Search This Blog

12.1.10

இந்தியைத் திணிப்பது எதற்காக?

ஜின்னா சந்திப்பு

இதே நாளில்தான் (1940) தந்தை பெரியார்- ஜனாப் ஜின்னா -அண்ணல் அம்பேத்கர் சந்திப்பு பம்பாயில் நடைபெற்றது.

மாலை 5.30 மணிமுதல் 8.30 மணிவரை இந்தச் சந்திப்பு நடைபெற்றது. சண்டே அப்சர்வர் பாலசுப்பிரமணியம், ஜஸ்டிஸ் ஆசிரியர் டி.ஏ.வி. நாதன், வழக்குரைஞர் கே.எம். பாலசுப்பிரமணியம், ஆகியோர் இந்தச் சந்திப்பின்போது உடனிருந்தனர்.

இந்தச் சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நாட்டுப் பிரிவினை, இந்தி எதிர்ப்பு, காங்கிரஸ் எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு என்பவை உரையாடலில் முக்கியமாக இடம் பெற்றன.

இந்தித் திணிப்பு என்பது பார்ப்பன மதத்தையும், கலைகளையும் கருவிகளாகக் கொண்டு விரிவுபடுத்தும் குறுகிய நோக்கம் கொண்டது என்பது தெளிவுபடுத்தப்பட்டது.

இந்தி திணிப்பு குறித்து 1926 ஆம் ஆண்டிலேயே குடிஅரசு இதழில் (7.3.1926) தமிழிற்குத் துரோகமும், ஹிந்து மொழியின் இரகசியமும் என்ற தலைப்பிலேயே தந்தை பெரியார் எச்சரித்துள்ளார்.

இனி கொஞ்ச காலத்திற்குள் இந்திப் பிரச்சாரத்தின் பலனை நாம் அனுபவிக்கப் போகிறோம். பிராமணரல்லாதாருக்கு ஏற்பட்ட பல ஆபத்துக்களில் இந்தியும் ஒன்றாய் முடியும் போலிருக்கிறது என்று குறிப்பிட்டார்கள். அதுபோலவே, 1931 இல் நன்னிலத்தில் நடைபெற்ற வட்டார சுயமரியாதை மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பழைய புராணக் கதைகளைச் சொல்வதைத் தவிர வேறு அறிவு வளர்ச்சிக்குப் பயன்படாத இந்தி, வடமொழி முதலிய மொழிகளை நமது மக்களைப் படிக்கும்படிச் செய்வது பார்ப்பனியத்துக்கு மறைமுகமாக ஆக்கம் தேடுவதாகுமென இம்மாநாடு கருதுகிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தந்தை பெரியார் வெற்றி பெற்றபோது, அதனைப் பாராட்டி முகம்மது அலி ஜின்னா தந்தி கொடுத்தார் என்பதும் சிறப்புமிக்க வரலாற்றுக் குறிப்பாகும்.

தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை வரவேற்ற ஜின்னா அவர்கள் இதர மாநிலங்களிலும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இந்தக் கொள்கைகளைப் பரப்பவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதுபோலவே, முகம்மது அலி ஜின்னா அவர்களும், பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களும் 15 நாள்கள் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்வது என்றும் அந்தச் சந்திப்பில் முடிவெடுக்கப்பட்டது.

பல வகைகளிலும் தலைவர்களுடன் தந்தை பெரியார் மேற்கொண்ட மும்பை சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

----------- மயிலாடன் அவர்கள் 8-1-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: