Search This Blog

25.1.10

2010-லும் குழந்தைத் திருமணங்களா?



கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெண் சிசுக் கொலை மட்டுமல்ல; குழந்தைத் திருமணமும் அதிக அளவில் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளிவருகின்றன.

இதுகுறித்து ஒரு விழிப்புணர்வுக் கருத்துப் பட்டறை ஜனவரி 23 ஆம் தேதி கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. சமூகநல வாரியத்தின் ஆணையர் எம்.பி. நிர்மல், மாவட்ட ஆட்சியர் வே. சண்முகம், வாரியத் தலைவர் கவிஞர் சல்மா, மக்களவை உறுப்பினர் ஜி. சுகவனம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.

இத்தகைய குழந்தைத் திருமணங்களைத் தடுத்திட ஊராட்சித் தலைவர்களுக்கு அதிகாரம் இருப்பதுபற்றி சமூக நலத்துறை ஆணையர் கருத்துப் பட்டறையில் விளக்கிக் கூறியுள்ளார்.

ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சமூகநல விரிவாக்க அலுவலர் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றுகின்றார். அவர்தான் இக்குழுவின் அமைப்பாளரும்கூட. கிராம நிருவாக அலுவலர், மகளிர் சுய உதவிக் குழு செயலாளர், பள்ளித் தலைமை ஆசிரியர், பெண் வார்டு உறுப்பினர் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

விழிப்புணர்வுடனும், இலட்சிய உணர்வுடனும், எந்த நிலையிலும் குழந்தைத் திருமணம் நடைபெறாமல் தடுக்கப்படவேண்டும் என்ற ஆர்வமும், கடமை உணர்வும் இந்தக் குழுவில் உள்ள ஒருவருக்கு இருந்தால்கூடப் போதுமானதே!

குழந்தைத் திருமணங்கள் குறிப்பிட்ட மாவட்டத்தில், அதிலும் குறிப்பிட்ட வட்டாரத்தில் நடைபெறுகிறது என்றால், இந்தக் குழுவின் உறுப்பினர்கள் இதில் தேவையான அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. அல்லது அத்தகு திருமணங்கள் நடைபெறுவதற்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்று பொருளாகும்.

மனித உரிமைகளும், பெண்ணுரிமைகளும் கொடி கட்டிப் பறக்கும் இந்தக் காலகட்டத்தில் இது மாதிரி திருமணங்கள் நடைபெறுவது பெரிதும் வருந்தத்தக்கதாகும்.

இந்து மதத்தின் பார்ப்பனிய மிச்ச சொச்சங்கள் இன்னும் துடித்துக் கொண்டுதான் இருக்கின்றன என்பதற்கு இது ஒரு முக்கிய அடையாளமாகும்.

திருமண வயது வரம்பை உயர்த்தவேண்டும் என்று சாரதா சட்டம் கொண்டு வரப்பட்ட நேரத்தில் பார்ப்பன தேசியத் திலகங்கள் அடேயப்பா, சிண்டை அவிழ்த்துவிட்டு எதிர்க்கூத்தாடின.

பெண் பூப்படைவதற்குமுன் கல்யாணம் செய்விக்கப்படவேண்டும் என்று யாக்ஞவல்கியர் கூறியிருக்கிறார். அப்படி செய்யாவிட்டால், ரவுரவாதி நரகத்திற்கு நாங்கள் போகும்படி நேரும்.

நாங்கள் சட்டத்தை மீறி சிறைக்குச் சென்றாலும் செல்வோமே தவிர, சாஸ்திரத்தை மீறி ஒருக்காலும் நரகத்திற்குப் போகமாட்டோம் என்று வெறிக் கூச்சல் போட்டனர்.

அவற்றையெல்லாம் மீறி பார்ப்பனர்களால் மிலேச்சர்கள் என்று அழைக்கப்பட்ட வெள்ளைக்காரர்களின் ஆட்சியில் சட்டம் கொண்டு வரப்பட்டு, குழந்தைத் திருமணம் என்ற கொடுமை சட்டப்படி நிறுத்தப்பட்டது.

கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்குப் பிறகும் அதன் எச்சங்கள் இருப்பதைக் கண்டிப்பாக தடுத்தே ஆகவேண்டும்.

குழந்தைகள், திருமணச் சந்தையில் பலிகடா ஆக்கப்படுவது மிகவும் மோசமான மனித உரிமை மீறலாகும்.

ஒரு பக்கம் விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடக்கட்டும்; அது அவசியமே! அதே நேரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்தாகவேண்டும்.

மாவட்ட ஆட்சியர் இதில் கடுமையாக இருந்தால், கண்டிப்பாகத் தடுத்து நிறுத்திவிட முடியும்.

கிருஷ்ணகிரி மாவட்ட திராவிடர் கழகப் பொறுப்பாளர்களும் இதில் கவனம் செலுத்தி தலைமைக்குத் தெரிவித்தால், அதன்கீழ் உரிய நடவடிக்கைகளை எடுக்க முடியுமே!

--------------------- “விடுதலை” தலையங்கம் 25-1-2010

0 comments: