Search This Blog

22.1.10

பண்பாட்டு மறுமலர்ச்சியில் தமிழிசைஇசைமணி சீர்காழி கோவிந்தராசன் அவர்களின் பவள விழாவில் கலந்துகொண்டு கருத்துரையாற்றிய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தமிழிசையின் பயணத்தையும், அது சந்தித்து வந்த இடர்களையும் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார்.

இசை மூலம் அன்றைக்கு தமிழகத்திலே புகழ் பரப்பி நம்முடைய அடிகளார் அவர்கள் இங்கே எடுத்துக் காட்டியதைப் போல இசை மேடையில் தமிழ் பாடினால் மேடை தீட்டாகிவிடும் என்றெல் லாம் கருதப்பட்டு, ஒதுக்கப்பட்ட அந்தக் காலத்தில் வென்று எதிர் நீச்சல் போட்டு வந்த பல இசை வாணர்கள் தண்டபாணி தேசிகர், எம்.எஸ்.சுப்பு லட்சுமி, சிதம்பரம் ஜெயராமன், சீர்காழி கோவிந்த ராஜன், எம்.கே. தியாகராச பாகவதர் இவர்கள் எல்லாம் எதிர் நீச்சல் போட்டு முன்னேறியவர்கள். தமிழை முன்னேற்றியவர்கள். தெலுங்கிலேதான் பாடுவோம், வடமொழியில்தான் பாடுவோம் என்ற ஒரு மேனியா இருந்தது. ஆயிரக்கணக்கான, பல்லாயிரக்கணக்கான மக்களைக் கவரக்கூடிய அளவிற்கு இசை ஞானத்தைப் பொழிந்தாலும் கூட அதெல்லாம் துக்கடா, சில்லறை என்ற பட்டியலிலேதான் தமிழ் இசை இருந்தது. அருமை யாக ஒரு கச்சேரி நடக்கும்போது துண்டுத்தாள் வரும், இரண்டு சில்லறை பாடுங்கள் என்று. அதாவது தமிழிலே பாடுவதற்குப் பெயர் சில்லறை. தமிழ் சில்லறையாக இருந்த ஒரு காலம், அந்த சில்லறையாக இருந்த காலத்தை கல்லறைக்கு அனுப்பிவிட்டு, இன்றைக்கு தமிழை மணவறையில் உட்கார வைத்திருக்கின்ற பெருமை யார் யாருக்குச் சேருமென்றால், நெஞ்சில் நிறைந்த சீர்காழி கோவிந்தராஜனைப் போன்றவர்களுக்கு, நான் முதலிலே குறிப்பிட்ட இசைவாணர்களை யெல்லாம் அந்தப் பெருமை சேரும் என்றார் முதலமைச்சர்.

இன்றைக்கு வெளிப்படையாக தமிழ்ப் பாட்டுப் பாடியதால் மேடை தீட்டாகிவிட்டது என்று கூறும் துணிவு யாருக்கும் கிடையாது என்பது உண்மைதான். காரணம், தந்தை பெரியார் அவர்களும், அவர்கள் கண்ட இயக்கமும், ஊட்டிய இன உணர்வும், தன்மான உணர்வும்தான்.

அதேநேரத்தில், தினமணியே தலையங்கம் தீட்டும் அளவுக்கு தலைநகரில் சபாக்களில் நடக்கும் கச்சேரிகள் முழுக்க முழுக்க சமஸ்கிருதம், தெலுங்குப் பாடல்கள்தானே!

அங்கு பெரும்பாலும் பாட அழைக்கப்படுபவர்களும் பார்ப்பனர்கள்தானே! தப்பித் தவறித் தமிழர்கள் அழைக்கப்பட்டாலும், அவர்களும்கூட அந்தக் கூட்டத்தோடு சரணமடைந்து அந்த வகை பாடல்களைத்தானே பாடுகிறார்கள்.

உலகப் புகழ்பெற்ற பாடகர் ஜேசுதாஸ்; அதில் இரு வேறு கருத்துகளுக்கு இடம் இல்லைதான்.

அவரே மனம் புழுங்கி அளித்த பேட்டி ஆனந்தவிகடனிலேயே (20.12.1992) வெளிவந்ததே!

கேள்வி: இந்த சீசன்ல எங்கெங்கே பாட ஒப்புக்கிட்டிருக்கீங்க?

ஜேசுதாஸ்: மியூசிக் அகாடமி தவிர, எல்லா இடத்துலேயும் என்று பதில் சொன்ன ஜேசுதாஸ் அதற்குப் பின்னர் விளக்கமும் சொல்லியிருக்கிறார். அதுதான் கவனிக்கத்தக்கதாகும்.

அங்கெல்லாம் பாடுவதற்கு எனக்குப் பாரம்பரியம் இல்லையே!

தியாகராஜர் என் தாத்தாவை மடியிலே உட்கார்த்தி வெச்சுண்டு பாட்டுப்பாடி சாதம் ஊட்டியிருக்கார்னு சொல்றவங்களுக்கு மத்தியிலே நான் பாரம்பரியம் இல்லாத அந்நியன்தானே! என்று மிகவும் நாசுக்காக தம் ஆதங்கத்தை வெளிப்படுத்தியதுண்டு.

தம்மை அவாள் கூப்பிடுவதில்லை; அவாளின் சபாக்களில் பாட அனுமதிப்பதில்லை என்று கூறும் இதே ஜேசுதாஸ் போன்றவர்கள்கூட அவர்கள் பாடும் மேடைகளை எடுத்துக்கொண்டாலும், பெரும்பாலும் சமஸ்கிருத, தெலுங்கு வகையறாக்கள்தான் என்பதை-யும் இந்த இடத்தில் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

இதற்கெல்லாம் ஒரு தீர்வு தக்க வகையான மாற்று ஏற்பாடுகள்தாம்; தமிழ்ப் புத்தாண்டையொட்டி தலைநகரில் கடந்த நான்காண்டு காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் சங்கமம் நிகழ்ச்சிகள்போல தமிழிசை நிகழ்ச்சிகளை நடத்துவதிலும் ஒரு புதிய புலிப் பாய்ச்சல் தேவைப்படுகிறது.

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தைத் தொடங்கி பல ஆண்டுகாலமாக நடத்திவருவதும் இந்த வகையைச் சார்ந்ததே!

பாடுகின்றவர்கள் என்ன பாடுகிறார்கள் என்ற பொருள் கேட்பவர்களுக்குப் புரியாவிட்டால், அது என்ன சுவை? பழைய காலத்து ஊமைப் படத்தையா இப்பொழுது பார்க்க முடியும்?

தமிழ்ப் பண்பாட்டு மறுமலர்ச்சியில் கலைகளுக்கும் முக்கிய இடம் உண்டு. தமிழர்களில் வசதி வாய்ப்பு உள்ளவர்கள் புரவலர்களாக இருந்து இந்த வகையில் தமிழிசையை ஊக்குவிக்க முன்வரவேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

-------------------- “விடுதலை” தலையங்கம் 21-1-2010

0 comments: