Search This Blog

4.1.10

ஜாதி மறுப்புத் திருமணத்தில் ஒரு புரட்சி

நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறும் திருமணம்
துரை. சந்திரசேகரன் இல்லத் திருமணத்தில் தமிழர் தலைவர் புகழாரம்

திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன் மகள் அறிவுப்பொன்னி _ எழில்வடிவன் மணவிழாவை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார் (குறிஞ்சிப்பாடி, 3.1.2009)

குறிஞ்சிப்பாடியில் நேற்று நடைபெற்ற அறிவுப் பொன்னி_ எழில் வடிவன் ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்தத்தை நடத்தி வைத்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கொள்கை நிலையில் இது நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறும் திருமணம் என்று குறிப்பிட்டுப் பாராட்டினார்.

திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன்- கலைச்செல்வி ஆகியோரின் மகள் அறிவுப் பொன்னி பி.டெக். (வடலூர்) ஈரோடு கைகாட்டி வலசை சு.கலைவாணன் - சாந்தி ஆகியோரின் மகன் எழில்வடிவன் பி.டெக். ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா குறிஞ்சிப்பாடி பத்மாவதி திருமண மண்டபத்தில் 3.1.2010 ஞாயிறு முற்பகல் 11 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக குறிஞ்சிப்பாடி வழியாக வருகை தந்த தமிழர் தலைவருக்கு ஊரின் எல்லையில் கடலூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ஆர்.பன்னீர்செல்வம், சிதம்பரம் மாவட்ட திராவிடர் கழத் தலைவர் இளங்கோவன் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர். குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலமாகக் கழகத் தோழர்கள் தமிழர் தலைவரை திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர்.

குறிஞ்சிப்பாடி முழுவதும் இருமருங்குகளிலும் கழகக் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்தன. ஊரே கொடிக்காடாகக் காட்சி அளித்தது. கழகத் தலைவரும், கழகப் பொருளாளரும் மணவிழாவில் குறிப்பிட்டது போல திருமணத்தை ஒட்டி கழக மாநாடே நடத்தி இருக்கலாம் என்று தோன்றியது. கன்னியாகுமரி முதல் திருத்தணி வரை கழகப் பொறுப்பாளர்கள் திரண்டு வந்திருந்தனர்.

துரை. சந்திரசேகரன் வரவேற்புரை

திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தம் வரவேற்புரையில் குறிப்பிட்டதாவது:

இந்தத் திருமண ஏற்பாட்டில் என் பங்கு ஏதும் இல்லை. எல்லாவற்றையும் கழகத் தோழர்களே முன்னின்று பார்த்துக் கொண்டனர். அனைத்து உதவிகளையும், பங்களிப்பையும் செய்தனர். என் மீது கழகத் தோழர்கள் வைத்துள்ள அன்புக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். அய்யா, நல்ல. கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு, என் கல்விக்குப் பேருதவி புரிந்த கடலூர் சுப்பராயன்- ராஜேஸ்வரி குடும்பத்தினருக்கு, என்னை இந்த அளவுக்குக் கழகத்தில் வளர்த்து ஆளாக்கிய தமிழர் தலைவர் அவர்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் அறிந்ததெல்லாம் பெரியார் கொள்கை. திராவிடர் கழகம். கழகத் தலைவர் இவர்களைத்தான். அட்சரம் பிறழாமல் நடந்து வந்திருக்கிறேன். இனியும் நடப்பேன் என்று உறுதி கூறுகின்றேன்.

நாங்கள் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டோம். தமிழர் தலைவர்தான் நடத்தி வைத்தார். எங்கள் மகளுக்கு இப்பொழுது தலைமையேற்று நடத்தி வைக்கிறார். இவர்களின் பிள்ளைகளுக்கும் அவர்தான் தலைமையேற்று நடத்தி வைப்பார்.

என்னுடைய ஜாதியிலோ, என் இணையரின் ஜாதியிலோ மணமகன் இருக்கக்கூடாது என்பதிலே தெளிவாக இருந்தோம். அதன்படியேதான் இந்தத் திருமணம் நடக்கிறது என்று கூறி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

மாண்புமிகு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாண்புமிகு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தன் வாழ்த்துரையில் குறிப்பிட்டதாவது:

நண்பர் துரை. சந்திரசேகரன் அவர்கள் கட்சி பேதமின்றி அனைவருடனும் அன்புடன் பழகி, இப்பகுதியில் நன்மதிப்பைப் பெற்றவர். என் தந்தையார் அவர்களிடத்தில் மிக்க அன்புள்ளவர், என் தந்தையாரும் இவரிடம் பாராட்டுவார். எங்கள் காட்டுமன்னார்குடி பகுதியில் நடக்கும் திருமணங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் வந்து கலந்து கொண்டு கொள்கைப் பிரச்சாரம் செய்யக் கூடியவர்.

பேருந்து, சைக்கிள் என்று எது கிடைத்தாலும் நிகழ்ச்சிக்கு வந்து சேர்ந்துவிடுவார். நான் அமைச்சராக இருந்தாலும் தனது சொந்தக் காரியம் என்று என்னிடம் அணுகியதில்லை. பொதுக் காரியங்களுக்காக அணுகியிருக்கிறார். இது அவருடைய தனிச்சிறப்பாகும்.

நமது தமிழர் தலைவர் அவர்கள் இந்தக் குடும்பத் திருமணத்திற்குத் தலைமை வகித்து நடத்திக் கொடுப்பது பொருத்தமானதாகும். தமிழர் தலைவர் அவர்கள் முதல் அமைச்சர் கலைஞர் அவர்களை அன்றாடம் சந்திக்கக்கூடியவர். ஆசிரியர் அவர்களின் ஆலோசனைகளை கேட்கக் கூடியவர் கலைஞர். இந்த ஆட்சிக்கு உறுதுணையாக இருக்கக்கூடியவர் நமது தமிழர் தலைவர் என்று கூறி மணமக்களுக்குத் தம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் இணைவேந்தர், தொழிலதிபர் வீகேயென் கண்ணப்-பன் அவர்கள் மணமக்கள் எல்லா நலன்கள், வளங்கள் பெற்று நீடு வாழ வேண்டும் என்று வாழ்த்தினார்.

பேராசிரியர் பழமலய்

துரை. சந்திரசேகரன் அவர்களின் கல்லூரிப் பேராசிரியர் பழமலய் அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

துரை.சந்திரசேகரன் கல்லூரியில் படிக்கும் போதே மாணவர்களை அணுகி திராவிடர் கழகத்திற்கு ஆள் சேர்க்கக்கூடியவர். பி.ஏ.யில் இறுதியாண்டு படித்தபோதுகூட, முதலாண்டு மாணவர்களிடம் நட்பாக இருந்து அவர்களைக் கழகத்தின் பால் கொண்டு வந்து சேர்ப்பார்.

இந்தத் திருமண மண்டபத்தின் வாசலில் ஒரு ஆலமரம் இருக்கிறது. அதனைத் தொடக்கத்தில் நட்டவர் நமது ஆசிரியர் என்று சொன்னார்கள். அந்தக் கன்று இப்பொழுது வளர்ந்து விழுது விட்டு தழைத்திருக்கிறது. அது போன்றே தந்தை பெரியார் அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை நமது ஆசிரியர் அவர்கள் ஆல்போல் தழைக்கச் செய்திருக்கிறார் என்று குறிப்பிட்டு, மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

டாக்டர் வெ.குழந்தைவேலு

மக்களவை முன்னாள் உறுப்பினரும் சிறந்த பகுத்தறிவுவாதியுமான டாக்டர் வெ.குழந்தைவேலு அவர்கள் தம் உரையில் ஜாதியும், வரதட்சணையும் நம் நாட்டைப் பிடித்த புற்றுநோய். அதை வேரோடு அறுப்பதுதான் திராவிட இயக்கத்தின் கொள்கை என்று குறிப்பிட்டார்.

நீதிபதி அசோகன்

என் துணைவியாரின் பெயர் அறிவுக்கண்ணு. அவருக்கு அவ்வாறு பெயர் சூட்டியவர் தந்தை பெரியார். பெரியார் என்ற மாமனிதர் இல்லை என்றால் எங்களைப் போன்றவர்கள் நீதிபதிகளாக வந்திருக்க முடியாது; எங்காவது மாடுதான் மேய்த்துக் கொண்டிருந்திருப்போம். அந்த நன்றி உணர்ச்சி நம் மக்களுக்கு இருக்க வேண்டும்.

சாமி மீது நம்பிக்கை வைத்திருக்கும் தமிழர்களின் முன் சாமியா? பெரியாரா? என்ற கேள்வியை முன் வைத்தால், பெரியார்தான் என்று முதலில் சொல்லுவார்கள். அதற்குக் காரணம் அவரின் தொண்டால்தான் நாம் மனிதர்கள் ஆனோம்.

ஆசிரியர் அவர்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் நான் நெகிழ்ச்சிக்கு ஆளாவதுண்டு. அவர் யார் யாருக்கெல்லாம் வாதாடுகிறார் என்பதுதான் முக்கியம். கருஞ்சட்டைத் தோழர்களுக்குச் சரியாக வழிகாட்டி இயக்கத்தை தந்தை பெரியார் வழியில் சரியாக நடத்திச் செல்கிறார் என்று குறிப்பிட்டு துரை. சந்திரசேகரன் சிறப்புகளையும் எடுத்துச் சொல்லி மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

வழக்கறிஞர் கோ.சாமிதுரை ஏம்.ஏ.,பி.எல்.

தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் சார்பில் திராவிடர் கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை அவர்கள் தம் உரையில் குறிப்பிட்டதாவது:

கடவுள் இல்லை என்று சொல்கிறவர்கள் வெற்றி பெறுபவர்கள். உதாரணத்துக்கு நமது துரை. சந்திரசேகரன். மாணவப் பருவந்தொட்டு ஆடாமல் அசையாமல் உறுதியாக நின்று கழகப் பணிகளை ஆற்றி உயர்ந்து வருகிறார். தொடக்கத்திலேயே இவரை அடையாளங்கண்டு வளர்த்து எடுத்தவர் நமது ஆசிரியர் அவர்கள்தான் என்று கூறி, இரு குடும்பங்களும் நமது கழகக் கொள்கைக் குடும்பங்கள் என்று பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

தமிழர் தலைவர் உரை

அறிவுப்பொன்னி _ எழில்வடிவன் ஆகியோர் தம் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவுக்குத் தலைமை வகித்து நடத்தி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

தோழர் துரை. சந்திரசேகரன் முன்னதாக வரவேற்றார் என்றாலும், இது நமது கழகக் குடும்பத்துத் திருமணம் என்பதால் நானும் ஒரு முறை அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்.

மணமகளின் பெற்றோர்களுக்கு துரை. சந்திரசேகரன்-கலைச்செல்வி ஆகியோருக்கு நான் திருமணம் நடத்தி வைத்தேன். இதே குறிஞ்சிப்பாடியில் ஞாயிற்றுக் கிழமை மாலை 5.30 மணிக்குக் கொழுத்த இராகு காலத்தில் நடத்தி வைத்தேன். அது மட்டுமல்ல. மணமகன் எழில்வடிவன் பெற்றோர்களுக்கும் நான்தான் திருமணம் நடத்தி வைத்தேன். எளிய முறையில் சென்னை பெரியார் திடலில் நடத்தி வைத்தேன். என் தலைமையில் திருமணம் செய்து கொண்ட குடும்பங்களுக்கிடையே இப்பொழுது மீண்டும் என் தலைமையில் திருமணம் நடைபெறுகிறது. மணமகனின் தந்தையார் அவர்களின் சகோதரியார் டாக்டர் பிறைநுதல்செல்வி - டாக்டர் கவுதமன் (காதல் திருமணம்) ஆகியோருக்கு பதிவு முறையில் என் தலைமையில்தான் திருமணம் நடைபெற்றது.

இவர்களின் பிள்ளைகளுக்கும் நான் தலைமை வகித்து நடத்துவேன் என்று துரை.சந்திரசேகரன் கூறினார். இன்றைக்கு அறிவியல் வளர்ந்துள்ள நிலையில் நான் இருந்து அந்தக் கொள்ளுப் பேத்தி, பேரன்களுக்குத் தலைமை வகித்துத் திருமணம் நடத்தும் வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது.

கலைச்செல்வியின் பெற்றோர், துரை.சந்திரசேகரன் அவர்களின் மாமனார், மாமியார் திருமணமும் சுயமரியாதை முறையில் வக்கீல் அய்யா என்று அந்தக் காலத்தில் பெருமையுடன் கூறப்படும் நாகை டி.கே.விஜராகவலு அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

அவர்களின் உறவினரான ஜெயமோகன் அவர்களின் திருமணம் புரட்சிக் கவிஞர் தலைமையில் நடைபெற்றது. அதில் நான் வாழ்த்துரை வழங்கி இருக்கிறேன். வாழையடி வாழையாக வந்த கொள்கைக் குடும்பம் இது.

இன்று துரை.சந்திரசேகரனுக்கு இயக்கத்தில் ஒரு முக்கிய இடம் கிடைத்திருக்கலாம். ஆனால் அவர் படிக்கும் காலத்தில் எத்தகைய நிலை? அன்று கடலூர் புரவலர் எஸ்.எஸ். சுப்பராயன்- ராஜேஸ்வரி இணையர் தம் வளர்ப்புப் பிள்ளைபோல துரை.சந்திரசேகரனை எண்ணி உதவிகள் புரிந்தனர். அவர்கள் எனக்கும் உதவி செய்ததுண்டு.

ஒரு வாரத்துக்கு முன் துரை.சந்திரசேகரன் அவர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றதும் பூரித்துப் போனேன். ஒரு காலத்தில் திராவிடர் கழகத்துக்காரர்கள் என்றால், சூனா மானாக்கள் என்றால், படிக்காதவர்கள் என்று ஏளனம் செய்வார்கள். இதோ நமது துரை.சந்திரசேகரன் ஆய்வுப் பட்டம், டாக்டர் பட்டம்பெற்றுள்ளாரே!

ஒரு காலத்திலே அண்ணாவிற்கு என்ன பெருமை? எனது ஆசிரியர் திராவிடமணி அவர்கள் கூட்டத்துக்கு துண்டறிக்கை போடும்போது அண்ணாதுரை என்பது சிறிய எழுத்துகளாக இருக்கும். எம்.ஏ. என்பது பெரிய எழுத்துகளில் இருக்கும்.

இன்றைக்கு எம் தோழர்கள் ஆய்வுப் பட்டங்களைப் பெறும் அளவிற்கு உயர்ந்துள்ளார்கள்.

நீதிபதி அசோகன் உருக்கமுடன் சில வார்த்தைகளைச் சொன்னார். இவர்கள் எல்லாம் நீதிபதிகளாக இருக்கிறார்கள் என்பது இந்த இயக்கத்துக்குக் கிடைத்த பெருமை என்று பூரிப்படைகிறேன்.

பெரிய பதவிகளில் உள்ள சில தமிழர்கள் தந்தை பெரியார் அவர்களைப் பார்க்க வருவதுண்டு. தந்தை பெரியார் அவர்கள் அந்த அதிகாரிகளைக் கொஞ்சம் கடிந்து கொள்வார். எங்களுடைய நன்றி உணர்ச்சியைக் காட்டிக் கொள்ள வந்தோம் என்பார்கள். தந்தை பெரியார் கூறுவார். தயவு செய்து வாசல் பக்கம் போகாதீர்கள். பின்புறமாகச் செல்லுங்கள் என்று அறிவுரை கூறுவார்.

இன்றைக்கு எவ்வளவோ கால மாற்றங்களைப் பார்க்கிறோம். வெளிப்படையாகப் பேசுகிறார்கள். வெளிப்படையாக நாமும் பாராட்டுகிறோம். தந்தை பெரியார் கொள்கைகளில் உறுதியான வளர்ச்சியைத் தான் இது காட்டுகிறது.

என் பேத்தி பேரனுக்கு நடக்கும் திருமணத்திற்கு வந்துள்ளோம் என்ற உணர்ச்சியோடு இருக்கிறோம். ஜாதி மறுப்பு,- தாலி மறுப்பு, நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்கும் திருமணம் இது. அறிவுப்பொன்னி பெயருக்கேற்ற அறிவும், துணிவும், பணிவும், கனிவும் கொண்டவர்.

பெரியார் மட்டும் பிரியாணி சாப்பிடாமல் இருந்தால் வடலூர் ஞானசபைக்குத் தந்தை பெரியாரே தலைவராக ஆகி இருப்பார் என்று பேராசிரியர் பழமலய் இங்கு கூறினார்.

இங்கே வடலூருக்கும் ஈரோட்டுக்கும்தான் திருமணம். கலைஞர் ஆட்சியில் இந்த வடலூரில் ஒரு புரட்சி நடந்திருக்கிறது. வடலூரில் வள்ளலாரின் ஞானசபையில் அவரின் கொள்கை கோட்பாடுகளுக்கு விரோதமாக ஆரியம் புகுந்தது, உருவ வழிபாடு நடத்தப்பட்டது. கலைஞர்தான் அந்த ஆரியத்தை வெளியேற்றினார்.

ஆண்டவன் கொடுப்பான் என்பதெல்லாம் வீண் பேச்சு. உண்மையிலே ஆள்பவரான கலைஞர்தான் ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியிலிருந்து மக்களுக்குத் தேவையான நலப் பணிகள் அனைத்தையும் தொடர்ந்து அளித்து வருகிறார்.

மக்கள்நல்வாழ்வுத் துறை அமைச்சர் இங்கே வந்திருக்கிறார். இந்தத் திருமண விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக காலையிலே சென்னையிலிருந்து புறப்பட்டு இங்கு வந்த மணமக்களை வாழ்த்தியுள்ளார். ஒரு அறிவிப்பையும் கொடுத்துள்ளார். இந்த ஊரில் அவரின் தந்தையாரும் சுயமரியாதை வீரருமான எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நினைவாக தந்தை பெரியார் படிப்பகம், கலைஞர் நூலகம் விரைவில் கட்டித் தருவதாக அறிவித்துள்ளார். அதற்காக கழகத்தின் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எம்.ஆர்.கே. அவர்களைப் பொறுத்தவரை, அரசியலில் இருந்தாலும் சிறந்த கொள்கை வீரர் - சுயமரியாதைக்காரர். எந்த நிகழ்ச்சிக்கும் எங்களை அழைத்து கொள்கை முழக்கம் செய்யச் செய்வார். அவரின் நினைவை போற்றும் வகையில் இந்தக் கட்டடங்களைக் கட்ட முன்வந்திருப்பது பாராட்டத்தக்கது என்று குறிப்பிட்டார். மணமக்களை வாழ்த்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர் கோ. சூரியமூர்த்தி, புதுவை சட்டமன்ற உறுப்பினர் விசுவநாதன் ஆகியோரும் உரையாற்றினர்.

மணமகன் தந்தையார் கலைவாணன் நன்றி கூறிட விழா பிற்பகல் 12.30 மணி அளவில் நிறைவுற்றது.

வாழ்த்துகளை வழங்கியவர்களுக்கும், விழாவுக்கு வந்திருந்த திராவிடர் கழகச் செயலவைத் தலைவர் ராசகிரி கோ. தங்கராசு, பொதுச் செயலாளர்கள் கலி.பூங்குன்றன், சு. அறிவுக்கரசு, வழக்கறிஞர் சிவசுப்பிரமணியம் (மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர்) ஆகியோருக்கும் துரை.சந்திரசேகரன் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்.

மணவிழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் மதிய உணவளித்து உபசரிக்கப்பட்டது. தந்தை பெரியார் அவர்களின் கருத்துகள் தொகுக்கப்பட்ட பெரியார் அறிவுரைகள் நூல் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

----------------------- “விடுதலை” 4-1-2010

0 comments: