Search This Blog

7.1.10

மும்பை தாக்குதல் - கர்கரேயைக் கொன்றது யார்?

(முகமூடி அணிந்துள்ள ஆர்.எஸ்.எஸ். அதன் ஆயுதமான ஹிந்துத்வத்தை எப்படியெல்லாம் சந்தர்ப்பத்திற்கேற்ப பயன் படுத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ள மிக அருமையான நூல் கர்கரேயைக் கொன்றது யார்? என்ற தலைப்பில், ஓய்வு பெற்ற அய்.பி.எஸ். அதிகாரியும் விருப்ப ஓய்வு பெற்று பதவி விலகிய மகாராஷ்டிர அய்.ஜி.யுமான முஷ்ரப் அவர்கள் எழுதியுள்ள நூல்!

பல திடுக்கிடும் உண்மைகள், மறைக்கப்படும் செய்திகள், இவற்றிற்கெல்லாம் மூல காரணங்கள் பார்ப்பனப் பிடிப்புக்குள் சிறைப்பட்டுள்ள அல்லது பார்ப்பனமயமான இந்திய உளவுத் துறையும், இந்திய ஊடகத்துறையும், கடமை தவறி ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனுநீதியின் மறு உருவங்களாகத் திகழ்கின்றன.

இந்நூல் முன்னுரை, மற்றும் முக்கிய சில அத்தியாயங்களை தமிழ் கூறும் நல்லுலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, மானமிகு சு.அறிவுக்கரசு அவர்கள் தமிழாக்கம் செய்து தருகிறார்; படியுங்கள்; (பேச்சாளர்கள்) பரப்புங்கள்.

- ஆசிரியர் கி.வீரமணி)மும்பை தாக்குதல்

கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள் மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்றன. மும்பையின் புகழ் பெற்ற தாஜ் ஓட்டல் தாக்கப்பட்டது. மும்பையின் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் எனும் தொடர்வண்டி நிலையம், காமா மருத்துவமனை, தாஜ் ஓட்டலின் அருகில் உள்ள லியோபோல்ட் உணவகம் முதலியவையும் தாக்கப்பட்டன.

தாக்குதலை முறியடிக்க எதிர்த்தாக்குதல் நடத்தப்பட்டு, தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். அஜ்மல் அமீர் கசாப் எனும் பாகிஸ்தானியர் ஒருவர் மட்டும் உயிருடன் பிடிக்கப்பட்டு வழக்கை எதிர்நோக்கியுள்ளார்.

எதிர்த் தாக்குதலில் ஈடுபட்டிருந்த மும்பை காவல் துறை அதிகாரி ஹேமந்த் கர்கரே என்பவர் காமா மருத்துவமனைக்குச் சென்று நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காகக் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது, பயங்கரவாதிகளின் தாக்குதலில் இறந்து போனார். அவருடன் சென்ற மேலும் இரண்டு அதிகாரிகளும் கொல்லப்பட்டனர்.

ஹேமந்த் கர்கரே, மகாராட்டிர மாநிலத்தின் சிறப்புக் காவல் பிரிவுத் தலைவர். பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்குத் தலைமை வகித்தவர். இந்த (ATS) பிரிவுதான் புனேவுக்குப் பக்கத்தில் உள்ள மாலேகான் நகரில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட இந்து பயங்கரவாதிகளைக் கண்டு பிடித்துக் கைது செய்தது. இராணுவத்தில் பணி புரிந்து கொண்டே இந்துப் பயங்கரவாதியாகச் செயல்பட்ட கர்னல் புரோகித், வெடிகுண்டுகளை வைக்கத் தனது இரு சக்கர வண்டியைக் கொடுத்த பெண் சாமியாரினி பிரதி-யுக்ஞா சிங் போன்றவர்களைக் கைது செய்தவர்.

எல்லா இசுலாமியர்களும் பயங்கரவாதிகள் அல்லர்; ஆனால் பயங்கரவாதிகள் எல்லோரும் இசுலாமியர்கள் என்று பசப்பு வார்த்தை கூறிக் கொண்டே பயங்கரச் செயல்களில் ஈடுபடுபவர்கள் இந்துத்துவ இயக்கங்களில் உள்ளவர்கள் என்பதை உலகுக்கு அம்பலப்படுத்தி உண்மைகளை வெளிக் கொணர உழைத்தவர். அவர் சுட்டுக் கொல்லப்பட்ட சிறிது நேரத்திற்குள்ளாகவே, (அதனை எதிர்பார்த்துக் கொண்டிருந்ததைப் போல) அவசரம் அவசரமாக வேறொருவர் அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் புதிய நபர் தனது இந்துத் துவக் கொள்கைகளுக்குப் பெயர் பெற்றவர்.

இந்த நிலையில் ஹேமந்த் கர்கரேவைக் கொன்றது யார்? என்ற தலைப்பில் இங்கிலீஷில் நூல் ஒன்றை எழுதியுள்ளார் எஸ்.எம்.முஷ்ரீஃப் அய்.பி.எஸ். என்பார். இவர் மகாராட்டிர மாநிலத்தின் காவல்துறையில் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (அய்.ஜி.) ஆகப் பணி புரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர்.

அந்த நூல் அண்மையில் ஃபாரோஸ் பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது. அந்நூலில் இருந்து சில பகுதிகள் தமிழில் தரப்படுகின்றன.

இந்தியாவில் பயங்கரவாதத்தின் உண்மை முகம் என வருணிக்கப்பட்டுள்ள விவரங்களைக் கொண்ட இந்நூலின் முன்னுரை இதோ:

காவல் துறையில் எனக்கிருந்த நீண்ட காலப் பணியின் அடிப்படையிலும், சமூகத் தளத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையிலும் நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சிகளின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல் இது. கடந்த சில ஆண்டுகளில் நாட்டில் நடந்த பயங்கரவாதம், மதவாதம் ஆகியவற்றின் தொடர்பான நாளிதழ், வார ஏடுகள் ஆகியவற்றில் வெளிவந்த செய்திகளும் இதற்குத் துணை புரிந்தன. இந்நூலின் நோக்கங்கள் இரண்டு: நான் காவல் துறையில் பணி புரிந்த காலத்தில் சிறப்பாகவும் மற்றும் என் வாழ்நாள்முழுவதும் என்னைத் துளைத்துக் கொண்டிருந்த பல வினாக்களுக்கு விடைகளைத் தேடுவது ஒன்று; நாட்டின் நலனுக்கு எதிராகப் பயங்கரத் திட்டங்களைப் போட்டுக் கொண்டிருப்பவர்களை அடையாளம் காட்டிப் பாராட்டத்தக்க செயல்கள் புரிந்த ஹேமந்த் கர்கரேவின் பணிகளின் சிறப்புகளைப் பதிவு செய்திடும் நோக்கம் மற்றொன்று.

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வகுப்புவாதச் சூழலுக்கு நேர்மாறான, அமைதியான மதச்சார்பற்ற சூழ்நிலையில் நான் வளர்ந்த பின்னணியும் கூட, இந்நூலை நான் எழுதிடத் தூண்டுகோலாக அமைந்தது. மகாராட்டிர மாநிலம் கோல்காப்பூர் மாவட்டத்தில் காகல் எனும் நகரைச் சேர்ந்தவன் நான். நகர்ப்புறச் சாயல்கள் சிறிதளவு கொண்ட கிராமப்புற நகரமான அது தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, மாவட்டத் தலைநகருக்கருகில் அமைந்துள்ளது.

நான் மாணவனாக இருந்த 1960, 1970 களில் நாட்டில் அதிலும் குறிப்பாக மத்திய, வட இந்தியப் பகுதிகளில் இந்து முசுலிம் கலவரங்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. இதற்கு மகாராட்டிரமும் விலக்கல்ல. என்றாலும் கோல்காப்பூர் மாவட்டத்தில் எதுவும் நடைபெறவில்லை. நாட்டின் பல பகுதிகளும் வகுப்புக் கலவரங்களினால் கொதித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் கோல்காப்பூர் அமைதிப் பூங்காவாக, சமூக நல்லிணக்கத்தைப் பேணி வந்தது என்றால், அதற்கு மூல காரணம் கோல்காப்பூர் சமஸ்தான மன்னராக இருந்து பல்வேறு சமூகப் பொருளாதாரக் கல்வித் திட்டங்களைச் செயல்படுத்திய சத்ரபதி சாகு அவர்களின் தொலை நோக்குக் கண்ணோட்டமே! இந்திய வரலாற்றில் முதன் முதலாக 1902 ஆம் ஆண்டிலேயே, சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியிலும் பிற்படுத்தப்பட்டிருந்த பெரும்பான்மை மக்களுக்கு அரசுப் பணிகளில 50 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்து ஆணையிட்டவர், சாகு மகராஜ் அவர் களே! ஜாதி, மத, வகுப்பு வேறுபாடுகள் எதுவும் கணக்கில் கொள்ளப்படாமல் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அதன் காரணமாக இந்த மாவட்டம் மதச் சார்பின்மையும் அமைதியும் நிலவும் மாவட்டமாகவும், அதே போல மக்களும் வகுப்புக் கலவரங்களின் திடீர் வெப்பத் தாக்குதலுக்கு ஆளாகாமலும் வாழ்ந்தவர்களாகவும் இருந்தனர்.

------------------- தொடரும்0 comments: