அய்.எஸ்.ஓ.
கோவை காந்திபுரத்தில் சித்தி விநாயகர் என்ற ஒரு கோயில்; திருவாச்சி, பார்வை தகடு, மூஷிக வாகனத்துக்கு தங்கக் கவசம் அணியும் பணி நிறைவுறும் நிலையில் உள்ளது.
இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலுக்கு இதுவரை எந்த கோயிலுக்கும் இல்லாத அய்.எஸ்.ஓ. 9001_2008 (International Standard Organisation) தரச்சான்று அளிக்கப்பட்டுள்ளதாம்.
பலே, பலே! கடவுளுக்கே ஓர் அமைப்பின் அங்கீகாரம் தேவைப்படுகிறது என்பது நினைத்து நினைத்து நகைக்கவேண்டிய படு ஜோக்!
தரம் என்றால் அதற்கு விளக்கம் என்னவோ! இந்த சித்தி விநாயகரிடம் எது கேட்டாலும் அது கறாராகக் கிடைத்துவிடும் என்ற உத்திரவாதமோ! அல்லது பக்தர்கள் கேட்பதைச் சித்தி விநாயகர் கண்டிப்பாக கொடுத்தே தீரவேண்டும் என்ற கட்டளையா? அப்படி கொடுத்து அருளாவிட்டால் சித்தி விநாயகர் மீது ஒழுங்கு நடவடிக்கை (Discipilinary Action) எடுக்கப்படும் என்ற நிபந்தனையா?
இந்த நிபந்தனைகளுக்கு சித்தி விநாயகர் கட்டுப்படாவிட்டாலோ அல்லது கடமை தவறும் பட்சத்திலோ கொடுத்த அங்கீகாரத்தை ரத்து செய்யும் நிலைப்பாடா?
இவற்றைப்பற்றியெல்லாம் விளக்கினால் நல்லது.
சரி... கோவை காந்தி நகர் சித்தி விநாயகருக்கு இந்த அந்தஸ்து அளிக்கப்பட்டால் மற்ற கோயில்கள், கடவுள்களின் நிலை என்ன?
இவையெல்லாம் தரச் சான்றுக்கு லாயக்கு இல்லாத மட்டக் கிளாஸ் கோயில்களா? கடவுள்களா? பக்தர்கள் இந்த வகையில் சிந்திக்கத்தானே வேண்டும்.
உலக மயம் என்ற ஒரு விஷயம் வந்தாலும் வந்தது கோயில்கள், கடவுள்கள்வரை இது போன்ற சமாச்சாரங்கள் நுகர்வோர் கலாச்சாரத்தின்கீழ் வரவேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டு விட்டது.
எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவர் கடவுள்; அவரை எந்த சக்தியாலும் கட்டுப்படுத்த முடியாது என்பதெல்லாம் பழைய கதை.
இனிமேல் எந்தக் கோயில் அய்.எஸ்.ஓ. முத்திரை பெற்றுள்ளதோ, அந்தக் கோயிலுக்குத்தான் செல்லுவது என்ற நிலை ஏற்பட்டால், ஆச்சரியப்படுவதற்கில்லை.
கடவுளைக் கேலி செய்யும் இந்த முறை கூடாது என்று எந்தக் கடவுளிடம் போய் பக்தர்கள் முறையிடுவார்களோ தெரியவில்லை.
பக்தி, ஒரு பிசினஸ் என்று சொன்ன பெரியவாளின்பெரிய வாய்க்கு ஒரு கட்டுக் கரும்பைக் கொடுத்துத் தின்ன சொல்லலாம், பலே! பலே!!
-------------------------- மயிலாடன் அவர்கள் 22-1-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
0 comments:
Post a Comment