுலிம்களுக்கும் பார்ப்பனர்களுக்குமிடையே உறவு சுமுகமாகவே இருந்தது; அதற்குப் பிறகும்கூடப் பார்ப்பனர்கள் முசுலிம்களுக்கோ, முசுலிம் மன்னர்களுக்கோ எதிர்ப்பாக இருந்ததில்லை. 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சரியாகச் சொன்னால் 1893 ஆம் ஆண்டில், பார்ப்பனர்கள் ஏன் முசுலிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்டார்கள் என்றும், அத்தகைய நிலைப்பாடு இறுதியில் நாட்டைப் பிரிவினை செய்ததோடு, இன்றையநாள் வரையிலும் தூண்டிவிடப்பட்டுக் கொண்டேஇருக்கிறதே எனும் முக்கியமான கேள்வி எழலாம். 1893 முதல் வகுப்புக் கலவரங்களும் பயங்கரச் செயல்களும் இன்றைய நாள் வரை நடைபெற்று வருவதற்கான வரலாற்றை அறிந்து கொள்வதற்கு முன், பார்ப்பன ஆதிக்கச் சமூக நிலையை மாற்றுவதற்காக மகாராட்டிரத்திலும் தென்னாட்டிலும் நடைபெற்ற சமூகச் சீர்திருத்த இயக்கங்கள் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சமூகச் சீர்திருத்த இயக்கங்களிலிருந்து கவனத்தைத் திருப்பிடவே இந்து முசுலிம் பிரச்சினைகள்

ஆதி காலத்திற்கு முன்பிருந்தே பார்ப்பனர்கள் இந்தியச் சமூக வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளனர். அவர்களின் அந்தஸ்து ஆட்டம் காணும் போதெல்லாம் அவர்கள் பலவிதத் தந்திரங்களையும் திட்டங்களையும் செயல்படுத்திக் கொலை செய்தல், நாட்டை விட்டே புத்த பிக்குகளைச் செய்தது போன்று விரட்டுதல் போன்றவற்றில் ஈடுபட்டு வந்தனர்; ஜாதி முறைகளை ஏற்படுத்தித் தங்களைக் கடவுள்என்ற நிலைக்கு உயர்த்தும் தோத்திரப் பாடல்களையும் வேதங்களையும் தாங்களே எழுதி வைத்துக் கொண்டனர். மனுஸ்மிருதியை அதிகார பூர்வமானதாக ஆக்கி, அந்நூல் ஜாதி முறையை வலியுறுத்துகிறது என முன்னிலைப்படுத்தியதோடு, குருட்டுத்தனமான மூடநம்பிக்கைகளைப் பரப்பினர். நாட்டின் க்ஷத்திரிய மன்னர்களை எதிர்த்துப் போரிட வருமாறு வெளிநாட்டவர்களை அழைத்தும், தவறான வரலாற்றுக் குறிப்புகளைத் தயாரித்தும், எதிர்ப்புகளை எதிர் கொண்டு சமாளிக்க முயற்சிகளைச் செய்தும் சமூகத்தில் தங்களின் உயர்பீடத்தைத் தக்க வைத்துக் கொண்டனர்.

இதேமாதிரியான தந்திர உபாயங்களைக் கைக்கொண்டு, முகலாயர் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும்கூட தங்கள் ஆதிபத்யத்தைத் தக்க வைத்துக் கொண்டனர். ஆனால், 19 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் (பிற்காலத்தில் வரலாற்றிலேயேமுதல் முறையாக) மகாத்மா என்று அழைக்கப்பட்ட புனேயைச் சேர்ந்த ஜோதிராவ் புலே, பார்ப்பனர்களின் நீண்டகால துரோக வரலாற்றை அம்பலப்படுத்தினார். அதுவரை கல்வி கற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பெண்கள், ஒடுக்கப்பட்டோர், இந்துக்கள் ஆகியோர் கல்வி கற்றிட பள்ளிகளைத் திறந்து கற்பித்தார். நூல்கள் எழுதியும், பாடல்கள், நாடகங்கள் எழுதியும் சாதாரண இந்து மதத்தவரைக் கூடத் தட்டியெழுப்பினார்; அவர்கள், எப்படிப் பார்ப்பனர்களால் காலங்கலமாக அடிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதை என்பதை எடுத்துக் கூறினார். உழவர்கள், கலைஞர்கள், பெண்கள், ஒடுக்கப்பட்டோர் ஆகிய அனைவரும் அனுபவிக்கும் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் பார்ப்பனர்கள் எந்த வகையில் பொறுப்பு என்பதை விளக்கினார். ஒட்டு மொத்த சமூகத்தின் நலனுக்கு எதிராக, அவர்களின் செலவில் விரல் விட்டு எண்ணக் கூடியபெரும் சலுகைகளை அனுபவித்து வரும் நிலையில் பெரும்பாலான சமூக மக்களின் கல்வியில், பொருளாதாரத்தில், அறிவுத் திறனில் எவ்வாறு குறையுள்ளவர்களாக ஆக்கப்பட்டனர் என்பதை விளக்கிக் கூறினார். அவர் ஏற்படுத்திய விழிப்புணர்ச்சி சமூகத்தின் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

புலேயின் இயக்கம் ஏற்படுத்திய விழிப்புணர்வினாலும், மக்கள் அதற்குக் காட்டிய ஆதரவினாலும் உத்வேகம் பெற்ற கோல்காபூர் (மகாராட்டிரா) மன்னரான சாகுஜியும் (தற்போது குஜராத்தில் இருக்கும்) பரோடாவின் மன்னரான சாயாஜிராவ் கெய்க்வாட்டும் மக்களை எழுச்சி பெறச் செய்து அவரின் அறிவுரை-களின்படியே பார்ப்பனர் தவிர்த்த ஏனைய மக்களுக்குப் பல சமூகச் சீர்திருத்தங்களைச் செய்து உதவினர். அதே காலகட்டத்தில் தென்னாட்டில் பெரியார் ராமசாமி மற்றும் நாராயண குரு ஆகியோர் இதே போன்ற சீர்திருத்த இயக்கங்களைத் தொடங்கினர். 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்த இயக்கத்தின் தாக்கம் மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் மகாராட்டிராவிலும், தென் மாநிலங்களிலும் ஏற்பட்டு, நாட்டின் பிறபகுதிகளுக்கும் பரவியது.

(தொடரும்) “விடுதலை” 10-1-2010

0 comments: