Search This Blog

8.1.10

தலித் விடுதலை முன்னோடி பெரியார் - 6


இதுதான் யானை என்று உருவகப்படுத்திக் கொண்ட விழி இழந்த அய்வர் கதை கேள்விப்பட்டிருப்பீர்கள். அது உண்மையோ பொய்யோ எனக்குத் தெரியாது.பகுத்தறிவு ஒளி மூலம் நமது விழிகளைத் திறந்த சமுதாய மருத்துவராம் தந்தைபெரியாரைப் பற்றி அந்த விழி இழந்தோர் உருவகப்படுத்தியதை விடவும் அதிகமான அளவில் பொய்யும், புனைவுமாக பல உருவகங்களை உலவவிட்டுள்ளனர் பார்ப்பனர்களும் ,பார்ப்பன அடிவருடிகளும்.

எடுத்துக்காட்டாக பெரியார் கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டு வீட்டில் பிள்ளையாரை வணங்கினார், வெள்ளைக்காரனுக்கு வால் பிடித்தார்,பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாடுபடவில்லை,அவர்களை இழிவாகப் பேசினார் என்பது போன்ற பல அவதூறுகளை அள்ளிவீசி வருகின்றார்கள். இந்த அவதூறுகள் பெரியார் உயிரோடு இருந்த போதிலிருந்தே சொல்லப்பட்டு வருகிறது. இந்த அவதூறுகளுக்கெல்லாம் பெரியாராலும், பெரியார் தொண்டர்களாலும் மற்றும் நேர்மையான வரலாற்று ஆய்வாளர்களாலும் தகுந்த ஆதாரங்களுடன் பதில் அளிக்கப்பட்டே வந்துள்ளது.

இருந்தாலும் திரும்பத் திரும்ப அதே அவதூறுகளை இப்போதும் சொல்லிவருகிறார்கள். அந்த வகையில் http://www.tamilhindu.com தளத்தில் பெரியாரின் மறுபக்கம் என்ற பெயரில் ஏற்கனவே புத்தகமாக வந்ததை பதிவு செய்து வருகின்றனர். அந்த தளத்தில் வரும் செய்திகளையொட்டி நாம் மறுமொழி அளித்தால் பதிவு செய்யப்படுவதில்லை. அதோடு நாம் பதில் அளிக்கவில்லை. நழுவி விடுகிறோம் என்ற மாய்மாலப் பிரச்சாரத்தையும் கட்டவிழ்த்து விடுகின்றனர். இவர்கள் வைத்த குற்றச்சாட்டுக்கெல்லாம் நாம் ஏற்கனவே நாம் http://thamizhoviya.blogspot.com “தமிழ் ஓவியா” வலைப்பூவில் பதில் அளித்துள்ளோம். குறிப்பாக பெரியார், பெரியார்-தலித், அய்யத்தெளிவு என்ற சுட்டியை சுட்டிப் படித்தால் உண்மையை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

பணிப்பளு மற்றும் குடும்பச் சுமை காரணமாக இந்தப் பார்ப்பனக்கும்பலுக்கு உடனுக்குடன் பதில் அளிக்க கால தாமதமாகிறது. அதோடு ஏற்கனவே இது குறித்து பதில் அளித்து விரிவான நூல்கள் வந்து விட்ட நிலையில் திரும்பத் திரும்ப எழுத வேண்டுமா? என்ற எண்ணமும் ஏற்படுகிறது.
அந்த வகையில் 2004 அம் ஆண்டு “உலகத் தமிழர் சக்தி” ஜூன் 2004 இதழில் “தலித் தலைமை –பெரியாரின் நிலை என்னவாக இருந்தது?” என்ற தலைப்பில் டாக்டர் வேலு அண்ணாமலை அவர்கள்,எழுதிய கட்டுரைக்கு மறுப்பாக நான் எழுதிய கட்டுரையை இங்கு தொடர்ச்சியாகப் பதிவு செய்கிறேன்.
சமூகப் பொறுப்பில் என்னுடைய பங்கும் இருக்க வேண்டும் என்று கூறியதோடு இந்த கட்டுரையை தட்டச்சு செய்து கொடுத்த எனது இனிய தோழர் “ஆதிஆனந்த்அப்பா” அவர்களின் உதவிக்கு மிக்க நன்றி
****************************************************************************
“பெரியாரின் படிப்பறிவு பற்றி எனக்கு தெரியாது. சூத்திரர்களுக்காக அவர் செய்த போராட்டங்களையும், நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்துயிசம் வளர அரவது பங்களிப்பும் மறுக்க முடியாது. இன்று தலித் மக்கள் கஷ்டப்படுகிறhர்கள் என்றால் அதற்குக் காரணம் பெரியாரும் அவரது சீடர்களும்தான்” என்ற அடுத்த அவதூறை வீசியுள்ளார் டாக்டர் வேலு அண்ணாமலை.

படிப்பறிவு என்பது வேறு. பட்டறிவு என்பது வேறு. படிக்காத பெரியாரால்தான் பல பள்ளிக் கூடம் உருவாகியது. படிக்காத பெரியார்தான் பல பல்கலைகழகங்கள் அமையக் காரணமாயிருந்தார் என்பதுதான் வரலாறு உணர்த்தும் உண்மை. பெரியாரின் போராட்டமுறை என்பது பொதுமக்களுக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு இல்லாததாகவும், பொதுச்சொத்துக்கு சேதம் இல்லாத முறையிலும் இருக்கும். ஆதேவேளை அரசாங்கத்திற்கும், ஆதிக்க வாதிகளுக்கும் பெரும் நெருக்கடியை கொடுக்கக் கூடியதாகவும் இருக்கும். மக்கள் நலனை மட்டுமே முன்னிருத்தி போராட்டம் நடத்தியவர் பெரியார்.


இது குறித்து பெரியார் தரும் விளக்கம் இதோ:-


“திராவிடர்கழகத்தைப் போன்ற அபூர்வமான இயக்கம் வேறெங்கும் இருக்க முடியாது. அதாவது பதவிக்கு வரவேண்டுமென்ற எண்ணமோ, தேர்தலுக்கு நிற்கவேண்டிய அவசியமோ அதற்கான திட்டமோ சிறிதுமின்றி யார் எந்த எதிர்கட்சி ஆட்சி புரிந்தாலும் அவர்களை நாணயமாகவும், மக்களின் நலனுக்காகவுமான வகையில் தொண்டாற்றச் செய்வதும் அவர்களிடத்தில் நிபந்தனைப்படுத்தி அவ்வேலைகளை வாங்குவதும் கழகத்தின் முக்கியத் தொண்டாகும். ஏனவேதான் நாங்கள் கூட்டம் போடுவதோ அன்றிக் கிளர்ச்சி செய்வதோ, ஓட்டுப் பெறுவதற்காக அல்லது அதிகாரபீடத்தில் அமருவதற்காகச் செய்யப்படும் அரசியல் முன்னேற்பாடுகள் என்று எவரும் கருதக்கூடாது. இன்னும் கூறுவேன் - நாங்கள் எந்த குறிப்பிட்ட ஜாதியினருக்கோ, கட்சியினருக்கோ விரோதிகளல்லர் ‘எல்லோரையும் விட நாங்கள்தாம் உயர்பிறவி’ என்னும் பார்பனர்களுக்கும் கூட நாங்கள் எதிரிகளல்லர், அவர்கள் பாடுபடாமல் உயர்வு வாழ்வு வாழ்கிறார்கள் என்று அவர்களைப் பழிவாங்க வேண்டுமென்பதும். எல்லோரும் சரி நிகர் சமானமாயிருத்தல் வேண்டும் என்பதுதான் நமது சமுதாயத் தொண்டு.

-------------------–”விடுதலை” 22.08.1948

பெரியாரின் போராட்டங்கள் “இந்துத்துவம்” வளர உதவியதா

அல்லது ‘இழிவு ஒழிய’ நோக்கமாகக் கொண்டதா என்பதை பெரியாரின் வாயிலாகவே பார்ப்போம்.

இந்தி எதிர்ப்புப் போராட்டம் :-

இந்தி நுழைவு என்பது வடமொழி ஆதிக்கம் மட்டுமல்லாமல், சிறு பையன்களில் தூயமனத்தில் - பச்சமைரத்தில் ஆணி அடிப்பது போல, ஆரிய வர்ணாசிரமக் கலாச்சாரத்தைப் புகுத்துவதும் அநீதியாகும். எனவே நாம், மொழிப்பிரச்சினையோடு மாத்திரமின்றி நம் நாட்டுக் கலாச்சாரம், பண்பாடு ஆகியவைகளிலும் வடநாட்டு ஆதிக்கம் கை வைத்து அழிக்கும் சூழ்ச்சி என்பதை மறக்கக் கூடாது.

----------------------------- (விடுதலை 22.8.1948)

பிள்ளையார் உருவப் பொம்மை உடைப்பு:-


நான் என் சொந்த பொறுப்பில் முன்பு பல தடவைகள் கூறி இருப்பது போல வருணாசிரம வியாதியை ஒழிக்கக் கடைசி சிகிச்சையாக, நாளது மாதம் 27ம் தேதி புதன்கிழமை தமிழ் நாடெங்கும் புத்தர் விழா கொண்டாடி, மாலை 6 மணிக்குப் பொதுக்கூட்டத்தில் வருணாசிரமவாதிகள் பெரும்பாலோருக்கும் ‘மூலதேவன் - தெய்வம்’ எனவே கருதப்படுகிறதற்கு என்று உருவாக்கி இருக்கும் ‘செயற்கை உருவ கணபதி அறிகுறியை’ மக்கள் உள்ளத்தில் அழித்து விட வேண்டும் என்பதாகப் பொதுமக்களை- அதாவது மனு வருணாசிர தர்மத்தை வெறுக்கிற பொதுமக்களையும்- திராவிடர் கழகத் தோழர்களை, சிறப்பாக இளைஞர்களையும் வேண்டிக் கொள்கிறேன்.

---------------------(விடுதலை 7.5.1953)


ஆச்சாரியார் கல்வித்திட்ட எதிர்ப்பு:-


“இந்தக் கல்வித்திட்ட எதிர்ப்பு என்பதை ஒரு அரசியல் போராட்டமாக்கருதி இதை நாங்கள் எதிர்க்கவில்லை, இதைச் சமுதாயப் போராட்டமாக இனவாழ்வுப் போராட்டமாக்க கருதியே எதிர்க்கிறோம். எங்கள் இனத்துக்கு-திராவிட இனத்ததுக்கு இந்த இனத்தையே தீர்த்துக் கட்டுவதற்காக வைக்கப்படும் பெருத்த வெடிகுண்டு என்று கருதியே இக்கல்வித் திட்டத்தை எதிர்க்கிறோம். இந்த எதிர்ப்பை போராட்டத்தை நாங்கள் எங்களுடைய ஜீவாதாரமான, உயிர் நிலைப்ப போராட்டமாகக் கருதுகிறோம், இப்போதே சொல்கிறேன், இந்தக் கல்வித்திட்டம் எடுபட்டால் மட்டுமே போதாது. நம்முடைய மக்களுக்கு உத்தியோகம், கல்வி எல்லாவற்றிலும் சரியானபடி விகிதாச்சாரம், பார்ப்பானுக்கு 100க்கு 3, நம்மவர்களுக்கு 97 என்கிற மாதிரி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட வேண்டும், இந்த இரண்டும் திராவிட மக்களின் ஜீவாதாரமான உரிமையான பிரச்சினைகள். இந்த இரண்டு காரியங்கள் நிறைவேறுவதற்காக இந்த இனம் கடைசிவரை உயிரைப் பணயம் வைத்துப் போராடியே தீரும், இதில் சந்தேகமே இல்லை.

------------------ (31.11.1954ல் சென்னையில் சொற்பொழிவு)


இராமன் பட எரிப்பு ஏன்?:-

இன்றைய தினம் எனது சமுதாயத் தொண்டின் முதலானதும் முக்கியமானதுமான ஜாதி ஒழிப்பை எடுத்துக் கொண்டால் இராமனின் முதல் செய்கையும் கடைசி செய்கையும் ஜாதியைக் காப்பாற்றுப் பிறந்து, ஜாதியைக் காப்பாற்றி விட்டுச் செத்தததேயாகும், நமது நாட்டில் சமுதாயத் திருத்த வேலையோ, பகுத்தறிவுப் பிரச்சார வேலையோ எந்த ஒரு சிறிய அளவுக்கு நடக்க வேண்டுமானாலும் முதல் இலட்சியச் செய்கையாக, ஸ்லோகச் சொல் காரியமாக, துவக்கக் குறியாக இராமாயணம்-இராமன் அழிந்து ஒழிக்கப்பட்டு ஆக வேண்டும்.. .. உயிரை விட்டாவது மானத்தை, மனிதத்தன்மையை, ஒழுக்கத்தைக் காப்பாற்றவே இராமனைக் கொளுத்தச் சொன்னேன். சொல்கிறேன்

----------------(விடுதலை 4.8.1956)

1921 இல் கள்ளுக்கடை மறியல் போராட்டம், 1924 இல் வைக்கம் போராட்டம், 1941 இல் இரயில் நிலையத்தில் உணவு விடுதியில் அமுலில் இருந்து வர்ணாசிரமத்தை எதிர்த்துப் போராட்டம், 1951 இல் இடஒதுக்கீடு பிரச்சினையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நடத்திய போராட்டம் 1955 இல் அறிவித்த தேசிய கொடி எரிப்பு போராட்டம், 1957 இல் அரசியல் சட்ட எரிப்பு போராட்டம், 1960 இல் நடத்திய தமிழ்நாடு நீங்கிய இந்திய வரைபடத்தை எரிக்கும் போராட்டம் 1971 இல் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் போராட்டம்

இப்படி பல போராட்டங்களை தமிழரின் உரிமைக்காகவும், தமிழின இழிவு ஒழிப்புக்காகவுமே நடந்தவைகளை “இந்துத்துவம்” வளர உதவியது என்ற கூசாமல் பொய்யையே “மூலதனமாக” வைத்து டாக்டர் வேலு அண்ணாமலை எழுதியுள்ளார்.

பெரியாரின் அறிவாற்றலாலும், போராட்டத்தாலும்தான் ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களின் உரிமைகளும் கிடைத்துள்ளன என்பதை மேற்கண்ட சான்றுகள் மூலம் அறிந்தோம், தலித் மக்கள் இந்தளவு முன்னேறியுள்ளதற்கு காரணம் பெரியாரும், பெரியார் சீடர்களும் (உங்கள் பார்வையில்) காரணமில்லாமல் இருக்கலாம், ஆனால் கஷ்டப்படுவதற்கு கண்டிப்பாக பெரியாரும் பெரியார் சீடர்களும் காரணமல்ல என்பது கல்லுப் போன்ற உறுதி.


----------------------------தொடரும் ..............

0 comments: