Search This Blog

12.1.10

தந்தைபெரியார் - பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் சந்திப்பு


அம்பேத்கர் சந்திப்பு

இந்நாளில்தான் (1940) தந்தை பெரியார், பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் சந்திப்பு பம்பாயில் நடைபெற்றது. இரவு 9 மணிமுதல் 11 மணிவரை நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் அவர்களுக்கு விருந்தளித்து உபசரித்தார். விருந்தின்போது பம்பாய் சென்டினல், நிரூபர் ஜெகெல், டைம்ஸ் ஆஃப் இந்தியா தலைமைச் செய்தியாளர் ராவ், பிரபலப் பத்திரிகை ஆசிரியர் பால் சாரர், பி.என். ராஜ்போஜ், சென்னை மாநில முன்னாள் அமைச்சரும், வகுப்புவாரி உரிமைச் சட்டத்திற்கு முதன்முதலாக விதை ஊன்றியவருமான எஸ். முத்தையா முதலியார் அவர்களின் மகன் சொக்கலிங்கம் உள்பட பல பிரமுகர்கள் அதில் கலந்துகொண்டனர்.

இதற்கு முன்னதாகவும், 5 ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, 6 ஆம் தேதி பம்பாய் வந்தடைந்த தந்தை பெரியார் அவர்களை அன்று இரவு 9 மணிக்கு தம் இல்லத்திற்கு அழைத்து விருந்தோம்பினார் அண்ணல் அம்பேத்கர். இரவு 10.30 மணிவரை பல்வேறு சமுதாயப் பிரச்சினைகள் குறித்தும் விவாதித்தனர். மறுநாளும் (7.1.1940) மாலை 4 மணிக்கு பம்பாய்க்கு தந்தை பெரியார் வருகையைக் கொண்டாட விருந்தொன்றையும் அளித்தார் அண்ணல். கோகலே கல்வி நிலையத்தில் அவ்விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. எஸ்.சி. ஜோஷி எம்.எல்.சி., ஆர்.ஆர். போலே எம்.எல்.ஏ., ஜாதவ் எம்.எல்.ஏ., போன்ற முக்கியப் பிரமுகர்களும் பங்கேற்று அளவளாவினர்.

சென்னையிலும் 1944, செப்டம்பரில் தந்தை பெரியார் _ அண்ணல் அம்பேத்கர் சந்திப்பு பெரியார் மாளிகையில் நடைபெற்றது.

பட்டம், பதவிகளை உதறித் தள்ளவேண்டும் என்ற சேலம் நீதிக்கட்சி (திராவிடர் கழகம் பெயர் மாற்ற மாநாடு) மாநாட்டின் தீர்மானங்களைப் பெரிதும் பாராட்டினார் அண்ணல் அம்பேத்கர்.

பட்டம், பதவியாளர்களும், பணக்காரர்களும், பதவியைக் கருமமாகக் கருதுபவர்களும் முன்னணியிலிருந்து நடத்தப்படும் கட்சி எதுவும் இக்காலத்தில் பலன் தராது என்றும், அவைகளைப் பின்னுக்குத் தள்ளியது கட்சிக்குப் புத்துயிர் அளித்ததாகும் என்று அம்பேத்கர் பாராட்டு மொழி வழங்கினார்.

நீதிக்கட்சி இந்தியா முழுவதும் பரவவேண்டிய கட்சி; நல்ல தீர்மானங்களும், திட்டங்களும் அதில் இருக்கின்றன; துணிந்து இந்தியா முழுமையும் சுற்றி வேலை செய்யும்படியும், ஆங்காங்குள்ள தம் நண்பர்களுக்கு எழுதியும் தம்மால் ஆன அளவுக்கு ஒத்துழைப்பும், ஆதரவும் தருவதாகவும் அண்ணல் அவர்கள் அய்யாவிடம் கூறினார்கள்.

ஒரு நாணயத்தின் இரு பக்கங்களான தலைவர்கள் அல்லவா! அதனால்தான் அவர்களின் சிந்தனைகள் தாளம், சுருதி பிசகாமல் அமைந்துள்ளன. தந்தை பெரியார் அவர்களின் சந்திப்புகள் என்பதேகூட தனி சரித்திரம்தான்.

----------------- மயிலாடன் அவர்கள் 9-1-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: