Search This Blog

21.1.10

ஈழத் தமிழர்களுக்குக் கல்வி உதவி


இலங்கையில் உள்ள தமிழ் மாணவர்களின் மேற்படிப்புக்காக சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஆசிரியர் குழு இலங்கை செல்ல உள்ளது என்று சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் க. திருவாசகம் தெரிவித்திருப்பது மிகவும் வரவேற்கத்தகுந்த ஆக்க ரீதியான செயல்பாடாகும்.

இலங்கை முகாம்களில் உள்ள ஈழத் தமிழ் மாணவ, மாணவிகளுக்கு நூறு சதவிகிதம் முழுமையான இலவசக் கல்வியை அளிக்க உள்ளோம். அதற்கான ஆலோசனைக் கூட்டம் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. கனிமொழி எம்.பி., இலங்கைத் துணைத் தூதர் வடிவேலு கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் பங்கேற்றனர்.

இலங்கையில் பிளஸ் 2 படித்துவிட்டு, தமிழக முகாம்களில் தங்கியுள்ள தகுதி வாய்ந்த 4000 ஈழத் தமிழ் மாணவ, மாணவியர் சென்னைப் பல்கலைக் கழக உதவியுடன் மேற்படிப்பு படிக்க உள்ளனர்.

ஆங்கில அறிவு குறைவாக உள்ளவர் களுக்கு மூன்று மாதம் பயிற்சியளித்து, அவர் களை மேற்படிப்புக்கு அனுப்பிட உள்ளோம். இலங்கையில் முகாம்களில் உள்ள தமிழர் களுக்கும் மேற்படிப்பு அளிக்க உள்ளோம்.

இதற்கு, இலங்கை அரசு கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளது. இலங்கையில் தேர்தல் முடிந்த பிறகு அதற்கான பணிகள் தொடங்கப்படும். சென்னைப் பல்கலைக் கழ கத்தில் உள்ள ஆசிரியர் குழுவினர் இலங்கை செல்ல உள்ளனர். அக்குழுவினருடன் இணைந்து நானும் இலங்கை சென்று தமிழர்களின் மேற்படிப்புக்கு உதவி செய்ய உள்ளேன் என்று சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் தெரிவித்திருப்பது காலத்தாற் செய்யப்படும் கண் திறக்கும் பேருதவியாகும்.

ஈழத் தமிழர்கள் பொதுவாக கல்வியில் மிகுந்த ஆர்வமும், அக்கறையும் உள்ளவர்கள். ஆனால், குறிப்பாக கால் நூற்றாண்டுக்கு மேலாக அம்-மக்கள் அன்றாடம் படும் மரண வேதனையில் பிள்ளைகளின் கல்வி என்பதுபற்றி நினைத்துத்தான் பார்க்க முடியுமா? பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கடத்தப்பட்டனர், கொல்லப்பட்டனர் என்ற நிலையில் தமிழ் மாணவ, மாணவிகள் கல்லூரிகள் பக்கம், பல்கலைக்கழகங்கள் பக்கம் தலைவைத்துத்தான் படுக்க முடியுமா?

மழலையர்கள் தங்கியிருந்த விடுதிகளில் கூட ஈவு இரக்கம் இல்லாமல் குண்டுமாரி பொழிந்து அழித்து முடித்த அரசாயிற்றே!

ஒரு இனத்தை அழிக்கவேண்டுமானால், அந்த இனத்துக்குக் கல்வியைக் கொடுக்காமல் தடை செய்தாலே போதுமானதாகும். உடல் ரீதியாக இராணுவத்தின்மூலம் தமிழர்களைக் கொன்று குவித்தது ஒரு பக்கம்; அடிப்படைத் தேவையான கல்வி அவர்களுக்குக் கிடைக்காமல் முட்டுக்கட்டை போட்டது இன்னொரு பக்கம்.

இந்த நிலையில், சென்னைப் பல்கலைக் கழகம் அம்மக்களின் கல்விக் கண்களைத் திறக்க மேற்கொண்டுள்ள முயற்சி, சென்னை பல்கலைக் கழக வரலாற்றில் என்றென்றும் ஒளி வீசிக் கொண்டிருக்கும் ஒப்பற்ற மாபெரும் திருப்பணியாகும் என்பதில் அய்யமில்லை.

ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்ததன் காரணமாக பல்வேறு கசப்பான அனுபவங்களையும், தடைகளையும் தாண்டி உயர்நிலைக்கு வந்த உன்னதமான மாமனிதர் ஒருவர் சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பொறுப்பேற்றதன் நற்பலனை தமிழர்கள் இன்று அனுபவிக்கத் தொடங்குகின்றனர். சமூகநீதி என்பது ஏதோ ஒரு தனி மனிதர் பிரச்சினையல்ல; இன்னொரு வகையில் சமூகத்திற்குப் பயன்படும் ஓர் அரிய ஏற்பாடு என்பதும் இதன்மூலம் விளங்கவில்லையா?

தமிழ்நாட்டில் முகாம்களில் தங்கி இருக்கும் ஈழத் தமிழர்களின் பிள்ளைகளுக்குக் கல்வி வாய்ப்பு சிறப்பாக அளிக்கப்படவேண்டும் என்பதற்காகவே திராவிடர் கழகம் சென்னையில் மாநாடு கூட்டித் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பியதையும் இந்த நேரத்தில் நினைவூட்டுகிறோம்.

சென்னைப் பல்கலைக் கழகத்தை மற்ற மற்ற பல்கலைக்கழகங்களும் பின்பற்றலாமே!

-----------------------"விடுதலை” தலையங்கம் 20-1-2010

0 comments: