
(முகமூடி அணிந்துள்ள ஆர்.எஸ்.எஸ். அதன் ஆயுதமான ஹிந்துத்வத்தை எப்படியெல்லாம் சந்தர்ப்பத்திற்கேற்ப பயன் படுத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ள மிக அருமையான நூல் கர்கரேயைக் கொன்றது யார்? என்ற தலைப்பில், ஓய்வு பெற்ற அய்.பி.எஸ். அதிகாரியும் விருப்ப ஓய்வு பெற்று பதவி விலகிய மகாராஷ்டிர அய்.ஜி.யுமான முஷ்ரப் அவர்கள் எழுதியுள்ள நூல்!
பல திடுக்கிடும் உண்மைகள், மறைக்கப்படும் செய்திகள், இவற்றிற்கெல்லாம் மூல காரணங்கள் பார்ப்பனப் பிடிப்புக்குள் சிறைப்பட்டுள்ள அல்லது பார்ப்பனமயமான இந்திய உளவுத் துறையும், இந்திய ஊடகத்துறையும், கடமை தவறி ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனுநீதியின் மறு உருவங்களாகத் திகழ்கின்றன.
இந்நூல் முன்னுரை, மற்றும் முக்கிய சில அத்தியாயங்களை தமிழ் கூறும் நல்லுலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, மானமிகு சு.அறிவுக்கரசு அவர்கள் தமிழாக்கம் செய்து தருகிறார்; படியுங்கள்; (பேச்சாளர்கள்) பரப்புங்கள்.
- ஆசிரியர் கி.வீரமணி)
கர்கரேயைக் கொன்றது யார்? (6)
ஊடகங்களில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் நிலவுவதற்கான காரணமே அவர்கள் கல்வித் துறையில் செலுத்திய ஏகபோகமே! இதன் காரணமாக இதழியலும் அவர்களின் கட்டுப்பாட்டில் தொடக்கம் முதலே வந்துவிட்டது. ஆரம்ப கட்டத்தில், பார்ப்பன பத்திரிகையாளர்கள் பொது மக்களைப் பாதிக்கும் சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகள் பற்றி எழுதி வந்தனர். ஏடுகள் மூலம் மக்களின் குறைகளைத் தெரியப்படுத்திஅரசின் கவனத்தை ஈர்த்து,அவற்றைக் களையும் நடவடிக்கைகளைச் செய்ய வைத்தனர். அதிகாரிகளின் எதேச்சாதிகாரப் போக்கிற்கும் ஆளுவோரின் பாரபட்சமான செயல்களுக்கும் எதிராகக் காவலர்களாகப் பத்திரிகைகள் பணியாற்றின.
ஆனால், 19 ஆம் நூற்றாண்டின் கடைசிப் பத்தாண்டுகளில் இந்நிலை மாறி பார்ப்பனிய வெறி கொண்ட பார்ப்பனர்கள், பார்ப்பனியர்களின் எண்ணங்களை நிறைவேற்றிடவும், சீர்திருத்த இயக்கங்களின் பக்கம் பொதுமக்களின் கவனம் செல்லாமல் திசை திருப்பிடவும் பயன்படுத்தி, பழங்காலங்களைப் போல சமுதாயத்தைத் தம் ஆதிக்கத்தின் கீழ் வைத்திடும் எண்ணத்தில் இந்துக்களும் முசுலிம்களும் மோதிக்கொள்ளும்படிச் செய்து விட்டனர். சமுதாயத்தில் நிலவி வந்த சுமுகச் சூழ்நிலையைக் கெடுத்து பொதுமக்களிடையே தவறான தகவல்களைத் தந்து பொதுமக்களைக் கேடான வழியில் திசை திருப்பிவிட்டனர்.
சுதந்திரத்திற்குப் பிறகு, உள்ளூர் (மாநில) மொழிகளில் நடத்தப்படும் பத்திரிகைகளில் பார்ப்பனியர்கள் முழு ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்தக் காலகட்டத்தில் வேறு ஜாதி, இனம், கொள்கை ஆகியவற்றைக் கொண்டோர்களும் பத்திரிகைத் துறையில் நுழைந்தார்கள். என்றாலும் அவர்கள் மிகச் சிறுபான்மையினராகவும் தங்கள் எண்ணத்தை எடுத்துச் சொல்ல இயலாதவர்களாகவும் இருந்தனர்.
பார்ப்பனியர்களே இத்துறையில் ஏகபோக ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்பதை அறிந்திருந்த கார-ணத்தால், பார்ப்பனியர்களின் நடவடிக்கைகளுக்கு மாறாகவோ எதிராகவோ எதுவும் செய்ய இயலாதவர்களாகவும் அவர்களை அனுசரித்துப் போக வேண்டிய நிலையிலும் அவர்கள் உள்ளனர். எவராவது மாறாகச் செல்லவோ, எதிர்க் கருத்து கூறவோ முயன்றால், அவர்கள் ஓரங்கட்டப்பட்டு இதழியல் துறையிலிருந்தே அப்புறப்படுத்தப்பட்டுவிடுவர். உள்ளூர் (மாநில) மொழிப் பத்திரிகைத்துறை எப்படி இருந்தபோதிலும், இங்கிலீஷ் செய்தித் தாள்கள் அவர்களின் பிடியில் சிக்காமல் சுதந்திரமாகவும் பாரபட்சமின்றியும் செயல்பட்டு வந்தன என்பதுதான் சீர்திருத்தவாதிகள், மதச் சார்பற்றவர்கள், சிறுபான்மையர் ஆகியோருக்கு இருந்த ஒரே ஆறுதல்.
இதுவும் கூட, அந்த ஏடுகள் பெரிய நகரங்களில் இருந்து வெளிவந்த காலத்தில் மட்டும்தான் நிகழ்ந்தது. மாநிலங்களின் பிற நகரங்களிலிருந்தும் வெளிவரத் தொடங்கியபோது பார்ப்பனியர்கள் பெருமளவில் ஊடுருவிவிட்டனர். இன்றைய நிலையில் இங்கிலீஷ் ஏடுகளையும் மின்னணு ஊடகங்களையும் பார்ப்பனர்களே தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றனர். அதன் விளைவாகப் பார்ப்பனியர்கள் எல்லா ஊடகங்களிலும் பரவி அரசாங்கத்தின் உயர் அதிகாரி முதல் கீழ் நிலைப் பணியாளர் வரை மிரட்டி வருகின்றனர்; வியாபாரிகளையும் பொது மக்களையும் கூட இவர்கள் விட்டு வைக்கவில்லை.
அய்.பி.அய்க் கைப்பற்றியது ஆர்.எஸ்.எஸ். இந்திய அரசின் முதன்மையான உளவு நிறுவனம் அய்.பி. ஆகும். இன்னும் சொல்லப் போனால், அரசின் கண்களும் காதுகளுமாக இருப்பவை. எனவே, ஆரம்பத்திலிருந்தே இந் நிறுவனத்தில் ஊடுருவப் பார்ப்பனியர்கள் முயன்று, நாடு விடுதலை பெற்ற 10 ஆண்டுகளுக்குள்ளேயே அய்.பி. அய்யின் முழுக் கட்டுப்பாட்டைப் பெற்று விட்டனர். அரசு நிறு-வனம் ஒன்றை வகுப்புவாத அமைப்பு ஒன்று எப்படி கபளீகரம் செய்ய முடியும் என்பதற்கும் சிறந்த எடுத்துக் காட்டு இது. இதனை அவர்கள் நிறைவேற்றிய விதம் சுவாரஸ்யமானது. அய்.பி. இல் அதிகாரிகள், பணியாளர்கள் என இரு பிரிவு உண்டு. சிலர் நிரந்தரமானவர்-கள்; சிலர் தற்காலிகமாக, அதுவும் உயர்நிலை, இடைநிலை அதிகாரிகளாக இருப்போர் மாநிலக் காவல்துறையில் இருந்து எடுக்கப்பட்டவர்கள் எனவும் இருவகை உண்டு. பார்ப்பனியர்கள் அய்.பி.இன் உயர் நிலைப் பதவிகளில் நுழைந்து நிலையான பதவிகளில் அமர்ந்து கொண்டனர். மாநிலங்களில் அய்.பி.எஸ். அதிகாரிகளாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ். எண்ணங்கொண்ட இளம் அதிகாரிகளை மாநிலப் பணியில் இருந்து அய்.பி. பணிக்குச் செல்லுமாறு பார்ப்பனிய அமைப்புகள் பணித்து வந்தன.
இது குறித்து மராத்தி மொழிப் பத்திரிகையான பகுஜன் சங்கார்ஷ் எனும் ஏடு 30.4.2007 இல் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். சார்புள்ள அதிகாரிகள் அய்.பி. இல் உயர்நிலையில் உட்கார்ந்து கொண்டு, அதிகாரிகளை அடையாளம் காட்டித் தேர்ந்தெடுத்ததால், அப்படிப்பட்டவர்கள் அய்.பி. இல் 15 முதல் 20 ஆண்டுகள் வரையில் பதவியில் இருக்கவும் சில பேர் தம் பணிக்காலம் முழுமையும் நீடிக்கவுமான நிலை உள்ளது. வி.ஜி. வைத்யா எனும் மகாராட்டிர மாநிலக்காரர், தாம் ஓய்வு பெறும் வரை அய்.பி.இல் இருந்து மிக உயர்ந்த பதவியான இயக்குநர் பதவியை வகித்தார். அதே சமயத்தில் அவருடைய சகோதரர் எம்.ஜி.வைத்யா மகாராட்டிர மாநில ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்தார். அய்.பி.இல் பணிபுரியும் அய்.பி.எஸ்.காரர்களைப் பற்றிய விவரங்களைக் கூர்ந்து நோக்கினால், அவர்களில் பெரும்பாலோர் ஆர்.எஸ்.எஸ். அனுதாபிகள் என்பதும் அதனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என்பதும் அதன் எண்ணங்களை நிறைவேற்றிட ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கட்டளைப்படி அவர்கள் அய்.பி. ரா (RAW) அமைப்புகளில் சேர்ந்து பணியாற்றுகின்றனர் என்பதும், தெரிய வரும். ஆர்.எஸ்.எஸ். அனுதாபியாக இல்லாதவர்களும் கூட அய்.பி.இல் இருந்தாலும் அவர்கள் முக்கியமற்ற பதவிகளில் அமர்த்தப்பட்டு உள்ளனர் என்பதும் விளங்கிவிடும்.
----------------------- “விடுதலை” 12-1-2010
0 comments:
Post a Comment