ஒரு முட்டுச் சந்தில் ராஜபக்சே!
இலங்கை அதிபர் ராஜபக்சே ஒரு முட்டுசந்தில் நின்றுகொண்டு தடுமாறிக் கொண்டிருக்கிறார் என்பது உண்மை.
தமிழர்களைப் பூண்டோடு ஒழித்துவிட்டோம்; இனி நமக்கு எதிர்ப்பு என்பது இல்லவே இல்லை என்று மார்தட்டிக் கொண்டு கற்பனை வானத்தில் பறந்துகொண்டிருந்த ராஜபக்சேவுக்கு அவர் பிறந்த இனத்திலேயே அதுவும் அவரிடமே, இராணுவத் தளபதியாகப் பணியாற்றிக் கொண்டிருந்த பொன்சேகா உருவில் கடும் சோதனை ஏற்படும் என்று சற்றும் எதிர்பார்த்திருக்கவே முடியாது.
அதிபர் தேர்தலில் அவரை எதிர்த்து முன்னாள் இராணுவத் தளபதி போட்டியிடுகிறார். முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே உள்பட ஆதரவு தெரிவித்துவிட்டனர். இலங்கைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களும் ஆதரவுக் கரத்தைத் தாராளமாகவே நீட்டி விட்டனர்.
கடந்த தேர்தலில்கூட தமிழர்கள் தேர்தலில் ஒதுங்கி நின்றதால்தான் ராஜபக்சே வெற்றி பெற முடிந்தது. இப்பொழுது அநேகமாக தேர்தல் வெற்றியின் முடிவு தமிழர்களின் வாக்குகளைப் பொருத்ததாகவே உள்ளது. பொன்சேகாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தமிழர்களின் கோரிக்கைகள் பலவற்றுக்கு உத்தரவாதம் அளித்துள்ளார். அதிகபட்ச பாதுகாப்புப் பகுதி என்ற பெயரில் இருக்கும் சோதனைச் சாவடிகளை அகற்றுவது, தமிழர்கள் பகுதிகளில் சிங்களவர்களின் குடியேற்றத்தைத் தடுப்பது, புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கி தமிழர்களுக்குச் சுயாட்சி தருவது, இவற்றை நிறைவேற்றித் தருவதாக பொன்சேகா கூறியுள்ளது மட்டுமன்றி, வடக்கு, கிழக்குப் பகுதிகளை இணைப்பது குறித்து பரிசீலனை செய்வதாகக் கூறியுள்ளாராம். இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது ஆதரவை அவருக்கு அளிக்க முன்வந்திருப்பது புத்திசாலித்தனமானதே!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் நிருபமா ராவைச் சந்தித்துப் பேசியிருக்கின்றனர்.
ஏற்கெனவே செய்த தவறுகளை மீண்டும் இந்தியா செய்யாமல் இருக்கவேண்டும்.
காலந்தாழ்ந்தாலும் உலகின் பல நாடுகள் இலங்கை ராஜபக்சே அரசின் மனித உரிமைகளுக்கு எதிரான ஈழத் தமிழர் அழிப்பைப் புரிந்துகொள்ளத் தலைப்பட்டுள்ளன.
குறிப்பாகவும், சிறப்பாகவும் அயர்லாந்து நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ராஜபக்சேயைக் கதிகலங்க வைத்திருக்கும் என்பதில் அய்யமில்லை.
அய்ரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் திரட்டிய பல உண்மைகள் (வீடியோ கேசட்டுகள் உள்பட) அயர்லாந்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு நடத்திய நிலையில் ராஜபக்சே ஒரு போர்க் குற்றவாளி என்று பகிரங்கமாக பிரகடனப்படுத்தி விட்டது. ஏற்கெனவே அய்.நா. மன்றத்தின்மூலம் அவர் போர்க் குற்றவாளி என்று அறிவித்துத் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தியா உள்பட சில நாடுகள் கட்டிக்கொண்ட ‘புண்ணியத்தின்’ காரணமாக அவர் தப்பினார் என்றாலும், பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட நேரிடுமே!
அந்த முறையில்தான் இப்பொழுது வசமாக மாட்டிக்கொண்டு இருக்கிறார். இனி ஒவ்வொரு நாடும் தர்ம அடி கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.
இது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கவேண்டும். இன்னொரு பக்கம் இலங்கை அதிபர் தேர்தலிலும் ராஜபக்சே தோற்கடிக்கப்பட்டு, புதிதாக அமையவிருக்கும் அரசு, ராஜபக்சேயை குற்றக் கூண்டில் நிறுத்தி, உரிய தண்டனையை வழங்கிடச் செய்யவேண்டும். இதன்மூலம் இதுபோன்ற கொலையாளிகள் அரசியல், ஆட்சித் தளத்திலிருந்து நிரந்தரமாக அப்புறப்படுத்தப்படவேண்டும். ராஜபக்சே பெறக்கூடிய தண்டனை உலக நாடுகளின் கண்களைத் திறக்கச் செய்யவேண்டும் என்பதே உலகம் முழுவதும் உள்ள மனிதநேய விரும்பிகளின் எதிர்பார்ப்பாகும்.
----------------------- “விடுதலை” தலையங்கம் 18-1-2010
0 comments:
Post a Comment