Search This Blog

6.1.10

தந்தைபெரியாரும் தாழ்த்தப்பட்டோரும்


தாழ்த்தப்பட்ட தோழர்களில் சிலரும், அவர்களின் தலைவரும் திராவிடர் இயக்கத்தைப் பற்றி மறைமுகமாக தவறான பிரசாரம் செய்து வருவதைப்பற்றி அடிக்கடி என்னிடம் அந்த மக்களாலேயே புகார் செய்யப்பட்டு வந்தது. நான் அதைப்பற்றி இதுவரை கவலைப்பட்டதில்லை. இனியும் கூறுகிறேன். தனிப்பட்ட இப்பேர்ப்பட்டவர்களைப் பற்றி நாம் கருத்தில் கூட நினைக்கக் கூடாது. ஆனால், ஒன்றை மட்டும் நினைவில் வைக்க வேண்டுகிறேன்.

இந் நாட்டைப் பொறுத்தவரை தீண்டப்படாத மக்களின் உரிமைக்காக கடந்த 30 ஆண்டுகளாகவும் இன்றும் போராடி சில காரியங்களில் வெற்றி பெற்றுமிருப்பது சுயமரியாதை இயக்கமும், ஜஸ்டிஸ் கட்சியும், அதாவது இன்று திராவிடர் கழகம் என்ற பேரால் உங்களின் - ஏழைகளின் கட்சியாக விளங்கும் திராவிடர் இயக்கமுமே என்பதை மறப்பவனோ அன்றி மறுப்பவனோ இருப்பானாகில் அவன் மனிதத் தன்மையற்றவன் என்றே கூறுவேன். தாழ்த்தப்பட்ட மக்களுக்கே பெரிதும் உழைக்கும் திராவிடர் இயக்கத்தைப் பற்றி குழி தோண்டுவதையே அம்மக்களில் ஒரு சிலரின் போக்காக இருந்து வருகிறது. அவர்களின் உட்கருத்தையும் யான் அறிவேன். ஆனால், திராவிடர் கழகம் அதற்கு இடம் கொடுத்து ஏமாந்து விடுமென்று எதிர்பார்ப்பது வீணேயாகும்.

கடைசியாக ஒன்று கூற ஆசைப்படுகிறேன். தாழ்த்தப்பட்டோர் பெடரேஷனில் யான் யாரையும் சேர வேண்டாமென்று கூறவில்லை. அதில் நம்பிக்கையுடையவர்கள் அதில் சேர்ந்து திராவிடர் கழகத்தினால் ஏற்படும் நன்மைகளையும்கூட பெற்றுக்கொள்ளட்டும். ஆனால், திராவிடர் கழகத்தில் சேர்ந்துள்ள சேர ஆசைப்படும் தாழ்த்தப்பட்ட தோழர்கள் திராவிடர் கழகக் கொள்கைக்கு ஏற்பவே நடக்க வேண்டும். கருப்புச் சட்டை அணிய வேண்டும். திராவிடர் கழக வெற்றி தாழ்த்தப்பட்டோரின் முக்கிய வெற்றி என்பதை மறக்கக் கூடாது.


---------------- தந்தைபெரியார் அவர்கள் 20-05-1947 இல் தூசூரில் ஆற்றிய சொற்பொழிவு. "குடிஅரசு", 21-05-1947

0 comments: