Search This Blog

13.1.10

தமிழர்தம் புத்தாண்டை செம்மையாகக் கொண்டாடுவோம்!


தை முதல்நாள் தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்ற அரசு ஆணையை முத்தமிழ் அறிஞர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் வெளியிட்டதன்மூலம் தமிழர்தம் எழுச்சி வரலாற்றில், புதியதோர் அத்தியாயத்தை உருவாக்கினார்கள்.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, தமிழ்க்கடல் மறை மலை அடிகளார் தலைமையில் இன உணர்ச்சி பெற்ற பெரும் பேராசிரியர்கள் எல்லோரின் கருத்துக்கும் ஏற்றம் தருவதாக அது அமைந்தது! நாரதருக்கும், கிருஷ்ணனுக்கும் பிறந்த பிள்ளைகள்தான் பிரபவ, விபவ என்று தொடங்கும் பழைய வருஷப் பிறப்பு.
அது புராணங்களை அடிப்படையாகக் கொண்டது.

கலைஞரின் ஆணை


இப்புதிய தமிழ்ப் புத்தாண்டு _ பொங்கலை முதன்மைப்படுத்தி முகிழ்த்துள்ளது. ஏற்கெனவே தமிழ் ஆண்டு என்ற பெயரில், கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவதுபோல, பண்பாட்டுப் படையெடுத்த ஆரியத்தின் ஆபாச, அருவருப்பு நிறைந்த கதை கொண்டதே பழைய தமிழ் வருஷப் பிறப்பு என்ற நிலைதான் இருந்தது!


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு


கள்ளநோட்டுகளைக் கண்டறிந்து தமிழர்களுக்கு நல்ல நாணயத்தை, சரியான அதிகாரபூர்வ ‘நோட்டுகளை’ (கரன்சிகளை) புழக்கத்தில் கொண்டு வருவது போன்ற நற்செயலே, இந்தத் தமிழ்ப் புத்தாண்டு புது ஆணை!
தமிழ்கூறும் நல்லுலகம் காலமெல்லாம் கலைஞர் அரசுக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறது.


இவ்வாண்டு கோவையில் வரலாறு காணா வகையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறவும் உள்ளது. நாள்தோறும், நாள்தோறும் சாதனைகளால் உழவர்களை மட்டுமன்றி, அனைத்துத் தரப்பு மக்களையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திடும் அரிய திட்டங்கள் தி.மு.க. அரசால் அணிவகுத்து நிற்கின்றன.


அனைத்துத் தரப்பினரும் அரசு செயல்பாட்டால் மகிழ்ச்சி


ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, 50 ரூபாய்க்கு 10 மளிகைப் பொருள்கள், பசுமைக் காய்கறிகளும் குறைந்த விலையில், உடல்நலம் காக்க ஈடு இணையற்ற கலைஞர் உயிர் காப்பீடு திட்டம் ஏழை மக்களின் ஏற்றமிகு பாதுகாப்பு அரணாகி நிற்கின்றன.


அதோடு,


1. பட்டதாரிகளே இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தொழிற்கல்வி பயில நிதி. 2. மீனவர்களின் கடன் ரத்து 3. அருந்ததியினர் உள்ஒதுக்கீட்டில் மருத்துவம், பொறியியல் படிக்க வாய்ப்பு. 4. ஆதிதிராவிடர்கள் தாட்கோ கடன் ரத்து
5. நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.50 உயர்வு. 6. இலவச வீட்டுமனைப் பட்டா பெற சலுகை. 7. கரும்புக்குக் கூடுதல் விலை இவை போன்ற பலப்பல!


2 லட்சம் குடிசை வீடுகளை மாற்றி அனைவருக்கும் கான்கிரீட் இலவச வீடுகள், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் அள்ளிக் கொடுக்கும் அரசு என்று அவர்கள் மனமே குளிர்ந்துள்ள நிலை, மகளிர் சுய உதவிக் குழுக்கள்மூலம் மகளிர் வாழ்வுரிமையில் மறுமலர்ச்சி இப்படி எத்தனை எத்தனையோ மக்கள் நலத் திட்டங்களை அனுபவிக்கும் நிலையில், இதைவிட தமிழ்ப் புத்தாண்டின் மகிழ்ச்சிக் கொண்டாட்டமாக கோலாகலமாக நடத்திட வேறு காரணம் வேண்டுமா?


நாடெங்கும் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்


நாடெங்கும் 200_க்கும் மேற்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரங்கள், ஜாதி ஒழிப்புச் சின்னங்களாகக் காட்சி தரும் நிலை. பூரிப்பைத் தந்து புதியதோர் சரித்திரம் படைக்கின்றனவே!


தந்தை பெரியார் பெயர் சூட்டி, அவர்தம் சிலை ஒவ்வொரு சமத்துவபுரத்தையும், சரியாக அடையாளம் காட்டுகின்றனவே!


இப்படி அடுக்கடுக்கான அற்புதத் திட்டங்கள் இந்தத் தமிழ்நாட்டில் அதுவும் கலைஞர் தலைமையில் உள்ள ஆட்சி தவிர வேறு எங்காவது உண்டா?


‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்பதை நடைமுறைப்படுத்தும் நல்லாட்சியில் நாம் அனைவரும் தமிழ்ப் புத்தாண்டினை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்,
“ஆடுவோமே பள்ளு பாடுவோமே, தமிழ்
ஆட்சியின் மாட்சியில் கூடுவோமே!’’ என்றாரே, அதுபோல கொண்டாட்டம் அமையவேண்டாமா?


ஈழத் தமிழர்களை வாழ வைப்போம்!


ஏதிலிகள் என்று வந்த எந்தமிழ் உறவுகளுக்கு உரிமைகளைத் தந்து ரூபாய் 100 கோடியில் கல்வி உரிமை, குடி உரிமை தர வற்புறுத்தல் முதலியனவும் வருவதால் உலகத் தமிழர்களின் உரிமைகளிலும் மெத்தனம் இல்லை; சில தவிர்க்க இயலாத சங்கடங்களும் உண்டு. இவற்றுடன்தான் தமிழர்களின் சங்கநாதமாக, பொங்கல் அமைந்துள்ளது.


‘போக்கி’ என்பதை வழியனுப்புவதுபோல, ஈழத் தமிழர் கொடுமைகளை வழியனுப்பி அவர்களையும் உரிமையுடன் வாழ வைப்போம்- கொடுமைகளுக்கு முடிவு கட்டுவோம் என்ற உறுதியை இப்பொன்னாளில் - புத்தாண்டில் ஏற்று, பொங்கலை செழுமையாகக் கொண்டாடுவோம் - முதல்வரின் வேண்டுகோள் நமக்கு அன்புக் கட்டளையாக அமையட்டும்!

சென்னை
12.1.2010

தலைவர்,
திராவிடர் கழகம்.


------------------------ “விடுதலை” 12-1-2010

0 comments: