Search This Blog

27.1.10

மனிதநேயத்திற்காக பாடுபட்டவர் பெரியார்

கடவுள், மதம், ஜாதி இல்லை என்ற பெரியார் மனிதநேயத்திற்காக பாடுபட்டார்
பகவான் ரமண ரிஷியோ தன் குடும்பத்திற்காக பாடுபட்டார்
சிவகாசி பொதுக்கூட்டத்தில் தமிழர்தலைவர் விளக்கம்


கடவுள், மதம், ஜாதி இல்லை என்று சொன்ன பெரியார் மனிதநேயத்திற்காக பாடுபட்டார். மக்களை ஒன்றுபடுத்தினார். கடவுள் ரமணரிஷி மக்களுக்கு எந்த பயனும் செய்யவில்லை. குடும்பத்திற்கே பயன்பட்டார் என்று திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:


தவறு செய்தால் தண்டனை உண்டு

தவறு செய்தால் தண்டனை அனுபவிக்க வேண்டும். இதுதான் வள்ளுவருடைய வாழ்க்கை முறை. இதுதான் தமிழனுடைய வாழ்க்கை முறை தவறு செய்யாமல் வாழுங்கள் என்று திருக்குறளில் சொல்லப்பட்டிருக்கிறது.

மீறி தவறு செய்துவிட்டால் அதற்குரிய தண்டனையை அனுபவிக்கத் தயாராகுங்கள். இதுதான் தமிழர்களுடைய வாழ்க்கை முறை. தவறு செய்யக்கூடாது என்பது தமிழர்களுடைய பண்பாட்டு முறை. தவறு செய்வது என்பது ஆரிய பண்பாட்டு படை யெடுப்பினாலே வந்த ஒன்று. இவற்றை எல்லாம் நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

பெரியாரியக்கம் வெறுக்க வேண்டியது அல்ல. மாறாக ஒவ்வொருவரும் பங்கேற்க வேண்டிய இயக்கம்.

பெரியார்-காமராஜர்

தமிழ்நாட்டிலே இந்த அளவுக்கு கல்வி வளர்ந்திருக்கிறது என்றால் அதற்கு அடித்தளமிட்டவர் காமராஜர் அல்லவா? தந்தை பெரியார் இல்லாவிட்டால் காமராஜர் ஆட்சிக்கு அவ்வளவு பெரிய பலம் வந்திருக்குமா? எனவே எல்லா துறைகளிலும் அறிவியல் வாழ்வியல் இப்படி எல்லாவற்றையும் சொல்லிக்கொடுக்கின்ற இயக்கம் இந்த இயக்கம்.

பெரியாருடைய இயக்கத்தில் உள்ளவர்கள், பெரியாருடைய தொண்டர்கள் அனாவசிய செலவு செய்ய மாட்டார்களே.

இங்கே கூட அய்யா அவர்கள் ரூ.50 ஆயிரத்தை தாராளமாக நன்கொடை கொடுத்தார். ஏன் கொடுத்தார்? அனாவசிய செலவு என்பது கருப்பு சட்டைக்கார-னுக்கு கிடையவே கிடையாது.

பெரியார் இயக்கத்தில் இல்லாமல் இருந்திருந்தால் கோவிலுக்கு செலவு செய்ய வேண்டும். திருவிழாவுக்கு செலவு செய்ய வேண்டும். அதைவிட அறிவு ரொம்ப குறைவாக ஆகியிருக்கும் சிந்திக்கின்ற மனப்பான்மையே வந்திருக்காது.

இங்கு நல்ல அறிவியல் மய்யம் வர வேண்டும். பொது நலத் தொண்டு அளவுக்குப் பரவ வேண்டும். தந்தை பெரியார் சொன்னார். ஒரு ரூபாய் சம்பாதித்தால் பத்து காசாவது மிச்சப்படுத்து. எனவே எங்களுடைய தோழர்கள் பெரியாருடைய கொள்கையை வாழ்க்கைமுறையாக ஏற்றுக்கொண்டிருக்கக் கூடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சிக்கனக்காரர்கள். பெரியார் சிக்கனக்காரர். சில பேர் பெரியாரை கஞ்சன் என்று நாக்கில் நரம்பில்லாமல் சொல்லு வார்கள். இதைவிட தவ றான புரிதல் வேறொன்றும் கிடையாது.

பணத்தை விரும்பியதுண்டு

அய்யா அவர்கள் பணத்தை விரும்பினார். அதை அவரே சொன்னதுண்டு. எனக்கு பணத்தாசை ரொம்ப அதிகம் என்று ஆனால் அந்தப் பணம் எதற்காக என்பதுதான் முக்கியம். ஒரு காலணா கொடுத்தாலும் அய்யா வாங்கிக்கொள்வார்.

கையெழுத்துப் போட வேண்டும் என்று அய்யா அவர்களிடம் கேட்டால் நான்கணா தர வேண்டும். பெரியார் திரைப்படம் பார்த்திருப்பீர்கள். பெயர் வைக்க வேண்டும் என்று யாராவது கேட்டால் நல்ல பெயர் வைக்க வேண்டுமா? சாதாரண பெயர் வைக்க வேண்-டுமா? என்று கேட்பார்.

சாதாரண பெயர் வைப்பதற்கு ஒரு ரூபாய். நல்ல பெயர் வைப்பதற்கு இரண்டு ரூபாய். நல்ல பெயர் காமராஜ் என்று பெயர் சூட்டுவார்.

எல்லா சொத்துக்களும் மக்களுக்கே

எனவே அய்யா அவர்கள் சேர்த்து வைத்த சொத்துகள் எல்லாம் அறக்கட்டளையாக்கப்பட்டு மீண்டும்பொது மக்களுக்கே பயன்படும்படி ஆக்கப்பட்டிருக்கிறது.

அவரென்ன சொந்த பந்தங்களுக்கு கொடுத்தாரா? அல்லது ஜாதிக்காரர்களுக்கு ஏதாவது அமைப்பை உருவாக்கிக்கொள்ள கொடுத்தாரா?

எல்லா சொத்துகளையும் மக்களுக்கே திருப்பிக்கொடுத்த ஒரு மாபெரும் தலைவர் உலக வரலாற்றிலேயே வேறு எங்கும் காண முடியாது. (கைதட்டல்). அவருடைய அறக்கட்டளையில் அவருடைய ஜாதிக்காரர்கள் கிடையாது. அவருடைய சொந்தக்காரர்கள் கிடையாது.. பெரியாருடைய சொந்தம் என்பதிருக்கிறதே, அது இரத்த பாசத்தைப் பொறுத்ததல்ல; கொள்கைப் பாசத்தைப் பொறுத்தது.

கருப்புச்சட்டைக்காரர்களாகிய நாங்கள் எல்லாம் ஒரே குடும்பம். அய்யா போஸ் அவர்கள் இருக்கிறார்கள், காஞ்சனா அம்மாள் அவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம்தான் நம் உறவுக்காரர்கள்.

சாராய, கஞ்சா சாமியார்

மதுரை மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு ஓடிப் போனவர் ஒருவர். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பார்த்தால் அவனவன் சாமியார், சாமியார் என்று சொல்லுகின்றான்.

நமது மாவட்ட தலைவர் மணிக்கு வேண்டிய மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம். அங்கு யார் சாமியாராக இப்பொழுது இருக்கிறார்கள் என்றால் சாராயம் குடிக்கிறவர்கள் இருக்கின்றார்கள். சாராயம் கஞ்சா உள்ளே போனால்தான் சாமியே குறி சொல்கிறது. இதற்கு ஞாயிற்றுக் கிழமைகளில் அளவு கடந்த கூட்டம். கொழுத்த வருமானம். தொலைக்காட்சியில் இதைக்காட்டினார்கள். ஆயிரக்கணக்கான பேர் வருகிறார்கள். இதைப் பார்த்து என்ன இவ்வளவு அசிங்கமாக இருக்கிறது என்று கருதினோம். ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நேரடிப் போராட்டம் நடத்துவோம். இதை அரசுக்குத் தெரியப்படுத்துகிறோம் என்று பத்திரிகையில் எழுதினோம். பொதுக்கூட்டத்தில் பேசினோம். திருவண்ணாமலையில் நடத்திய கூட்டத்திற்கு எல்லா கட்சிக்காரர்களும் வந்தார்கள்.

உடனே கலைஞர் நடவடிக்கை எடுத்தார்

அடுத்த நாள் காலையிலேயே முதலமைச்சர் கலைஞர் உத்தரவு போட்டார். யார் அந்தச் சாமியார்? நேரே பிடித்து எங்கே வைக்க வேண்டுமோ அங்கே வைத்தார் (கைதட்டல்)

அதன்பிறகு பார்த்தீர்களேயானால் அருள் வாக்கெல்லாம் வரவில்லை. அந்த திருவண்ணாமலையில் ஒரு ரமண ரிஷி எதற்கெடுத்தாலும் மகரிஷி, மகரிஷி, என்று சொல்லுவார்கள். படித்தவன் மாதிரி ஒரு போலியை உலகத்தில் வேறு எங்குமே காண-முடியாது. இந்த வெறும் படிப்பு கோழையாக்குவது மட்டுமல்ல ஒருவரை துணிச்சலாக சிந்திக்க வைப்பதில்லை.

மதுரை மாவட்டம் திருச்சுழியை சேர்ந்தவர். சுழி எப்படியிருக்கிறது என்று பார்க்க வேண்டும். அருப்புக்கோட்டைக்கு பக்கத்திலே இருக்கின்ற ஊர். திருச்சுழியிலிருந்து அரைக்கால் டிரவுசருடன் 50 வருடத்திற்கு முன்னால் திருட்டு ரயில் ஏறி திருவண்ணாமலைக்கு வந்தவர் தான் இந்த ரமணரிஷி.

இவர் கண்ட இடத்தில் சுற்றித் திரிகின்றார். பசி வரும்பொழுது மயக்கம் வருகின்றது. கீழே விழுந்துவிடுகிறார். யாரோ பையன் கீழே விழுந்து விட்டானே என்று தூக்கி உட்கார வைத்தார்கள்.

கொஞ்சநேரம் ஆனது. மரத்தில் சாய்ந்து உட்கார்ந்து பசியால் கண்ணை மூடிக்கொண்டிருந்தார். அடுத்து துணியில்லை. கோவணம் கட்ட ஆரம்பித்தார். சாதாரண வெங்கட்ட ரமணன், வெங்கட் என்பது போய் ரமணர் ஆனார். ரமணர் பிறகு ரிஷி ஆனார். ரமண ரிஷி ஆனபிறகு ஆசிரமம் ஏராளமான சொத்துகள் எக்கச்சக்கமாக சேர்ந்து விட்டது.

நம்ம ஊரிலே மட்டும் முட்டாள் இருப்பான் என்பதல்ல. வெளிநாட்டிலும் இருப்பான். ரமணரிஷிக்கு முதல் சீடர் பெருமாள்சாமி என்பவர். இவர் பாப்பனர் அல்லாத ஒருவர். ரமண ரிஷியை பெரிய ஆளாக ஆக்குவதற்கு உதவிகரமாக இருந்தவர் இவர்.

நான் சொல்வது ஆதார பூர்வமான செய்தி. இது கற்பனை அல்ல. ரமணரிஷி-யினுடைய சீடர் ஒரு புத்தகம் எழுதியிருக்கின்றார்.

ரமண ரிஷி சொத்து உறவினருக்கு

ரமண ரிஷி செல்வாக்கு வந்தவுடனே, பணம் வந்தவுடனே தன்னுடைய தாயாரை வரவழைத்தார். அடுத்தது தனது தம்பியை வரவழைத்தார். சொத்துகளை தனது சகோதரர் மீது எழுதி வைத்தார், ரமண ரிஷி. உடனே பெருமாள் சாமியும், மற்ற சீடர்களும் சென்று சொத்துகளை உங்கள் உறவினருக்கு எழுதி வைக்கலாமா? நீங்களோ சந்நியாசி ஆயிற்றே என்று கேட்டார்கள்.

நீங்கள் பகவான் ரமணரிஷி. நீங்களே பகவான் ஆயிட்டீங்களே சொத்துகளை எப்படி உங்களுடைய குடும்பத்திடம் கொடுக்க முடியும் என்று கேட்டார்கள். யாரிடம்? ரமணரிஷியிடம்.

ஆனால் ரமண ரிஷியோ அதைப் பற்றி கவலைப்படவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. ரமணரிஷியை நீதிமன்றத்திற்கு அழைத்தார்கள். அவர் வர மறுத்து விட்டார்.

ரமண ரிஷியின் மர்மங்கள் என்ற தலைப்பில் பெருமாள்சாமி என்ற சீடர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 1934, 1935ஆம் ஆண்டுகளில் இந்த வழக்கு வந்தது.

இந்த செய்திகள் ஆங்கிலத்திலும், தமிழி-லும் நூலாகவே வந்திருக்கிறது. ஆதார பூர்வமாக சொல்லுவது தான் எங்களுக்கு வழக்கமே தவிர வேறு அல்ல. ரமணரிஷியின் வழக்கு இன்னமும் முடியவில்லை.

நம்முடைய நாட்டில் எந்தவொரு வழக்கும் அவ்வளவு எளிதாக முடிந்து விடாது. வெள்ளி விழா, பொன்விழாவைத் தாண்டித்தான் ஒவ்வொரு வழக்கும் நடைபெற்று வருகிறது.

வழக்கு போட்ட ஆளும் செத்துப் போனார். வக்கீலும் செத்துப்போனார். நீதிபதியும் செத்துப்போனார். வழக்கு மட்டும் உயிரோடு இருக்கிறது. வழக்கு பாட்டுக்கு நடந்து கொண்டிருக்கும். ஒன்றுமில்லை.

காஞ்சிபுரம் யானைக்கு வடகலை நாமம் போடுவதா? அல்லது தென்கலை நாமம் போடுவதா? என்று பிரச்சினை. யானைக்கு எந்த நாமம் போடுவது என்பதில் தகராறு. வெள்ளைக்காரர்கள் காலத்தில் லண்டன் பிரிவி கவுன்சில் வரை இந்த வழக்கு வந்தது.

வெள்ளைக்கார நீதிபதிகளிடம் வழக்கு வந்த பொழுது வடகலை என்றால் என்ன? தென்கலை என்றால் என்ன? என்று கேட்டனர். இவர்களுக்கு வாதாடியவனும் வெள்ளைக்காரன். வெள்ளைக்கார- வழக்கறிஞர் நீதிபதிகளிடம் கஷ்டப்பட்டு விளக்கினார். மைலார்டு அவர்களே! இது ஒன்றுமில்லை; ஒய்(Y)-யுக்கும், யு (U)வுக்கும் இருக்கின்ற சண்டை என்று சொன்னார்.

ஒய் (Y) என்றால் பாதம் வைத்திருக்கும் யு (U) என்றால் பாதமில்லாத நாமம். எனவே இந்த இரண்டு நாமத்தில் எந்த நாமத்தை யானைக்கு வைப்பதில் என்பது பிரச்சினை என்று சொன்னார். காஞ்சிபுரம் கோவில் யானைக்கு ஒரு வாரம் இந்த நாமம் போடு; இன்னொரு வாரத்திற்கு இன்னொரு நாமம் போடு என்று சொன்னார். யானையும் செத்து போய் விட்டது-. இன்னமும் அந்த வழக்கு முடியவில்லை. அது போல ரமண ரிஷி வழக்கு இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது.

ரமணரிஷி தன்னுடைய தம்பிக்கு எல்லா சொத்தையும் எழுதி விட்டார். ரமண ரிஷியின் குடும்பம் ஆசிரமத்தில் வந்து அமர்ந்து விட்டது.

இப்பொழுது நினைத்துப் பாருங்கள் கடவுள் இல்லை என்று சொன்ன தந்தை பெரியார் நீங்கள் கொடுத்த நான்கணாவைக்கூட பத்திரமாக வைத்துமுடிச்சு போட்டு வைத்து அதை மீண்டும் பொது மக்களுக்கு பயன்படும்படி அறக்கட்டளையாக்கி பல்கலைக் கழகமாக, கல்லூரிகளாக மருத்துவமனைகளாக, பிரச்சார கேந்திரங்களாக ஆக்கியிருக்கின்றார்.

கடவுள் இல்லை என்று சொன்ன தந்தை பெரியார் மனிதநேயப் பணிகளை செய்தார். அதே நேரத்திலே கடவுள் அவதாரம் என்று சொன்ன ரமண ரிஷி, மக்கள் கொடுத்த அவ்வளவு தொகையையும் தனதாக்கிக்கொண்டார்.

இதில் யார் உயர்ந்தவர்கள்? இன்றைக்கும் கடவுள் பெயரால் தானே மக்களிடையே சண்டை; இன்றைக்கும் மதத்தின் பெயரால் தானே மக்களிடையே சண்டை.. எனவே கடவுள் மனிதர்களைப் பிரித்திருக்கிறது. மதம் மனிதர்களைப் பிரித்திருக்கிறது. ஜாதி மனிதர்களைப் பிரித்திருகிறது.

இவைகளை எல்லாம் எதிர்த்த பெரியார் மனிதர்களை நேசித்தார். மனிதர்களை ஒற்றுமைப்படுத்தினார். சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என்று தந்திருக்கின்றார். அப்படிப்பட்ட தந்தை பெரியாரின் பிள்ளைகள் ஆயிரம் காலத்துப் பயிர்கள்.

அந்தப் பணிகள் சிறப்பாக நடைபெற அய்யா போஸ் அவர்கள் வழங்கிய நிலமிருக்கிறதே அது மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்து சிவகாசியிலே ஒரு புதிய அத்தியாயம், திராவிடர் இயக்க வரலாற்றிலே மட்டுமல்ல; மனிதநேய வரலாற்றில் பொறிக்கப்படும் என்று சொல்லி, வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.

பெரிதா, சிறிதா என்பது முக்கியமல்ல. ஒவ்வொருவருடைய பங்களிப்பும் இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் உதவ வேண்டும். பெரியார் எப்படி எல்லோருக்கும் சொந்தமோ அது போல பெரியார் மய்யமும் மக்களுக்குச் சொந்தம் என்று கூறி விடைபெறுகிறேன்.

இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

------------------ “விடுதலை” 26-1-2010

0 comments: