மும்பை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு:
மதங்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல!
அரசமைப்புச் சட்டத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ள பேச்சு சுதந்திரம், கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம் போன்ற அடிப்படை உரிமைகளின் கீழ் மதங்களை, அது இசுலாமாக இருந்தாலும், இந்து மதமாக இருந்தாலும், கிறித்துவ மதமாக இருந்தாலும், விமர்சனம் செய்வது அனுமதிக்கப்பட்டுள்ளதுதான் என்றும், அந்தக் காரணத்துக்காக மட்டுமே ஒரு புத்தகத்தை தடை செய்ய முடியாது என்றும் மும்பை உயர்நீதிமன்ற அமர்வு தனது தீர்ப்பில் கூறியுள்ளது. என்றாலும் அத்தகைய விமர்சனங்கள் உண்மையான நோக்கம் கொண்டவையாகவும், இரு மதத்தினரிடையே பகை உணர்வை வளர்ப்பதாகவும் இருக்கக்கூடாது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
உயர்நீதிமன்றம் இவ்வாறு கூறியிருப்பது மனித உரிமை ஆர்வலர்களுக்குப் பெரு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இசுலாம் அரசியல் உலகின் மீது முஸ்லிம்களின் படையெடுப்பு என்னும் கருத்து என்ற நூலை பாசின் என்பவர் 2003 இல் எழுதி வெளியிட்டிருந்தார். 2007 ஆம் ஆண்டில் மகாராட்டிர அரசு அந்த நூலை தடை செய்தது. இதனை எதிர்த்து பாசின் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் ரஞ்சனா தேசாய், சந்திரசூட் மற்றும் மொஹிதி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.
இசுலாம் பற்றி அதிகமாக அறியப்படாத சில செய்திகளை ஆசிரியர் இந்த நூலில் கூறியுள்ளார். அவை தவறாகக் கூட இருக்கலாம்; ஆனால் அதை வெளிப்படுத்தவும் அவருக்கு உரிமை உள்ளது என்று அவரது வழக்கறிஞர் காமா வாதாடினார்.
அரசு வழக்கறிஞரும், சில முசுலிம் அமைப்புகளின் சார்பில் வழக்கறிஞர்களும் தடையை ஆதரித்து வாதாடினர். அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், புத்தகத்தின் மீதான தடையை நீக்க மறுத்துவிட்டனர். என்றாலும் அவர்கள் தங்கள் தீர்ப்பில், தனக்கு சரி என்று பட்டதை ஆசிரியர் கூறலாம்; அது தவறாக இருந்தாலும் அதற்காக அவரை தண்டிக்க முடியாது. என்றாலும், இசுலாம் மதக் கட்டளைகளை ஆராயும் உண்மையான நோக்கத்துடன் அத்தகைய கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இந்த நூலில் அத்தகைய நோக்கத்துடன் கருத்து தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. முசுலிம்களின் மத உணர்வைப் புண்படுத்த வேண்டும் என்ற கெடு நோக்கத்துடன் செய்யப்பட்டது போலவே தோன்றுகிறது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
மதத்தைப் பற்றி விமர்சனம் செய்ய ஒருவருக்கு உரிமை உள்ளது எனக் கூறிய நீதிபதிகள், ஒரு குறிப்பிட்ட மதத்தவர் மீது வெறுப்பு மற்றும் பகை உணர்வைத் தூண்டிவிடும் வகையில் அது இருக்கக்கூடாது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
முசுலிம் மத மக்களுக்கும் மற்ற மத மக்களுக்கு மிடையே போர் நடைபெறுவது தவிர்க்க முடியாதது என்று கற்பனை செய்து கொண்டு, இந்திய முசுலிம்கள் எவ்வாறு இந்துக்களை மதம் மாறச் செய்ய விரும்புகின்றனர் என்பது பற்றியும், இந்து கோயில்களும் பெண்களும் எவ்வாறு தாக்கப்படுகின்றனர் என்பது பற்றியும் ஆசிரியர் எழுதி இருப்பது, மக்களிடையே பகை உணர்வைத் தோற்றுவித்து வன்முறைக்கு வழிகோலும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
------------------- “விடுதலை” 8-1-2010
1 comments:
//ஒரு குறிப்பிட்ட மதத்தவர் மீது வெறுப்பு மற்றும் பகை உணர்வைத் தூண்டிவிடும் வகையில் அது இருக்கக்கூடாது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.//
As usual, you chose to highlight the part which is convenient to you. What about this part? Is this not what periar / veeramani / mu.ka do all the time? They never dare to talk ill about any religion other than Hindu. So, i believe you would not say that they are against all religions!
Post a Comment