Search This Blog

3.1.10

திராவிட என்ற சொல்லை நீக்க சொன்னவர் ஜோஷி

திராவிட என்ற சொல்லை நீக்க சொன்னவர் ஜோஷி
நிதியமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் விளக்கம்

திராவிட பல்கலைக்கழக அனுமதி கேட்க சென்றவர்களிடம் திராவிட என்ற சொல்லை நீக்குமாறு அப்போதைய மத்திய அமைச்சர் ஜோஷி கேட்டார் என்று நிதியமைச்சர் க. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

ச.வே.சுப்பிரமணியன் எழுதிய 81 நூல்கள் வெளி-யீட்டு விழா சென்னை புத்தகக் காட்சி அரங்கில் நேற்று நடந்தது. நிதியமைச்சர் அன்பழகன் நூல்களை வெளியிட நல்லி குப்புசாமி பெற்றுக் கொண்டார். பின்னர் அன்பழகன் பேசியதாவது:

தமிழறிஞர் வ.அய்.சுப்பிரமணியம் ஆந்திர மாநிலம் குப்பத்தில் திராவிட பல்கலைக்கழகம் அமைக்க மத்திய பாரதிய ஜனதா கூட்டணி அரசின் ஒப்புதல் கேட்டு அப்போதைய கல்வி அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியை சந்தித்தார். அனுமதி கொடுத்து விடுகிறேன். திராவிட என்ற பெயரை மட்டும் எடுத்துவிடுங்கள் என்று ஜோஷி கேட்டுள்ளார். அதற்கு சுப்பிரமணியம், தேசிய கீதத்தில் வரும் திராவிட என்ற சொல்லை நீங்கள் நீக்கிவிட்டால், இந்த பல்கலைக்கழகத்தில் வரும் திராவிட என்பதையும் நீக்கி விடுகிறோம் என்று பதிலளித்தார். ஜோஷி வாயடைத்து போனார். தமிழ் செம்மொழி ஆனதை கேட்டு நெஞ்சடைத்து போயிருக்கும்.

உலக பொதுமறை தொல்காப்பியம் என்று ச.வே.சுப்பிரமணியன் கூறியுள்ளார். திருக்குறள்தான் உலக பொதுமறை. தொல்காப்பியம் தமிழர்களின் பெருமைக்குரியது. எழுத்து, சொல், ஆகியவற்றை வடமொழிக்கு தமிழே கடன் தந்தது.

நான்கு வர்ணம் இல்லை

வடமொழிக்கு எழுத்தே கிடையாது. அது இந்தோ அய்ரோப்பிய எழுத்து என்கிறார்கள். ஆனால் அந்த வகை எழுத்துகளுடன் வடமொழி எழுத்து ஒத்துவரவில்லை. தமிழுக்கு செம்மொழி தகுதியை பெற்று தருவதில் முதலிடம் வகிப்பது தொல்காப்பியம். தமிழனின் மரபு என்று பிரித்துக் காட்டி மாற்றாக வருவதையெல்லாம் அன்னியம் என தவிர்த்து பாதுகாக்கவே தொல்காப்பியம் தோன்றியது. தொன்மையான இந்த நூலும் இடைத்செருகலுக்கு ஆட்பட்டி-ருக்-கிறது, அதை மறுக்க முடியாது. வேற்று கலாச்-சார கருத்துகளும் அப்-படி இடம் பெற்றுள்ளன. தொல்காப்பியர் காலத்தில் மேல் மக்கள் உண்டு, மேல் ஜாதி இல்லை. நான்கு வர்ணம் இல்லை, மனு ஸ்மிருதி இல்லை. குறிப்பிட்ட சமூகத்தினருக்கு திருமண உரிமை இல்லை. அவர்கள் இணைந்து மட்டும் வாழலாம் என்ற வைதீக கலாச்சார கருத்துகள் தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளன. இடைச் செருகல்களை களைந்து தனித் தமிழ் படைப்பாக தொல்காப்பியத்தை ச.வே.சுப்பிரமணியன் ஆக்கித்தர வேண்டும். ஆந்திர, கர்நாடக பகுதிகளில் பழந்தமிழனின் தொடர்ச்சி இல்லாதலால் அங்கு காப்பியங்கள் என்றாலே ராமாயணம், மகாபாரதம் என்றாகிவிட்டது. தமிழ் என்றால் பகை என்ற அளவுக்கு அது வளர்ந்து விட்டது. இவ்வாறு க. அன்பழகன் பேசினார்.

ச.வே.சுப்பிரமணியன் ஏற்புரை ஆற்றினார். பதிப்பாளர் மீனாட்சி சோமசுந்தரம், சிலம்-பொலி செல்லப்பன், முன்னாள் துணைவேந்தர்கள் பொற்கோ, அறவாணன் உள்பட பலர் பேசினர்.

-------------------" விடுதலை” 3-12-2009

0 comments: