
(முகமூடி அணிந்துள்ள ஆர்.எஸ்.எஸ். அதன் ஆயுதமான ஹிந்துத்வத்தை எப்படியெல்லாம் சந்தர்ப்பத்திற்கேற்ப பயன் படுத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ள மிக அருமையான நூல் கர்கரேயைக் கொன்றது யார்? என்ற தலைப்பில், ஓய்வு பெற்ற அய்.பி.எஸ். அதிகாரியும் விருப்ப ஓய்வு பெற்று பதவி விலகிய மகாராஷ்டிர அய்.ஜி.யுமான முஷ்ரப் அவர்கள் எழுதியுள்ள நூல்!
பல திடுக்கிடும் உண்மைகள், மறைக்கப்படும் செய்திகள், இவற்றிற்கெல்லாம் மூல காரணங்கள் பார்ப்பனப் பிடிப்புக்குள் சிறைப்பட்டுள்ள அல்லது பார்ப்பனமயமான இந்திய உளவுத் துறையும், இந்திய ஊடகத்துறையும், கடமை தவறி ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனுநீதியின் மறு உருவங்களாகத் திகழ்கின்றன.
இந்நூல் முன்னுரை, மற்றும் முக்கிய சில அத்தியாயங்களை தமிழ் கூறும் நல்லுலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, மானமிகு சு.அறிவுக்கரசு அவர்கள் தமிழாக்கம் செய்து தருகிறார்; படியுங்கள்; (பேச்சாளர்கள்) பரப்புங்கள்.
- ஆசிரியர் கி.வீரமணி)
கர்கரேயைக் கொன்றது யார்? (5)
இத்தகு மாற்றமும் வளர்ச்சியும் பார்ப்பனியர்கள் மனதில் அச்ச உணர்வை ஏற்படுத்தி விட்டது. இத்தகைய இயக்கங்கள் நாடு முழுவதும் பரவி வளர்ந்தால், தங்களின் துன்ப, துயரங்களுக்குப் பார்ப்பனர்களே காரணம் என்பதைச் (சாதாரண) இந்து மதத்தவர் உணர்ந்து கொண்டால், நம்மை அவர்கள் சும்மா விடமாட்டார்கள்; பிரிட்டிஷார் இந்த நாட்டை விட்டு வெளியேறியதும் பழி தீர்ப்பார்கள் என்று அவர்கள் அச்சப்பட்டனர். ஆகவே, பார்ப்பனியத் தலைவர்களும் அறிவு ஜீவிகளும் ஒன்றாய் உட்கார்ந்து புதிய வியூகம் வகுத்தனர். சமூக நிலைமையையும் தங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியையும் எப்படி எதிர்கொண்டு சாதாரண மக்கள் தங்களது பித்தலாட்டங்களைப் புரிந்து கொள்ளவொட்டாமல் செய்து தங்கள் மேலாதிக்கத்தை நீடித்துக் கொள்வது எப்படி என்பது பற்றி விவாதித்தனர்.
புனேயிலிருந்து கலந்துகொண்ட சில பார்ப்பனியத் தலைவர்கள் விசித்திரமான யோசனை ஒன்றைத் கூறினர்; சீர்திருத்த இயக்கங்களின் தாக்குதல்களிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளவும், சாதாரண இந்துக்களின் வெறுப்பைத் திசை திருப்பவும் இந்து முசுலிம் பிளவை ஏற்படுத்தி அவர்களுக்குள் மோதிக் கொள்ளுமாறு செய்திடவேண்டும் என்று யோசனை கூறினர். பார்ப்பனிய வாதிகள் இதனை ஏற்றுக் கொண்டு உடனே செயல்படுத்தத் தொடங்கினர். மும்பையில் நடந்த ஒரு சிறு சம்பவத்தைப் பெரிதாக்கி, புனேயில் 1893 இல் இந்துக்களை முசுலிம்களுக்கு எதிராக மோதும் செயலில் ஈடுபட வைத்தனர்.
அதன் பின்னர் பார்ப்பனியர்கள் சற்றேனும் பின்வாங்கவில்லை. நாம் அல்லது நம் தேசியம் பற்றிய விளக்கம் எனும் தன் நூலில் கோல்வால்கர் கூறியிருப்பதைப் பின்பற்றி வெளிப்படையான இனப்படுகொலைக்குத் தூண்டினர். இனத்தின் தூய்மையையும் கலாச்சாரப் பெருமையையும் காப்பாற்றுவதற்காக செமிட்டிக் இன யூதர்களைக் கொன்று ஒழித்திடும் பணியில் இறங்கி உலகம் முழுவதையும் ஜெர்மனி அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. இனப் பெருமை என்பது முதன்மையானது என்பதை இங்கே கவனிக்க வேண்டும்.
இந்துஸ்தானத்தில் இருக்கும் நமக்கெல்லாம் அது ஒரு நல்ல படிப்பினையும் அனுகூலமானதும் ஆகும் என்று கோல்வால்கர் எழுதியிருப்பதை இவர்கள் முன் உதாரணமாகக் கொண்டனர்.
அந்த வகையில், சாமான்ய இந்துக்கள் சீர்திருத்த இயக்கங்களின் பால் கவனம் செலுத்தாமல் தடுக்கவும் அவர்களைத் திசை திருப்பவும் பார்ப்பனர்களின் அட்டூழிய மான சமூகச் சமமற்ற நிலையை நீடித்துக் கொள்ளவும் 1893 இல் தொடங்கி வைக்கப்பட்ட வகுப்பு மோதல்களும் கலவரங்களும் இன்றளவும் நீடிக்கப்படச் செய்து வருவது என்பது பார்ப்பனியத் திட்டத்தின் பகுதியாகும். இந்தத் திட்டத்தில் சாமான்ய இந்துக்கள்தாம் தாக்கப்படவேண்டியவர்கள்; இதில் முசுலிம்கள் தூண்டிலில் கோக்கப்படும் இரையாகப் பயன்படுத்தப்படுகின்றனர். (எனவே அழிவு இருதரப்பாருக்கும் ஏற்படுவது நிச்சயம்).
1893 ஆம் ஆண்டு முதற்கொண்டே பார்ப்பனியர்கள் இந்துக்களுக்கும் முசுலிம்களுக்கும் வகுப்பு மோதல்களை அவ்வப்போது தூண்டிவிட்டுக் கொண்டே வந்தாலும், அவை நன்முறையில் திட்டமிட்டுச் செய்யப்படவோ, முறையாகச் செய்யப்படவோ இல்லை. இக் குறைபாட்டைச் சரி செய்திட பார்ப்பனர்களிடையே ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் கொண்டு வருவதற்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 1925 இல் உருவாக்கப்பட்டது. தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஊடகம், உளவுத்துறை ஆகிய இரண்டு நிறுவனங்களையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என முடிவு செய்தனர். ஏனெனில் இவைதாம் பொது ஜன அபிப்பிராயத்தை உருவாக்கி செல்வாக்கு செலுத்தும் அமைப்புகளாகும்.
1947 இல் இந்தியா விடுதலை அடைந்த நேரத்தில் இவ்விரண்டு அமைப்புகளிலும் ஆர்.எஸ்.எஸ். கணிசமான அளவுக்கு ஆளுமை பெற்றிருந்தது. விடுதலைக்குப் பிறகு, அவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்தும் அளவுக்குச் செல்வாக்கு பெற்று, நாட்டில் வகுப்புவாதச் சூழ்நிலையைப் பெருக்கி, பொதுமக்களின் கவனத்தை முக்கியமான பிரச்சினைகளின் பக்கம் செல்ல விடாமல் தடுத்து, அதன் மூலம் எல்லா வகையான சமூக, கலாச்சார நிறுவனங்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் நிலையை வளர்த்துக்கொண்டது.
கடந்த காலங்களில் ஊடகத் துறையிலும் உளவுத் துறையிலும் ஆர்.எஸ்.எஸ்.சின் ஊடுருவல் எந்த அளவுக்கு அதிகாரத்தை அவர்களுக்குத் தந்திருக்கிறது என்பதையும், பார்ப்பனியர்கள் எந்த அளவுக்கு அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு தங்களின் சமூக, அரசியல் கொள்கைகளை நிறைவேற்றிக் கொண்டனர் என்பதையும் பார்க்கலாம்.
பார்ப்பனியர் பிடியில் ஊடகம்
ஊடகங்கள் பார்ப்பனியர்களின் கையில் சிக்கியுள்ள வலுவான ஆயுதம்; அவர்களும் அதனை மிக லாவகமாகவும் ஆதாயம் அடையும் வகையிலும் பயன்படுத்துகிறார்கள். அத்துறையைத் தங்களின் முழுக் கட்டுப்பாட்டிலும் கொண்டு வந்து, தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஊடகத் துறையின் எல்லாப் பகுதிகளிலும் அவர்களே முழுவதும் பரவி உள்ளனர். அச்சுஊடகங்களிலும் எலெக்ட்ரானிக் ஊடகங்களிலும் எவ்வளவு பாதுகாப்பாக அவர்கள் அமர்ந்து கொண்டு கட்டளை பிறப்பித்துக் கொண்டிருப்பது யார் என்றே யாரும் அறிந்து கொள்ள முடியாத வகையில் இருக்கின்றனர். கண்ணுக்குத் தெரியாமல் இருந்தாலும் செயல்பாட்டை அறிந்து கொள்ளத் தக்க வகையில் செயலாற்றும் எலக்ட்ரான் கள் போன்றவர்கள் அவர்கள். நாட்டின் பிரபல நாளேடுகளைப் படிக்கும் போதே, கண்ணுக்குப் புலப்படாத பார்ப்பனியச் சக்திகள் அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளன என்பதை (விலக்குகள் சில இருந்தாலும்) நம்மாலே உணர முடியும். (எலெக்ட்ரானிக்) மின்னணு ஊடகங்களைப் பொறுத்த மட்டிலும் கூட அதே நிலைதான். வலுவான இந்த ஆயுதத்தைத் தம் கையில் வைத்துக் கொண்டு, இவர்கள் அரசை, அரசியல்வாதிகளை, அதிகாரிகளை, காவல்துறையை, வணிகர்களை என எல்லாத் தரப்பினரையும் கட்டுப்படுத்தி வருகின்றனர் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும்!
------------------- “விடுதலை” 11-01-2010
0 comments:
Post a Comment