ஒரு காலத்தில் சுயமரியாதை திருமணத்தை பாதிரியார்கள் எதிர்த்தார்கள்
இன்றைக்கு அதே பாதிரியார்கள் வந்து வாழ்த்துவது பெரியார் கொள்கைக்கு கிடைத்த
மாபெரும் வெற்றி தென்காசியில் நடைபெற்ற மணவிழாவில் தமிழர் தலைவர் பேச்சு
ஒரு காலத்தில் சுயமரியாதை திருமணத்தை பாதிரியார்கள் எதிர்த்தார்கள் இன்று அதே பாதிரியார்கள் சுயமரியாதை திருமணத்திற்கு வந்து வாழ்த்துகிறார்கள் என்றால், இது தந்தை பெரியார் கொள்கைக்கு கிடைத்த வெற்றி என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சீ.டேவிட்செல்லத்துரை இல்லத் திருமணத்தில் கூறி விளக்கவுரையாற்றினார்.
தென்காசியில் 17.1.2010 அன்று இசக்கி மகாலில் காலை 10.30 மணிக்கு டாக்டர் தமிழரசன் _ டாக்டர் கவுதமி ஆகியோரின் வாழ்க்கை இணை ஏற்பு விழாவினை தமிழர் தலைவர் கி.வீரமணி நடத்தி வைத்தார்.
அனைவரையும் வரவேற்று நெல்லை மாவட்ட ப.க தலைவர் சீ.தங்கதுரை உரையாற்றினார். மாவட்ட செயலாளர் முத்தமிழ் தொடக்கவுரையாற்றினார். மணமக்களை வாழ்த்தி பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் திருமகள் வாழ்த்துரை வழங்கினார். மேமெஞ்ஞானபுரம் சீ.டேவிட்செல்லத்துரை_டே.சாந்தி ஆகியோரின் மகன் டாக்டர் டே.சா.தமிழரசன் கோயிலூற்று கொ.செல்லப்பா_ராதாமணி ஆகியோரின் மகள் டாக்டர் செ.கவுதமி ஆகிய மணக்களுக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழி கூறி அதை மணமக்கள் பின்பற்றி கூறிய பின் மணவிழாவினை நடத்தி வைத்தார். தமிழர் தலைவர் தமது வாழ்த்துரையில் கூறியதாவது:
இந்த பகுதியிலே மேலமெஞ்ஞானபுரம் கழகத்தின் பகுத்தறிவு பாசறையாக விளங்குகிறது. சுயமரியாதை கோட்டை ஆகும். கீழப்பாவூர், மேலமெஞ்ஞானபுரம் ஆகிய ஊர்களுக்கு நாங்கள் வரும்போது ஏராளமான கழகத் தோழர்கள் மட்டுமல்லாது தோழியர்கள் பெரும் அளவில் உற்சாகத்தோடு வந்து எங்களை வரவேற்று, சந்திப்பது முக்கிய நிகழ்வாகும். மாநாடு, பயிற்சி முகாம்களுக்கு குடும்பம் குடும்பமாக வந்து பங்கேற்பார்கள். இந்த மணவிழாவிற்கு மணமகளின் பெற்றோர்கள் செல்லப்பா-ராதாமணி ஒப்புக்கொண்டமைக்காக அவர்களுக்கு மிகுந்த பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
டேவிட்செல்லத்துரை, சாந்தி ஆகியோரின் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த பின்பு தன்னுடைய உழைப்பால் கொண்ட கொள்கையால் இன்றைக்கு இவ்வளவு கூட்டம் வரக்கூடிய அளவிற்கு அவர்கள் வளர்ந்திருப்பது பாராட்டுக்குரியது. எனது வாழ்விணையர் மோகனா அவர்கள் டேவிட் செல்லத்துரை குடும்பத்தாரை பார்க்கும்போதெல்லாம் நலம் விசாரித்து குழந்தைகள் என்ன படிக்கிறார்கள் என விசாரித்து அன்போடு பழகுவார். அவர் வருவதாக இருந்தார். சில தவிர்க்க முடியாத காரணங்களால் வர இயலவில்லை. வாழ்த்துகளை தெரிவிக்கும்படி கூறினார்.
கொள்கை பாசத்தோடு இருக்கக் கூடிய இந்த வாழ்க்கை இணை ஏற்பு விழாவில் பங்கேற்பதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். என குறிப்பிட்டார்.
மேலும் தமது உரையில், தந்தை பெரியார் 1933ஆம் ஆண்டு தனது துணைவியார் நாகம்மையார் இறந்த மறுநாளே திருச்சியில் நடைபெற இருக்கும் மணவிழாவிற்கு புறப்பட்டார். திருச்சியில் கிறித்துவ மதத்தை சேர்ந்த மணமக்களுக்கு தந்தை பெரியார் மணவிழா நடத்தி வைப்பதற்கு ஒப்புக்கொண்டு அதற்காக வந்தார். அப்போது திருச்சியில் ஒரு பாதிரியார் மணவிழா நடத்த எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையிலே புகார் கொடுத்துள்ளார். பெரியார் இந்த மணவிழாவினை நடத்தி வைக்க கூடாது. நடத்தினால் கைது செய்ய நேரிடும் என தந்தை பெரியாரிடத்திலே காவல் துறையினர் கூறி மணவிழா நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தந்தை பெரியார் அவர்கள், மணமக்கள் சுயமரியாதை முறைப்படி நான் இந்தத் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என விரும்புகின்றனர். அதற்கு நான் ஒப்புக்கொண்டுள்ளேன் என கூறி அந்த மணவிழாவினை நடத்தி வைத்தார். காவல் துறையினர் பின்னர் கைது செய்தனர். ஆனால் இன்றைக்கு நாங்கள் நடத்தக்கூடிய சுயமரியாதை திருமண விழாவிலே பல்வேறு பாதிரியார்கள் வந்து பங்கேற்று வாழ்த்துகின்றனர். இது தான் தந்தை பெரியார் கொள்கைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று மேலும் பல கருத்துகளை விளக்கி உரையாற்றினார் தமிழர் தலைவர். மணமகனின் பாட்டி செல்லத்தாய் (வயது 98) அவர்களுக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி சால்வை அணிவித்து பாராட்டினார்.
நிறைவாக மாவட்ட தலைவர் டேவிட் செல்லத்துரை நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிக்கு தென் மாவட்ட பிரச்சார குழு தலைவர் தே.எடிசன்ராசா, உள்ளிட்ட பல்வேறு மாவட்ட ஒன்றிய கழக தோழர்கள், தோழியர்கள் பெருமளவில் வந்து பங்கேற்றனர்.
------------------------"விடுதலை” 20-1-2010
0 comments:
Post a Comment