Search This Blog

25.1.10

மதங்களால் பிரிந்த மக்களை மனங்களால் ஒன்றுபடுத்துகிறது பெரியார் இயக்கம்

ஒரு மனிதனுடைய சொத்து பொதுவுக்கு என்று வரும்பொழுது
நூறு ஆண்டுகள் ஆனாலும் அவருடைய பெயரே நிலைத்துநிற்கும்
சிவகாசி பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் விளக்கம்

ஒரு மனிதனுடைய சொத்து பொதுச் சொத்தாக ஆகும்பொழுது அது நூறு ஆண்டுகள் ஆனாலும், அது அவருடைய பெயர் கொண்ட சொத்தாகவே நிற்கும் இருக்கும் என்று திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் கி.வீர மணி அவர்கள்கூறி விளக்கவுரையாற்றினார். அவர் ஆற்றிய உரையின் நேற்றைய முன்தின தொடர்ச்சி வருமாறு:

கோவிலுக்குள் விடவில்லை

நகை திருட்டை கண்டுபிடிக்கச் சென்ற மதுரை எஸ்.அய் அவர்களை கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று அந்த கோவிலின் அர்ச்சகர்கள் தடுத்தார்கள்.

நீங்கள் உள்ளே வந்தால் மீனாட்சி அம்மன் கோவில் தீட்டாகிவிடும் என்று சொல்லி அவரை கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று தடுத்து விட்டனர்.

அந்தக் காவல்துறை அதிகாரி எப்படி வலுக்கட்டாயமாக உள்ளே நுழைய முடியும்? இந்த அதிகாரி மேலதிகாரிகளிடம் முறையீடு செய்தார். நான் கோவிலுக்குள் நுழைய முடியவில்லை. என்னை உள்ளே விட மறுக்கிறார்கள் என்று சொன்னார்.

ஏன் என்று வெள்ளைக்கார அதிகாரி கேட்டார்

ஏன் உள்ளே விட மறுக்கிறார்கள்? என்று வெள்ளைக்கார அதிகாரிகள் கேட்டார்கள். ஜாதியின் காரணமாக என்னை உள்ளே விட மறுக்கிறார்கள் என்று சொன்னார்.

வெள்ளைக்காரர்களுக்கு அப்பொழுது தான் ஜாதி என்றால் என்ன? அதன் ஆதிக்கம் என்ன என்பது தெரிய வந்தது.

அதன்பிறகுதான் வெள்ளைக்கார அதிகாரிகள் சொன்னார்கள். நான் இதற்காகவே ஸ்பெஷல் உத்தரவு போடுகிறேன். எங்கே வேண்டுமானாலும் நீங்கள் உள்ளே நுழையலாம் என்று உத்தரவு போட்டு அந்த மதுரை எஸ்.அய் அவர்களிடம் கொடுத்தார்கள்.

நமது பயிற்சி முகாமிலேயே சொன்னார்

அந்த அதிகாரி தேனியில் இருந்தார். அண்மையில்தான் அவர் மரணமடைந்தார். ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்னாலே நடைபெற்ற சம்பவத்தை நமது பயிற்சி முகாமில் அங்கே சொன்னார். அவர் நடந்த சம்பவத்தை தெளிவாகச் சொன்னார். நான் முதலில் அர்ச்சகரைத் தான் அழைத்து முதலில் இரண்டு அடிகொடுத்து விசயத்தைக் கேட்டேன் என்று சொன்னார்.

நகை திருடியதை அர்ச்சகர் ஒப்புக்கொண்டார்

அர்ச்சகரை அடித்தவுடன் அந்த அர்ச்சகர் அடிதாங்க முடியாமல் உண்மையைச் சொல்லிவிட்டான். நான் தான் நகையை எடுத்தேன். பின்னால் ஒளித்து வைத்திருக்கின்றேன் என்று சொன்னான்.

நகை இருக்கிற இடத்திற்கு அர்ச்சகரைத் தவிர வேறு யாரும் உள்ளே போக முடியாது. கர்ப்ப கிரகத்தில்தான் நகை இருந்தது. அந்த நகையை திருடியவன் பார்ப்பன அர்ச்சகன்தான் என்பதை அந்த அதிகாரி கண்டுபிடித்தார்.

புனிதமான இடத்தில்

கோவில் கருவறை என்பது புனிதமான இடம் என்று சொல்லுகிறார்கள். அந்த புனிதமான இடத்தைத்தான் காஞ்சிபுரம் அர்ச்சகர் தேர்ந்தெடுத்திருக்கின்றான். அந்த புனிதம் எப்படிகாப்பாற்றப்பட்டிருக்கிறது? உங்களுக்குத் தெரியும். இங்கு பெண்கள் எல்லாம் உட்கார்ந்திருக்கிறார்கள். அந்த சங்கதிகளைப் பற்றி விளக்கி நான் சொல்ல விரும்பவில்லை.

இந்த அசிங்க சங்கதிகளை செல்ஃபோன் மூலம் போட்டோ எடுத்திருக்கின்றான். இதை சி.டியாக ஆக்கியிருக்கின்றான். அறிவியல் கருவிகளைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கின்றான்.

துபாய், வளைகுடாநாடு வரை இந்த ஆபாச படங்கள் பல கோடி ரூபாய் வரை சென்றிருக்கிறது. தர்மகர்த்தா ஒருவர் வந்து என்னை சந்தித்தார். கோயிலை இந்த மாதிரி அந்த அர்ச்சகன் பண்ணியிருக்கிறானே என்று வரிசையாகச் சொன்னார்.

காஞ்சிபுரம் அர்ச்சகர் சங்கதி முடிவதற்குள் சென்னை சாமியார் ஒருவர் வந்து அடுத்து நிற்கின்றார். ஒரு பெண்ணை பாலியல் புகாருக்கு உள்ளாக்கிய அந்த சாமியாரை காவல் துறை வந்து தேடுகிறது.

நல்ல வாய்ப்பாக இப்பொழுது கலைஞர் ஆட்சி இருக்கிறது.

பெண்கள் வாக்கு மூலம் கொடுத்தார்கள்

உடனே நமது காவல்துறை அந்த சாமியாரை கைது செய்து அழைத்து வந்தார்கள். இப்பொழுதுதான் பெண்களுக்கு தைரியம் வந்து என்னை அந்த அர்ச்சகர் கெடுத்தார், என்னையும் அந்த அர்ச்சகர் கெடுத்தார் என்று இப்பொழுதுதான் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள்.

எதற்காக? கடவுளை மற! மனிதனை நினை! என்று தந்தை பெரியார் சொன்னாரே அது எவ்வளவு சரியான விஷயம் என்று பாருங்கள்.

நாம் யாரையும் புண்படுத்துவதற்காக சொல்லவில்லை. இதில் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் எங்களுடைய சகோதரிகள் தான். அவர்களுக்கெல்லாம் தெளிவு பிறக்கும் பொழுது தானாகத் தெரியும். இங்கே கூட ஒருவர் சொன்னார்_அய்யா தந்தை பெரியார் அவர்களிடத்திலே ஒருவர் கேட்டார், அய்யா, நீங்கள் கடவுள் இல்லை என்று சொல்லுகின்றீர்களே, ஒரு வேளை திடீர் என்று வந்துவிட்டால் என்ன செய்வது? என்று கேட்டாராம்.

பெரியாரிடம் ஒருத்தர் கேட்டார்

ரொம்ப நாளைக்கு முன்னாலே குடிஅரசு அலுவலகத்தில் வேலை பார்த்தவர் இப்படி கேட்டார். நீங்களோ, நானோ இருந்தால் கோபப்பட்டிருப்போம். எப்படிய்யா வருவாரு? இல்லாதவர் எப்படி வருவார்? என்னய்யா முட்டாள் தனமாக கேள்வி கேட்கிறாய் என்றெல்லாம் பதில் சொல்லியிருப்போம்.

தந்தை பெரியார் ஓர் எதார்த்தவாதி; நடைமுறைக்கு உகந்தவர்; மனிதநேயர். கோபப்படாமல் பதில் சொன்னார். கடவுள் வந்து விட்டார் என்றால் இருக்கிறார் என்று சொல்லிவிட்டுப் போவோம். அவர் வந்துவிட்டால் நமக்கென்ன நட்டம்? (கைதட்டல்) நமக்கு ஒன்றும் அவர் மீது சங்கடம் இல்லையே! இவ்வளவு நடந்தும் வரவில்லையே!

நாட்டில் இவ்வளவு கொடுமைகள் நடக்கின்றன. நாட்டில் இவ்வளவு புயலும் பூகம்பமும் நடக்கின்றன. இவ்வளவு ஆபாசங்கள் நடக்கின்றன. இதுவரை கடவுள் வரவில்லையே! இருந்திருந்தால் அல்லவா வருவதற்கு? கடவுளைக்காட்டி மக்களை ஜாதி வாரியாகப் பிரித்தார்கள். கடவுளைக் காட்டி மதங்களைப் பிரித்தார்கள். அந்த மதங்களைக் காட்டி மனிதர்களிடையே பெரிய பிளவை ஏற்படுத்தினார்கள். நாட்டில் இரத்த ஆறு ஓடும்படிசெய்து விட்டார்கள்.

எனவே மனிதநேயம் இருக்க வேண்டும் என்று சொன்னால் அவர்கள் மதங்களால் பிரிந்திருக்கலாம். மனங்களால் பிரிந்திருக்கலாமா? மதங்களால் பிரிந்த மக்களை மனங்களால் ஒன்றுபடுத்துகின்ற இயக்கம்தான் தந்தைபெரியார் அவர்களுடைய இயக்கம் (பலத்த கைதட்டல்).

பெரியார் இயக்கம் ஒரு ஊரில் தோன்றினால்

ஆகவே பெரியாருடைய இயக்கம் என்பது ஒரு அறிவியல் இயக்கம். உங்களுக்கு நடைமுறை உதாரணத்தை சொல்ல விரும்புகிறேன். இந்த ஊருக்கே ஒரு பெரிய சுகாதார மய்யம் இருந்தால் எந்தவித நோயும் இங்கு வராது.

இந்த ஊரில் ஒரு காவல்துறை நிலையம் இருந்தால் அது ஊருக்கு, சமுதாயத்திற்குப் பாதுகாப்பு. எங்கே கொலை, கொள்ளை நடந்தாலும் அதை கண்டுபிடித்து மக்களிடையே அமைதியை உருவாக்குவதுதான் காவல்துறையின், வேலை. திராவிடர் கழகத்தின் கருப்புச்சட்டைக்காரனுடைய வேலை என்ன என்று சொன்னால், இந்த சமுதாயத்தைக் காப்பாற்றுகிற வேலை.காவல்காரனுடைய வேலையைத் தான் இந்த இயக்கம் செய்து கொண்டிருக்கிறது. பெரியார் மய்யம் உருவாக வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் உண்டு. அய்யா போஸ் அவர்களுடைய கொடை உள்ளம் ரொம்ப பாராட்டுக்குரியது. பெரியார் மய்யத்திற்கு கொடுக்கப்பட்ட இடத்திற்கு மதிப்பே கிடையாது.

இல்லை என்று சொன்னதில்லை

அய்யா போஸ் அவர்களைப் பற்றி அமுதன் சொன்னார். எதையும் இல்லை என்று சொல்லுகின்ற பழக்கம் அவருக்கு இல்லை என்று சொன்னார். அவர் சரியாக தெளிவாக நினைத்திருக்கிறார். அவர் மனதில் நினைப்பதை வெளிப்படையாகப் பேசக்கூடிய அந்த சிந்தனையிலே இருப்பதாலே இவ்வளவு பெரிய காரியங்களை செய்திருக்கிறார். நான் வெளியூர்க்காரன். உங்களுக்கெல்லாம் அவரைப் பற்றித் தெரிந்திருக்கலாம்.

பெரியார் சொன்ன ஒரு தத்துவம்

தந்தை பெரியாருடைய பொது வாழ்க்கையின் தத்துவத்தை சொல்லுகின்றேன். தந்தை பெரியார் அறிவார்ந்த ஒரு கருத்தைச் சொன்னார். அரண்மனை மாதிரி வீடு இருக்கும். அந்த வீடு அவருக்குப் பிறகு அவருடைய மகனுக்கு சேரும். அதற்குப் பிறகு அவருடைய பேரப்பிள்ளை அல்லது அடுத்த தலைமுறையைச் சேரும். ஆனால் யார் பொதுவுக்காக இடத்தை கொடுக்கிறார்களோ அது அவர்களுடைய பெயரைத் தாங்கி நிற்கும்.

இங்கே உதாரணத்திற்கு 5 சென்ட் நிலத்தை கொடுத்திருக்கிறார்கள் என்று சொன்னால் அது நூறாண்டுகள் ஆனாலும் போஸ் அவர்களுடைய, காஞ்சனா அவர்களுடைய இல்லமாகத்தான் இருக்கும்.

கொடுக்கவில்லை சம்பாதித்திருக்கிறார்கள்

இந்த சொத்தை அவர்கள் கொடுக்கவில்லை. அவர்கள் சம்பாதித்திருக்கிறார்கள். நாம் எல்லோரும் என்ன தெரிந்து கொள்ள வேண்டும். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அய்யா அவர்கள் ஒழுக்கமாக இருக்கின்றார். நாணயமாக இருக்கின்றார். நாத்திகன் என்றால் தவறு செய்யக்கூடாது. தவறு செய்தால் தண்டனையிலிருந்து தப்பக் கூடாது. பிராயச்சித்தம், பாவ மன்னிப்பு என்பதெல்லாம் இங்கு கிடையவே கிடையாது.

பாதிரியார் கதை

ஒரு பாதிரியார் பற்றி கதை உண்டு. இந்த பாவம் செய்தால் 5 ரூபாய் தண்டனை. இந்த பாவம் செய்தால் 50 ரூபாய் தண்டனை. இப்படி அந்த நாள்களில் நடந்தது. இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டது. அப்பொ ழுது ஒரு நிகழ்வு நடந்த தாக சொல்வார்கள். இப்படி பாவம் செய்த வர்களுடைய பணத்தை எல்லாம் திரட்டி பாதிரி யார் எடுத்துக்கொண்டு போகின்றார்.

இப்படிப்பட்ட நிலையிலே வழியிலே வந்த ஒருவன் எல்லா பணத்தையும் என்னிடம் கொடுக்கிறாயா? அல்லது சுடட்டுமா? என்று கேட்டான். இல்லை இல்லை என் உயிரைக் காப்பாற்றிக்கொள்வது முக்கியம். நீ இந்த பணத்தை எடுத்துக்கொள் என்று சொல்லிவிட்டு, அதற்கு முன்னாலே ஒன்றே ஒன்று_ நீ செய்கிற பாவ காரியம் எவ்வளவு மோசமானது என்று யோசித்துப் பார்த்தாயா? ரொம்ப பெரியது, நீ நரகத்தில் கூட தூங்க முடியாது. அவ்வளவு பெரிய பாவ மாயிற்றே!

தவறு செய்தால் தண்டனை ஏற்க வேண்டும்

இது ஆண்டவன் பணமாயிற்றே. இதைத் தொட்டால் உனக்கு பாவ மன்னிப்பே கிடையாது என்று சொன்னார். உடனே அந்த திருடன் சொன்னானாம், இதற்கும் சேர்த்து பணத்தைக் கொடுத்து உன்னிடமிருந்து ரசீதை வாங்கிக்கொள்வேன், அவ்வளவுதான்.

ஆகவே பாவத்தை கழுவுவது என்பது குற்றத்தை மறைப்பதாகும்.

பகுத்தறிவுவாதிகள், நாத்தி-கர்கள், பெரியார் தொண்டர்கள், தவறு செய்யக்கூடாது.

தவறு செய்தால் தண்டனையை ஏற்க வேண்டும். அதுதான் வள்ளுவருடைய வாழ்க்கை முறை.

---------------(தொடரும்)--------------- “விடுதலை” 24-1-2010

0 comments: