திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள சங்கரன்கோவிலென்னும் சங்கரநாராயணன் கோவிலானது அச்சில்லாவில் உள்ள முக்கிய கோவில்களுள் ஒன்று. அக்கோவிலுக்கு ஏராளமான சொத்துக்கள் வரும்படி உண்டு.
லோககுரு என்றும் சங்கராச்சாரியார் சுவாமிகள் என்றும் சொல்லப்பட்ட ஸ்மார்த்தர்களின் குருவானவர் இம்மாதம் அவ்வூருக்கு வந்து அக்கோவிலை தனக்கும் தனது பரிவாரத்திற்கும் ஜாகையாக வைத்துக் கொண்டார். அதோடல்லாமல் சுவாமிகளின் திருக் கக்கூசும் அக்கோவிலுக்குள்ளாகவே கட்டப்பட்டு சுவாமிகளின் திருமலமும் கோவிலிலேயே சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது.
அக்கோவில் டிரஸ்டி கனவான்களில் பார்ப் பனரல்லாதார் அதிகமாய் (மெஜாரிட்டியாய்) இருந்தும் இதை ஆட்சேபிக்கத் தைரியமில்லை. ஏனென்றால் அவ்வூர் அதிகாரிகள் எல்லாம் குட்டி சுவாமிகள் குழாங்களாகவே இருக்கின்றன. அதோடு மாத்திரமில்லாமல் ‘‘சுவாமிகள்’’ சங்கரநாராயண சுவாமியை திருக்கண் பார்ப்பதாயிருந்தாலும், திரு மிதியடியை தாங்கிய திருப்பாதத்துடனேதான் மூலஸ்தானத்திற்குப் போய் திருக்கண் பார்த்தருளினாராம்.
அதோடு மாத்திரமல்லாமல் ‘‘சுவாமிகள்’’ கோவிலுக்குள் நுழையும் போது திருமேனாவில் திருப்பள்ளி கொண்ட கோலத்துடனேயே சென்றாராம். ‘மாமிக்கோர் மாமியுண்டானால் சுவாமிக்கோர் சுவாமி வேண்டாமா?’ அதுதான் நமது ‘‘லோக குரு சங்கராச்சாரியார், சுவாமிகள் போலும்!’’ சுவாமிகளின் இந்த வைபவங்களையும், தெய்வத் தன்மையையும் கண்ட திருநெல்வேலி நெல்லையப்பர் சுவாமி கோவில் பக்தர்களும், தர்மகர்த்தாக்களும் குறைந்தபட்சம் நெல்லையப்பர் கோவிலுக்குள் சுவாமிகளின் திருக் கக்கூசாவது கட்டப்படாமல் இருக்கவேண்டுமென்று கருதி லட்சக்கணக்கான துண்டு விளம்பரங்கள் போட்டும் தர்மகர்த்தாக்களுக்கு நோட்டீசு விட்டும் சத்தியாக்கிரகம் செய்வதாய் பயமுறுத்தியும் ஆர்ப்பாட்டம் செய்து சுவாமிகளின் திருக் கக்கூசை திருக் கோவிலுக்குள் கட்டாமலிருக்க தக்க ஏற்பாடு செய்துவிட்டார்கள்.
இது தவிர, நெல்லையப்பர் சுவாமி கோவிலுக்கு முன்னால் சங்கராச்சாரிய சுவாமிகள் வருகையை முன்னிட்டு போடப்பட்ட அலங்காரப் பந்தல்கள் போட அனுமதித்ததின் பலனாய் அஷ்டமி உற்சவத்தின்போது நெல்லையப்பர் சுவாமி எழுந்தருளுகையில் பந்தல் சமீபம் வந்தவுடன் தாழ்ந்தும் குனிந்தும் வெளியே வரவும் உள்ளே போகவும் ஏற்பட்டது. இதைப் பற்றி பல பக்தர்களுக்கு மனவருத்தமிருந்தாலும் சங்கராச்சாரிய சுவாமிகளும் அவரது திருக் கூட்டத்தாரும் இல்லாவிட்டால் நெல்லையப்பருக்கு இவ்வளவு மகத்துவமும், இவ்வளவு வேலி நிலமும், இவ்வளவு சொத்துக்களும் சுகங்களும் ஏது? ஆதலால் ‘‘சங்கராச்சாரிய சுவாமிகளின்’’ பந்தலுக்கு நெல்லையப்பர் தாழ்ந்து குனிந்து வணங்க வேண்டியதுதான்.
---------------தந்தைபெரியார் - "குடிஅரசு", கட்டுரை, 05.12.1926
0 comments:
Post a Comment