Search This Blog

19.1.10

கலப்புத் திருமணம் வார்த்தைகளில்தானா?

தமிழர்களாகக் கூடுகிறோம்; ஆனால், தமிழர்களாக வாழ்கிறோமா?
முதலமைச்சர் கலைஞர் இனமானக் கேள்வி

தமிழர்களாக ஓர் இடத்தில் கூடியிருக்கிற நாம், அந்த இடத்தைவிட்டு வெளியே செல்லும்போது அந்த உணர்வை மறந்து ஜாதிக்காரர்களாகப் பிரிந்து செல்கிறோமே இது நியாயம்தானா? தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவின் கொள்கைகளை எந்த அளவு பின்பற்றுகிறோம் என்ற வினாவை எழுப்பினார் முதலமைச்சர் கலைஞர் (18.1.2010).
திருவெண்காடு ஜெயராமன் அவர்களுடைய பேரனும், சண்முகசுந்தரம்_ சாருமதி சண்முக சுந்தரம் ஆகியோரின் அன்புச் செல்வனுமான கார்த்திகேயனுக்கும், சென்னை சித்தாமலை _ பாலாமணி ஆகியோருடைய அன்புச்செல்வி ரேவதிக்கும் நம்மனைவருடைய முன்னிலையில் திருமணம், காதல் திருமணம், கலப்புத் திருமணம் நடைபெற்று நம்முடைய இனிய வாழ்த்துகளையெல்லாம் பெற்றிருக்கின்றார்கள்.

இன்றைக்குப் பலரும் வாழ்த்துவதற்காக இந்த விழாவிற்கு வந்திருந்தாலுங்கூட, நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் ஆகியோர் அனைவரும் வாழ்த்த இயலாத அளவிற்கு எல்லோருக்கும் சேர்த்து நன்றியுரையிலே நம்முடைய தம்பி டாக்டர் ராஜமூர்த்தி அவர்கள் நன்றியுரை இப்படித்தான் இருக்க வேண்டுமென்று இனி நன்றியுரை ஆற்ற வருபவர்களுக்கெல்லாம் வழிகாட்டுதலைப் போல ஒரு பேருரையை நிகழ்த்தியிருக்கிறார். அவர் இங்கே தனக்கு ப்ரமோஷனே கிடையாதா என்று கேட்டார். ப்ரமோஷன் உண்டு. இப்போது அவர் அருள்பிரகாச வள்ளலாருடைய சீடராக விளங்கிக் கொண்டிருக்கிறார். அவர் நேரடியாக அண்ணாவின் தம்பியாக, கருணாநிதியின் தம்பியாக வந்து விட்டால், அப்போது ப்ரமோஷன் நிச்சயமாகக் கிடைக்கும் (சிரிப்பு) என்று நான் ஆசி கூறுகிறேன்.

‘ஸ்டுப்பிட்’

நம்முடைய மணமக்களைப் பற்றி இங்கே உரையாற்றியவர்கள் சிறப்பித்துக் கூறினார்கள். அதிலும் குறிப்பாக தம்பி ஸ்டாலின் பேசும்போது ‘ஸ்டுப்பிட்’ என்பதிலேதான் இந்தக் காதல் ஆரம்பமாயிற்று என்று சொன்னார்கள். பொதுவாக காதலிப்பதே முட்டாள்தனம் தான் என்கின்ற ஒரு தத்துவம் நாட்டிலே இருக்கின்றது. ஆனால் அது முட்டாள்தனம் அல்ல; முழுமையான அறிவின் எல்லை என்பதை நிரூபிக்கின்ற வகையில், இந்த மணமக்கள் தங்களுடைய வாழ்க்கையை நடத்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கின்றது.

கலப்புத் திருமணம் வார்த்தைகளில்தானா?

இன்னொன்றும் சொன்னார்கள். இது கலப்புத் திருமணம் என்றார்கள். அந்தக் கலப்புத் திருமணத்தை இங்கே பாராட்டிப் பேசியவர்கள் எத்தனை பேர் கலப்புத் திருமணம் செய்து கொண்டார்கள் என்பதை தங்களுடைய நெஞ்சிலே கை வைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், கலப்புத் திருமணத்தைப்பற்றி வானளாவப் பேசுகின்றவர்கள், தங்களுடைய ஜாதியிலே, சொந்தத்திலே பெண் கிடைக்கிறதா, தங்கள் சொந்தத்திலே மணமகன் கிடைக்கிறானா என்றுதான் இன்றைக்குக் கணக்கிடுகின்ற காலமாக இன்னமும் இந்தக் காலம் இருக்கின்றது. என்னதான் பெரியார் சமத்துவத்தைப் பற்றிப் பேசினாலும், அண்ணா சமத்துவத்தைப் பற்றிப் பேசினாலும், சமத்துவபுரங்கள் தோன்றினாலும் இன்னும் நம் நாட்டிலே காதல் திருமணம், கலப்புத் திருமணம் என்பதெல்லாம் வெறும் வரிவடிவங்களாக, வார்த்தை ஜாலங்களாகத் தான் இன்றைக்கு இருப்பதை நாம் காணுகின்றோம்.

அதை விடுத்து உண்மையிலேயே காதல் திருமணம், உண்மையிலேயே கலப்புத் திருமணம் நம்முடைய நாட்டில், சமுதாயத்தில் நடைபெற வேண்டும், அதற்கான ஊக்கத்தையும், உறுதியையும் நம்முடைய நண்பர்கள் பெற வேண்டும், தோழர்கள் பெறவேண்டும், நம்முடைய உடன்பிறப்புகள் பெறவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

சமத்துவபுரங்கள் - ஏன்?

இன்றைக்குச் சமத்துவபுரங்களை உருவாக்கியிருக்கிறோம் என்றால், அது ஏதோ ஏழை எளியவர்களுக்கு வீட்டு வசதி செய்து தருகிறோம் என்றல்ல. அந்தச் சமத்துவபுரங்களிலேதான் கலப்புத் திருமணமே இன்றைக்கு உருவாகின்றது. ஒரு சமத்துவபுரத்திலே நூறு வீடுகள் கட்டுகிறோம் என்றால், அதிலே 40 வீடுகள் அடித்தளத்து மக்களுக்கு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்று தரப்பட்டு, 50 வீடுகளிலே பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு என்று ஒதுக்கப்பட்டது போக உயர் ஜாதிக்காரர்களுக்கென்று 10 வீடுகள் அதிலே ஒதுக்கப்படுகிறது.
100 வீடுகளில் உயர் ஜாதிக்காரர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், ஆதிதிராவிடர் என்று ஒதுக்கப்பட்டு, அந்த வீடுகளிலே அவர்கள் குடியிருக்கிற காரணத்தால், அங்கே உருவாகின்ற காதல் கலப்புத் திருமணங்களாக மாறி, அந்தத் திருமணங்களின் மூலமாக இந்த நாட்டிற்கு கிடைக்கின்ற புதல்வர்கள் அல்லது புதல்விகள் அவர்களெல்லாம் எதிர்காலத்திலே இந்த தமிழகத்தை சமத்துவ பாதையிலே நடத்திச் செல்லக்கூடிய வகையிலே வளரக் கூடும், - வளர முடியும் - வளர வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் சமத்துவபுரங்கள் தந்தை பெரியார் அவர்களுடைய பெயரால், தமிழகத்திலே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே அமைக்கப்பட்டு வருகின்றது.

தமிழர்களாக இருக்கிறோமா?

அந்த சமத்துவபுரங்களை இன்றைக்கு நூறு, இருநூறு, முன்னூறு என்று தமிழ்நாடு முழுவதும் நாம் உருவாக்கியிருக்கிறோம் என்றால் சமத்துவத்தை வெறும் வாயளவில் சொற்றொடர் என்ற அளவிலே பயன்படுத்தாமல், நடைமுறையிலே நாம் பயன்படுத்தியாக வேண்டும். நீங்கள் இங்கே வீற்றிருக்கிறீர்கள் என்றால் நாம் தமிழர்கள் -ஒரு மேடையிலே ஒரு சொற்பொழிவாளர் நெஞ்சுத் தட்டிக் கொண்டு தமிழர்கள் எல்லாம் கைதூக்குங்கள் என்று சொன்னால், இந்த மண்டபத்திலே இருக்கின்ற அத்துணை பேரும் கைதூக்குகிறோம். இங்கே தமிழர்களாக கூடுகிறோம். ஆனால், தமிழர்களாக கூடுகிற நாம் இந்த விழா முடிந்து மண்டபத்தில் இருந்து வெளியேறுகிற நேரத்தில் ஒரு பத்து பேர், இருபது பேர் செட்டியார்களாக, முதலியார்களாக, அய்யர்களாக இப்படித்தான் குழுகுழுவாக, ஜாதி வாரியாகத்தான் இங்கேயிருந்து வெளியே போகிறோம்.

ஒன்றாக அமரும்போது எல்லோரும் தமிழர்கள். இங்கேயிருந்து பிரிந்து செல்கிறபோது அவர் செட்டியார், அவர் முதலியார், அவர் பிள்ளைவாள் என்கின்ற அளவிற்குத்தான் தமிழ்நாட்டிலே இன்றைக்கும் ஜாதி மாறுபாடுகள் - ஜாதி வேறுபாடுகள் இருக்கின்றன. இவைகளெல்லாம் ஒன்றாக வேண்டும். ஒரே சமுதாயமாக, தமிழ்ச் சமுதாயமாக, திராவிட இனமாக நாம் மாற வேண்டும் என்பதற்காகத்தான், தந்தை பெரியார் குரல் கொடுத்தார். பேரறிஞர் அண்ணா வழியமைத்தார். அந்த வழியிலேயே பயணம் செல்கின்ற நாம், அதை மேலும் மேலும் வெற்றிகரமாக, அந்தப் பதாகையைத் தூக்கி பிடிக்க வேண்டுமென்று உங்களையெல்லாம் நான் கேட்டுக் கொள்கின்றேன்.

இயக்கத்திற்குக் கிடைத்த வெற்றி!

ஜாதி மறுப்பு என்ற வகையில் கொஞ்சம் முரட்டுத்தனமாகச் சொல்லை போட்டுத்தான் சுயமரியாதை இயக்கம், ஜாதி மறுப்பு திருமணம், தாலி மறுப்பு திருமணம் என்றெல்லாம் சீர்திருத்த திருமணங்களைச் சுயமரியாதை காலத்திலே, தொடக்க காலத்திலே நாம் நடத்தினோம். இன்றைக்கு அதனுடைய விளைவாக ஏராளமான திருமணங்கள் தமிழ்நாட்டிலே இன்றைக்கு கலப்புத் திருமணங்களாக, சுயமரியாதை திருமணங்களாக நடைபெற்றுக் கொண்டிருப்பதை பார்க்கிறோம். இது சமுதாயத் துறையிலே இந்த இயக்கத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. அந்த வெற்றியின் சின்னங்களாக இங்கே இதே மேடையிலே அமர்ந்திருக்கின்ற மணமக்கள் கார்த்திகேயன்_ - ரேவதியையும் நான் வாழ்த்தி, அவர்களுடைய இல்வாழ்வு எல்லா வகையான இன்பங்களையும் பெற்று விளங்குக! பெறுக! என்று வாழ்த்தி என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.

_ இவ்வாறு முதலமைச்சர் கலைஞர் உரையாற்றினார். --"விடுதலை” 19-1-2010

1 comments:

tamil said...

பெரியார்-மணியம்மை பல்கலைகழக நிகர்நிலை தகுதி இழந்துவிட்டது என்ற செய்திக்கு தி.க தரப்பில் எதிர்வினை என்ன?