Search This Blog

3.1.10

பெரியாருடைய வாழ்வியல் பல சிக்கல்களுக்கு விடை தரும்

பெரியாருடைய கருத்துகள் வாழ்க்கைக்கு தேவையானவை; பின்பற்றி முன்னேறுங்கள்
சிங்கப்பூரில் பெரியாரை பிரதிபலித்தார் தமிழர் தலைவர்

தந்தை பெரியாருடைய கருத்துகள் வாழ்வியல் கருத்துகள் மக்கள் முன்னேற்றத்திற்குப் பயன்படக்கூடிய கருத்துகள் அவருடைய கருத்துகளை பின்பற்றி வாழ்க்கையில் முன்னேறுங்கள் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

சிங்கப்பூர் நாட்டில் 8.11.2009 அன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர்தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

மணமக்களுக்கு அறிவுரையில் கூட

தந்தை பெரியார் அவர்கள் மணமக்களுக்கு அறிவுரையில் கூட, சிக்கனமாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துவார். உங்களுக்கு ஒரு ரூபாய் வருமானம் வந்தால் 75 காசை செலவழித்து 25 காசை சேமிக்க வேண்டும் என்று கூறுவார். அதற்கு என்ன வழி என்று கேட்டால் ஆடம்பரத்தைக் குறைத்து வாழுங்கள். தேவைக்கு ஏற்ப செலவழியுங்கள், வாழுங்கள் என்று சொல்லிவிட்டுச் சொன்னார்,

மனிதன் உண்மையான சுயமரியாதையைக் கொண்டவனாக இருக்க வேண்டுமானால் அவன் கடன் வாங்கத் தெரியாதவனாக இருந்தால் அது சிறப்பாக இருக்கும்.

கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லாதவனாக இருந்தால் யாருக்காகவும் தலை வணங்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் கடன் வாங்கிவிட்டால் பல பேரைக் கண்டு ஒளிய வேண்டிய அவசியம் ஏற்படும்.

சிறையில் ஒருவருக்கு மட்டும் மகிழ்ச்சி

எங்கள் நாட்டிலே நாங்கள் எல்லாம் மிசா கைதியாக சிறையில் அடைக்கப்பட்டவர்கள். என்ன காரணம் என்று தெரியாமல் அடைத்தார்கள். மிசா காலத்தில் சிறைக்குள் வந்தவர்களில் ஒரே ஒருவர்தான் மகிழ்ச்சியாக வந்தார்.

என்னய்யா? நீ மட்டும் சிறையில் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களே என்ன காரணம் என்று கேட்டேன். அண்ணே, பத்து பேருக்கு மேலே நான் வெளியில் கடன் வாங்கியிருக்கிறேன். நான் வெளியே இருந்தால் அவனெல்லாம் ரொம்ப தொந்தரவு கொடுக்கின்றான். ஆகவேதான் நான் நிம்மதியாக சிறைச்சாலைக்கு வந்துவிட்டேன். அவன் இங்கு வர முடியாது.

எவ்வளவு காலத்திற்கு வேண்டுமானாலும் நான் சிறையில் இருக்கிறேன். ஏனென்றால் வெளியே போனால் அவ்வளவு கடனையும் என்னால் திருப்பி கொடுக்க முடியாது என்று சொன்னார். சிலபேர் இப்படி நிம்மதியாக இருக்கிறவர்களும் உண்டு.

தவறாகக் கூட்டிவிட்டால்

நாணயத்தோடு இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் சிலர், அப்படி முடியவில்லை என்றால் தற்கொலை கூட பண்ணிக் கொள்கிறார்கள். தவறான ஒரு கூட்டுப் புள்ளி இது. ஒரு இடத்தில் நாம் தவறாக கூட்டி விட்டோம் என்றால் எவ்வளவு பெரிய நிபுணர் வரையிலே கூட்டினாலும் தவறாகத் தான் வரும். எனவே, அடிப்படையிலேயே அந்தப் புள்ளியை வாழ்வியலை அடிப்படையிலே அமைத்துக் கொள்ள வேண்டுமென்று விரும்பியவர் பெரியார்.

எனவே, தந்தை பெரியார் அவர்கள் கண்ட வாழ்வியல் இருக்கிறதே, அது கட்சிக்கு ஒரு ஜாதிக்கு ஒரு இனத்துக்கு ஒரு நாட்டுக்குச் சொந்தமானதல்ல.

மனித இனம் முழுவதற்குமே சொந்தமான தத்துவம். எனவே மனிதகுல மாமேதையாக தந்தை பெரியார் அவர்கள் திகழ்ந்தார்கள்.

அடக்கத்தோடு சொல்லுவார்

இளைய தலைமுறையினருககுச் சொல்லிக் கொள்கின்றேன். அய்யா அவர்கள் பேசும் பொழுதே சொல்லுவார்,

நான் மகான் அல்ல. அவதார புருஷர் என்று பலர் சொல்லுவார்கள். நான் அவதார புருஷரும் அல்லர். நான் ஒரு மனிதன். மனிதர்களுக்குள்ளே பேதம் இருக்கக் கூடாது என்று கருதக் கூடிய ஒரு தொண்டன் என்று தன்னை அடக்கத்தோடு அறிமுகப்படுத்திக்கொள்வார்.

அப்படிப்பட்ட தந்தை பெரியாரின் கருத்துகள் உலகம் முழுவதும் இன்றைக்கு ஒளிவண்ணமாகப் பரவுகிறது. ஒலியாக எங்கு பார்த்தாலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

ஒரு கோணத்தில் மட்டும்

பெரியாரைப் பற்றி பல நாள்கள் நாம் பேசலாம். நான் ஒரே ஒரு கோணத்திலே மட்டும் தந்தை பெரியார் அவர்களைப் பற்றி நேரத்தைக் கருதி எடுத்துச் சொல்லியிருக்கின்றேன்.

எனவே பெரியாரைப் படியுங்கள். ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் சொல்ல மாட்டோம். பெரியாரைப் புரிந்து கொள்ளுங்கள்.

புரிந்து கொள்ளவில்லையானால் அது பெரியாருடைய தவறு அல்ல; மனிதர்களுடைய தவறு. பெரியாருடைய வாழ்வியல், பல சிக்கல்களுக்கு உங்களுக்கு விடை தரும்.

பெரியார் ஒரு சூரியன்

எவ்வளவு பெரிய சோதனைகள் ஏற்பட்டாலும் எவ்வளவு பெரிய வேதனைகள் ஏற்பட்டாலும் அவை எல்லாம் பெரியார் தத்துவத்திற்கு முன்னாலே வைத்துப் பார்க்கும் பொழுது சூரியனைக் கண்டு பனி உருகுவதைப் போல என்று சொல்லுவார்கள், அது போலத்தான்.

இங்கே இணைப்புரை வழங்கிய கவிஞர் அன்பழகன், பிறகும் பாராட்டிச் சொன்னார். பாராட்டு கேட்பது எவ்வளவு சங்கடம் என்று நான் முதலிலே சொன்னேன். சூரியன், சந்திரன் என்றெல்லாம் சொன்னார்கள்.

தந்தை பெரியார் என்பவர் ஒரே ஒரு சூரியன் தான். உலகத்திற்கே ஒரு சூரியன். பெரியார் காலத்திலேயே பெரியாரால் உணர்வு ஊட்டப்பட்டவர்கள் இருக்கலாம்; பெரியாரால் தழைத்தவர்கள் இருக்கலாம்; பெரியாருடைய ஒளிக்கதிர்களாக பலர் இருக்கலாம்.

புவி வெப்பமாவதற்கு யார் காரணம்?

புவி இன்றைக்கு வெப்பமயமாவதற்கு என்ன காரணம்? மனிதர்கள் தான், காரணமே தவிர சூரியன் அதற்கு பொறுப்பு அல்ல. நாம் மரக்கன்றுகளை நடுவதில்லை. மரத்தை நாம் வெட்டிக் கொண்டேயிருக்கின்றோம். வெப்பம் எப்பொழுதும் போல் இருக்கிறது. அதே அளவுக்குத் தான் வெப்பம் இருந்து கொண்டிருக்கிறது.

அது போல பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் தத்துவங்களை வாழ்வியலாகக் கொள்ளுங்கள். கடைசியாக ஒன்றைச் சொல்லி விடைபெற விரும்புகிறேன்.

பெரியார் ஒரு பேரங்காடி

தந்தை பெரியார் அவர்கள் ஒரு பேரங்காடி. சூப்பர் மார்க்கெட் என்று சொல்லுகிறீர்களே அந்த பேரங்காடியில் எல்லா பொருள்களும் இருக்கும். யாருக்கு எது தேவையோ அதை வாங்கலாம், எடுத்துப் போகலாம். அத்தனைப் பொருள்களையும் வாங்கிக் கொண்டு போங்கள் என்று நாங்கள் வலியுறுத்த மாட்டோம். சில்லறை கடைகளில் வாங்கினால் கடன் கொடுப்பார்கள். அப்படி வாங்கினால் வசதியாக இருக்கும் என்று கருதக் கூடியவர்கள் இருக்கின்றார்கள்.

வசதியைக் கருதி இந்தத் தெருவுக்குள்ளேயே வாங்கிக்கொள்ளலாம் என்று நினைப்பவர்கள் இருப்பார்கள். ஆனால் இந்த பேரங்காடி இருக்கிறதே நாணயமாக எல்லா சரக்குகளையும் கொண்டது. அதனுடைய அறிவு நுழையாத துறை இல்லை. அவருடைய சிந்தனை பாயாத துறை இல்லை. ஆகவே அந்த சிந்தனை அறிவு என்பது நமக்காக_அவருக்காக அல்ல. வாழ்வியலில் ஒரு புதிய திருப்பத்தை உண்டாக்கக் கூடிய பெரியார் என்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தத்துவங்களாக இருந்து கொண்டிருக்கின்றார்கள். அதை சிறப்பாக சிங்கப்பூர் நாட்டிலே நீங்கள் செய்வதன் மூலமாக வேறு எவரையும் விட நீங்கள் அருமையாக நடத்தியிருக்கின்றீர்கள்.

கொள்ளுவதற்கு மட்டுமல்ல, தள்ளுவதற்கும் உரிமை உண்டு

தமிழ்நாட்டிலே கூட இவ்வளவு அருமையாக விழா நடந்தது என்று சொல்ல முடியாது. என்கின்ற அளவிற்கு அவ்வளவு அருமையாக அவ்வளவு கட்டுப்பாடாக ஒவ்வொரு நிலையிலும் நீங்கள் காட்டி வருகிறீர்கள். உங்களுக்கு என்னுடைய தலை தாழ்ந்த நன்றி. இவ்வளவு நேரம் உங்களை காக்க வைத்திருக்கின்றேன். நான் சொன்ன கருத்துகளை நீங்கள் கேட்டிருக்கின்றீர்கள்.

நான் சொன்ன கருத்துகளை ஏற்க வேண்டும் என்று நான் சொல்ல மாட்டேன். அந்தக் கருத்துகளை தள்ளுவதற்கு முழு உரிமை உண்டு. எனவேதான் எனக்கு சொல்லுவதற்கும் உரிமை உண்டு என்ற அடிப்படையில் சொல்லுகின்றோம். தயவு செய்து சிந்தியுங்கள்; சரி என்று பட்டால் உடனே ஏற்றுக்கொள்ளுங்கள். சரிதான்; ஆனால் என்று போட்டு விடாதீர்கள். பல பேர் சரிதான்; ஆனால் என்று போட்டுவிடுகிறார்கள். தமிழர்கள் வளராததற்குக் காரணமே இந்த ஆனால்தான். ஆனால் போடாதீர்கள்!

ஆகவே தயவு செய்து ஆனால் என்று போடாதீர்கள். சரி என்று பட்டால் எடுத்துக் கொள்ளுங்கள். தவறு என்றால் விட்டுவிடுங்கள். அது உங்களைப் பொறுத்தது.

மக்களை முன்னேற்றுங்கள்

உங்களுடைய வாழ்வைப் பொறுத்தது. எனவேதான் பெரியார் கண்ட வாழ்வியல் வழியில் வாழ்வோம், வளர்வோம், முன்னேறுவோம், மக்களை முன்னேற்றுவோம் என்று கூறி முடிக்கிறேன்.

இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.


---------------------"விடுதலை” 2-1-2010

0 comments: